Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சென்னை: `3 கொலைகள்; 51 வழக்குகள்' - ரவுடி சங்கர் என்கவுண்டர் பின்னணி

சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்திவருபவர் சரவணன் என்கிற சதீஷ். காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவரை கடந்த சில தினங்களுக்கு முன் அரிவாளால் ஒரு கும்பல் வெட்டியது. சரவணனை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகியானது. இதுதொடர்பாக அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீஸ் டீம் விசாரணை நடத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல ரவுடி சங்கர் எனத் தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் தேடிவந்தனர்.

சங்கர்

ரவுடி சங்கர், நீலாங்கரை பகுதியில் தலைமறைவாக இருக்கும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் சங்கரைப் பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆவடி நியூ ரோடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரவுடி சங்கர் போலீஸாரிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்ய ரவுடி சங்கரை போலீஸார் அழைத்துச் சென்றனர். இந்தச் சமயத்தில் முட்புதரில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை எடுக்கும்போது அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால், காவலர் முபராக்கை ரவுடி சங்கர் வெட்டியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், ரவுடி சங்கரைப் பிடிக்க முயற்சி செய்தனர்.

ஆனால் ரவுடி சங்கர், போலீஸார் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அதனால் இன்ஸ்பெக்டர் நடராஜ் துப்பாக்கி முனையில் அவரைப் பிடிக்க முயன்றார். அப்போது போலீஸ் டீமை அரிவாளால் ரவுடி சங்கர் வெட்டி தப்பிக்க முயன்றுள்ளார். அதனால் தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் நடராஜ், ரவுடி சங்கரை நோக்கி சுட்டுள்ளார். இதில் 2 குண்டுகள் அவரின் வயிற்றின் மேல்பகுதியில் பாய்ந்தன. அதில் சுருண்டு விழுந்த ரவுடி சங்கர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். உடனடியாக அவரையும் வெட்டு காயமடைந்த முபராக்கையும் மீட்ட போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

என்கவுன்டர் நடந்த இடம்

மருத்துவமனையில் ரவுடி சங்கர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காவலர் முபராக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த என்கவுண்டர் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் மனோகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். என்கவுண்டர் நடந்த இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று உயரதிகாரிகள் இன்ஸ்பெக்டர் நடராஜிடம் விசாரித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடி துரைமுத்துவைப் பிடிக்கச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் சுப்பிரமணி உயிரிழந்தார். அடுத்து வெடிகுண்டு வெடித்ததில் சிகிச்சை பலனின்றி ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார். காவலர் சுப்பிரமணியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி திரிபாதி கலந்து கொண்டார். ரவுடியால் காவலர் சுப்பிரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்தது. ரவுடிகளைப் பிடிக்கச் சென்றபோது காவலர் சுப்பிரமணி தற்காப்புக்காக எந்தவித ஆயுதங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

காவலர் சுப்பிரமணி

இந்தச் சூழலில்தான் தலைநகர் சென்னையில் ரவுடி சங்கரைப் பிடிக்க போலீஸார் துப்பாக்கியோடு சென்றனர். போலீஸாரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டியதும் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியிருந்து சென்ற குண்டுகள் துளைத்து சங்கர் பலியாகியுள்ளார். ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 51 வழக்குகள் சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

ரவுடி சங்கரின் குற்றப்பின்னணி குறித்து நம்மிடம் விரிவாக விவரித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னை அயனாவரம், கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (48).

இவருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் இருந்தது. அந்த மோதல்தான் சங்கரை ரவுடியாக்கியது. கஞ்சா விற்பனையிலும் ரவுடி சங்கர் கோலோச்சினார். மாமூல், அடிதடி, கொலை முயற்சி. கொலை என அடுத்தடுத்து சங்கர் மீது வழக்குகள் பதிவாகின. 1996-ம் ஆண்டு சங்கர் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. 2010-ம் ஆண்டு ஒரு கொலை, 2013-ம் ஆண்டு அடுத்த கொலை, 2017-ம் ஆண்டு 3-வது கொலை என 3 கொலை வழக்குகள் ரவுடி சங்கர் மீது பதிவானது.

ரவுடி சங்கர்

Also Read: சென்னை : மருமகனுக்கு பதிலாக மாமனார் கொலை! - சிறைக்குச் சென்றதால் உயிர் தப்பிய ரௌடி

2007-ம் ஆண்டு ரவுடி சங்கரை அவரின் எதிர்தரப்பு கொலை செய்ய முயற்சி செய்தது. ஆனால் அதிலிருந்து அவர் தப்பினார். ஆனால், 2009-ம் ஆண்டு சங்கரின் தம்பி கொலை செய்யப்பட்டார். பின்னர் அயனாவரத்திலிருந்து அவர் தலைமறைவாகினார். எதிர்தரப்பைச் சேர்ந்தவரின் தம்பியை சங்கர் தரப்பு கொலை செய்தது. இதில் ஆத்திரமடைந்த சங்கரின் எதிர்தரப்பு, சங்கரின் சித்தப்பாவை 2010-ம் ஆண்டு கொலை செய்தது. சங்கரின் வழக்குகளில் ஆஜராகிவந்த வழக்கறிஞரும் கொலை செய்யப்பட்டார். தம்பியை கொலை செய்த திருமுல்லைவாயலைச் சேர்ந்த பிரபல ரவுடி யமஹா பாலாஜியை ரவுடி சங்கர் தரப்பு கொடூரமாக கொலை செய்தது. அந்தச் சம்பவத்துக்குப்பிறகுதான் ரவுடி சங்கரின் இன்னொரு முகம் வெளியில் தெரிந்தது. திருமண மண்டபத்தில் இருந்த யமஹா பாலாஜியின் தலையிலேயே வெட்டி கொலை செய்யப்பட்ட பிறகு, அரிவாள் அவரின் தலையிலேயே வைக்கப்பட்டிருந்தது" என்றார்.

ரவுடி சங்கரை இளநீர் சங்கர் என ரவுடிகள் வட்டாரத்தில் அழைப்பதுண்டு. இதற்கு சங்கரின் அம்மா இளநீர் விற்றதால் அவருக்கு இந்தப் பெயர் வந்துள்ளது. ஆனால் போலீஸாரை பொறுத்தவரை அயனாவரம் சங்கர் என்று அழைக்கப்பட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/reason-behind-the-chennai-rowdy-sankar-encounter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக