Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

புதுச்சேரி: `இனி 2 மணி நேரத்தில் கொரோனா முடிவுகள்!’ - முதல்வர் நாராயணசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளும் குறைந்தபட்சம் தலா 300 படுக்கைகளை கொரோனா தொற்றாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் தற்போது படிப்படியாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் படுக்கைகளை கொடுத்து வருகின்றனர்.

கொரோனா

ஆனால், அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மட்டும் தேவையான படுக்கைகளை கொடுக்கவில்லை என புகார் வந்தது. அதனால் அந்த கல்லூரியை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்யும்போது அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால், மாநில அரசு தானாக முன்வந்து அந்த மருத்துவ கல்லூரிகளை கையகப்படுத்தி அங்குள்ள படுக்கைகள் முழுவதையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாற்றப்படும்.

முதல்வரின் கோவிட் நிவாரண நிதி மற்றும் மருத்துவத்துறை நிதியிலிருந்து தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கி வருகிறோம். தற்போது ’ட்ரூநாட்’ (Truenat) இயந்திரங்களை காரைக்கால், மாகே மற்றும் ஏனாமுக்கு அனுப்பப்பட இருக்கிறது. அதற்கு தேவையான 10 ஆயிரம் சிப்புகள் வாங்குவதற்காக ரூ.1.30 கோடிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறேன். அந்த இயந்திரம் மூலம் நாம் ஆய்வுக்கூடத்திற்கு செல்லாமல் 2 மணி நேரத்தில் கொரோனா முடிவை தெரிந்து கொள்ள முடியும்.

Also Read: புதுச்சேரி: `24 மணி நேரத்தில் 9 பேர்’ - தொடர் கொரோனா உயிரிழப்புகளால் திணறும் மக்கள்

அதேபோல ‘ஆண்டிஜென்’ (Antigen) கிட்டுகளும் வாங்கப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் கோவிட் தொற்று உள்ளதா என்பதை 30 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும். தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நியமிக்கவும், ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்படி, மருத்துவத்துறை அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக பாடுபடுகிறார்கள். எங்களால் முடிந்த வரை நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மக்களுக்கு பணி செய்து வருகிறோம்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-chief-minister-narayanasamy-informed-that-corona-reports-will-be-in-2-hours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக