Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

2019-20 நிதியாண்டில் ₹ 2000 நோட்டையே அச்சிடாத ரிசர்வ் வங்கி... அறிக்கையில் தகவல்!

இந்தியாவில் 2016-ம் ஆண்டு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, புதிய ரூ. 200, ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. பணமதிப்பிழப்பு தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு, நிலைமை சாதாரணமானது. இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்பாட்டில் புழங்கவில்லை எனக் கூறப்பட்டது. இதுதொடர்பான புதிய தகவல் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையில் 2019-20 நிதியாண்டில் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் ஒன்றுகூட அச்சிடப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டன. மக்கள் மத்தியில் இந்த ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் 2019-2020-ம் நிதியாண்டில் புதிதாக ரூபாய் 2000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூபாய் 2000 நோட்டுகளின் புழக்கம் 33,632 லட்சமாக இருந்தது என்றும் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூபாய் 2000 நோட்டுகளின் புழக்கம் 27,398 லட்சமாகக் குறைந்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதனையா... சறுக்கலா? மூன்றாண்டுப் பார்வை! #Demonetisation

புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகளின் அளவு 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 2.4 சதவிகிதமாக இருந்துள்ளது. இந்த சதவிகிதம் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்த அளவைவிட சுமார் 3.3 சதவிகிதம் குறைவு. மதிப்புகளின் அடிப்படையில் குறிப்பிடுகையில், இந்த நோட்டுகளின் பங்கு 2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில் சுமார் 22.6 சதவிகிதம் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் இறுதியில் இந்த பங்கு 37.3 சதவிகிதமாக இருந்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை இத்தகைய நிலையில் இருக்க, மறுபுறம் ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500 நோட்டுகளின் அளவு மற்றும் மதிப்பு ஆகியவை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டு

மக்கள் மத்தியில் இந்த ரூ. 500 மற்றும் ரூ. 200 நோட்டுகள் அதிகளவில் புழங்குவதாகவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ரிசர்வ் வங்கி 1,463 கோடி ரூ. 500 நோட்டுகளை அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, ரூ. 200, ரூ. 100, ரூ. 50, ரூ. 20 மற்றும் ரூ.10 ஆகிய நோட்டுகளும் வழக்கம்போல புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடர்பான நெருக்கடிக்குப் பின்னர், ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகரித்துள்ளதாகவும் இந்த நெருக்கடியால் நோட்டுகளை அச்சிடுவதற்கு சிறிது தாமதமானதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



source https://www.vikatan.com/business/finance/rbi-didnt-print-rs-2000-notes-in-2019-20-financial-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக