Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

`தனிமைப்படுத்தல்; திடீர் உடல்நலக் குறைவு!’ - மருத்துவமனை விரைந்த ஆளுநர் பன்வாரிலால்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தீயணைப்புப் படை வீரர்கள், சி.ஆர்.பி.எஃப் ஊழியர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், ராஜ்பவன் ஊழியர்கள் மேலும் 38 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆளுநருக்கு நெருக்கமாக பணிபுரிந்த ஊழியர்கள்.

பன்வாரிலால் புரோஹித்

அதில், ஒருவர் ஆளுநர் பன்வாரிலாலின் உதவியாளர். இதையடுத்து, கடந்த 29-ம் தேதி முதல் ஒருவாரத்துக்கு ஆளுநர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தனிமைப்படுத்திக் கொண்டு 3 நாள்கள் ஆன நிலையில், அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்குச் செல்வதே சிறந்தது எனப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

Also Read: ``பெண்கள் அரசியலுக்கு வர முதலில் குரல் கொடுத்தவர் பாரதியார்”- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

இதையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனைக்கு இன்று காலையிலேயே செல்ல முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தகவல் ஊடகங்களில் கசியவே, ராஜ்பவனில் பத்திரிகையாளர்கள் விசாரிக்கத் தொடங்கினர். இதையடுத்து, அரை மணி நேரம் தாமதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜ்பவனில் இருந்து கிளம்பி மருத்துவமனை சென்றார்.

ஆளுநர் பன்வாரிலால்

இதுகுறித்து ராஜ்பவன் வட்டாரத்தில் விசாரித்தோம். ``80 வயதான ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த சில நாள்களாகவே தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களோடு இருந்ததால், அவருக்கும் இன்னொரு முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று எண்ணி, அவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்’’ என்றனர். ஆனால், போலீஸ் வட்டாரத்தில், ``ஆளுநர் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்குச் செல்கிறார். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அதேநேரத்தில், அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படும்’’ என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tn-governor-banwarilal-rushes-to-chennai-hospital-after-illness

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக