வேகப்பந்து வீச்சாளர்களும் ஸ்பின்னர்களும், விக்கெட் எடுத்த விகிதம், இத்தொடரில் இதுவரை 37 : 9 ஆக இருந்தாலும், இந்தப் போட்டிக்கு மைதானம் பேட்டிங்கோடு, சுழலுக்கும் ஒத்துழைக்கும் என்ற பிட்ச் ரிப்போர்ட் நாணய சுழற்சியிலும் எதிரொளித்தது. டாஸை வென்ற கௌசிக் காந்தி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஸ்பின்னர் அருணை வெளியேற்றி, மீடியம் பேஸ் பௌலரான ஜெகன்நாத்தைத் தேர்ந்தெடுக்க, அவர்களுக்கு நேர் எதிராக, வேகப்பந்து வீச்சாளர் நிரஞ்சனுக்கு பதிலாக, சுழலுக்காக ஹரீசை நெல்லை சேர்ந்திருந்தது. இது சுவாரஸ்யமான ஸ்ட்ராடஜியாகப் பார்க்கப்பட்டது. பெண் அம்பயராக, தனது டெபுட்டுக்காக, ஜனனி இறங்கி இருந்தது, கவனத்தை ஈர்த்தது.
ஜெகதீசனோடு கௌசிக் இறங்க, டிஎன்பிஎல்லில் இவ்விருவருமே 1000 ரன்களைக் கடந்திருப்பதால், அது நெல்லைக்கு நெருக்கடி தருமென்ற தோற்றம் உருவானது. அஜித் குமாரின் ஓவரில், ஜெகதீசன் அடித்த இரண்டு பவுண்டரிகளும் அதைத்தான் உறுதி செய்தன. ஆனால், அதிசயராஜ் தான் வீசிய இரண்டாவது ஓவரில் இரட்டைத் தாக்குதலை நிகழ்த்தினார். கௌசிக்கிற்கு தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி, அவரை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியதோடு, மறுபடியும் ஒரு ஷார்ட் பாலால் புல் ஷாட் ஆடத் தூண்ட, அது டாப் எட்ஜாகி பாயிண்டில் இருந்த சூர்யப் பிரகாஷை அடைந்தது. கௌசிக் ஒரு ரன்னோடு வெளியேற, அடுத்து வந்த சுஜய்யையும் சந்தித்த ஒரே பந்தோடே வெளியேற்றினார் அதிசயராஜ்.
சதீஷ் வந்து ஜெகதீசனோடு இணைந்தார். தொடக்கத்தில், ரன்களை நிதானமாகச் சேர்த்தார் ஜெகதீசன். அதிரடிக்கும் எனக்கும் பல மைல் தூரமென மெதுவாகத்தான் தொடங்கினார். ஆனால், போகப் போகத்தான் பௌலர்களை நையப் புடைத்தார். பவர் பிளேயின் முடிவில், 33/2 என சுமாராகவே ஆடியிருந்தது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.
அபரஜித், எட்டாவது ஓவரில் ஹரீசைக் கொண்டு வர ஆர்ம் பாலினால் சதீஷை ஆட்டமிழக்கச் செய்தார் ஹரீஸ். புதிதாய் உருவான ஜெகதீசன் - சசிதேவ் கூட்டணி, சற்று அதிக நேரம் தாக்குப் பிடித்தது. ரன்களும் இந்தச் சமயத்தில்தான் துரிதமாகச் சேரத் தொடங்கின. 48 பந்துகளில், அரைசதம் அடித்தார் ஜெகதீசன். இதன்பிறகு இவர்களது ஆட்டத்தில் சூடேறத் தொடங்கியது. ஆபத்தான இக்கூட்டணியை முறிக்க, அபினவ் கொண்டு வரப்பட, வீசிய முதல் பந்திலேயே சசிதேவ்வை அவர் வெளியேற்ற, சோனு யாதவ் உள்ளே வந்தார்.
சோனு வந்ததும் அவருடைய சகோதரரான சஞ்சய் யாதவ்வைக் கொண்டு வந்தார் அபரஜித். சகோதரர்களுக்கு இடையேயான இந்த மோதல் சுவாரஸ்யமாக இருந்தது. சந்தித்த மூன்று பந்துகளில் மூன்று ரன்களை அடித்த சோனு, கடைசிப் பந்தை சிக்ஸராக்கி பதிலடி கொடுத்து, இருவரும் சிரிப்பைப் பரிமாறிக் கொண்டது ரசனைக்குரியதாக இருந்தது.
அதற்கடுத்து வந்த அபினவ்வின் ஓவரில், ஜெகதீசன் இரண்டு அடுத்தடுத்த சிக்ஸர்களை விளாச, அத்துடன் ஐந்து வொய்டுகள், ஒரு பவுண்டரி, சோனுவின் ஒரு விக்கெட் என 23 ரன்களோடு கலகலப்பாக இருந்தது அந்த ஓவர். இதன்பின், ஹரீஸ் குமாரின் விக்கெட்டையும் நெல்லை தூக்கினாலும், ஜெகதீசன் மறுபுறம் அசுர வேகத்தில் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். ஓவருக்கு ஒன்றென சிக்ஸர்களை விளாசிக் கொண்டிருந்தார்.
ஆனாலும், ஒரு சமயத்தில், முதல் பந்திலிருந்து களத்தில் நின்றதால், ஒரு கட்டத்தில் சேப்பாக்கத்தின் வெப்பத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான ஜெகதீசன், ஷாரூனின் பந்தை மிஸ் செய்ய அது ஸ்டம்பைக் காலி செய்தது. அவர் 70 பந்துகளில் 95 ரன்களோடு வெளியேறினார். தொடக்கத்தில், 36 பந்துகளில் 30 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்த ஜெகதீசன், அதற்கடுத்த 34 பந்துகளில் 65 ரன்களை விளாசியிருந்தார். தனது சூப்பர் ஷாட்களால், தனது ரன்களோடு அணியின் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்திக் காட்டினார். அதேபோல், ஜெகனாத் கடைசி ஓவரில் அடித்த ஹாட்ரிக் பவுண்டரிகள் ஸ்கோரை 165-க்கு எடுத்து வந்துவிட்டது.
டிஎன்பிஎல்லில் இருந்து, ஐபிஎல் வரை நீண்டுள்ள ஜெகதீசனின் பேட், தற்போது, சர்வதேசக் கிரிக்கெட் அரங்கக் கதவையும் சத்தமாகத் தட்டியுள்ளது.
ஜெகதீசனுக்கு அடுத்தபடியாக, இரு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில், அதுவும் 19 மற்றும் 20 ரன்களைச் சேர்ந்திருந்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தோடே ஆட்டமிழந்திருந்தனர். முதல் இரண்டு விக்கெட்டுகளை வெகு விரைவில் காலி செய்த நெல்லை, அதன் பிறகு மிரட்டலாகப் பந்து வீசவுமில்லை, அட்டாக்கிங் ஃபீல்டிங்கும் செட் செய்யவில்லை. அதுவே, அவர்களுக்குரிய இலக்கை, தூரமாய்த் தள்ளிப் போட்டது.
கடின இலக்கை கருத்தில் கொண்டு இறங்கிய நெல்லை, பவுண்டரியைத்தான், ஸ்கோர் போர்டில் முதல் முதலீடாக்கியது. அபரஜித்தும், சூர்யப் பிரகாஷும் அதிரடியாகவே ஆரம்பித்தனர். மூன்றாவது ஓவரிலேயே சூர்யப் பிரகாஷின் விக்கெட்டை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆறுதல்பட்டுக் கொண்டதே ஒழிய, பவர்பிளேவுக்கு உள்ளாகவே பத்து பவுண்டரிகளைச் சேர்த்து விட்டது நெல்லை.
ஒன்டவுனில் உள்ளே வந்திருந்த பிரதோஷும், அபரஜித்தும் அற்புதமாக ஆடத் தொடங்கினர். சேப்பாக் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போன போட்டியைப் போல, கை கொடுக்கவில்லை. ஸ்விங், லேட்டரல் மூவ்மெண்ட், பவுன்ஸ் என எதுவுமில்லை. எனினும், விக்கெட்தான் விழவில்லையே ஒழிய, ரன்கள் ஏறுவதைக் கட்டுப்படுத்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். அவர்களது ஃபீல்டிங் முயற்சிகளும் மிகச் சிறப்பாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லாம், பத்துக்கு புள்ளி ஒன்று மட்டுமே கூடக் குறைய என நகர்ந்து கொண்டிருந்த ரன்ரேட்டை முதலில் எட்டுக்குக் கீழே இறக்கியது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
தனது ஃபிளிக் ஷாட்கள், கவர் பவுண்டரிகளோடு, நேர்த்தியாக ஆடிய பிரதோஷ், 41 பந்துகளில் அரைசதம் அடிக்க, ரன்ரேட் தடுமாறுவதை உணர்ந்த அபரஜித், அந்த ஓவரிலிருந்து அடித்து ஆடத் தொடங்கினார். 41 பந்துகளில், ஓவர் த லாங் ஆனில் அடித்த சிக்ஸரோடு, அவரும் அரை சதம் கடந்தார். எனினும், அவருக்கு அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்பிலேயே தொடர்ந்து பந்து வீசியது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ். அதற்கு பலியாகி 55 ரன்களோடு அபரஜித் வெளியேறினார். விக்கெட்டுகள் கைவசமிருந்தாலும், போட்டியின் கைப்பிடியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கைப்பற்றி விட்டதாகவே தோன்றியது. அதற்கு இன்னொரு காரணம், சேப்பாக்கின் கட்டுக்கோப்பான பௌலிங்கும், ஃபீல்டிங்கும்தான்.
வெறும் 24 பந்துகளில், 43 ரன்கள் தேவை என்ற நிலையில், ஓப்பனர் பிரதோஷோடு, சஞ்சய் இணைந்தார். ஷார்ட் பால்களால், தேவ் ராகுல் டாட் பால்களைக் கொடுத்து அழுத்தமேற்ற முயல, சஞ்சய் அதிலேயே சிக்ஸரை அடித்து அழுத்தத்தை அவர் மீதே எதிரொளிக்கச் செய்தார்.
Also Read: TNPL: கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்ஷன் எடுத்த மாஸ்டர் கிளாஸ்... திருச்சியைச் சுலபமாக வென்ற கோவை!
இரண்டு ஓவர்களில், 21 ரன்கள் தேவைப்பட, சகோதரர் சஞ்சய்யைக் கவனிக்க சோனுவை இறக்கினார் கௌசிக். அவரை சகோதரப் பாசத்தோடு, சிக்ஸரோடு, சஞ்சய் கவனிக்க, 15 ரன்கள் அந்த ஓவரிலேயே வந்துவிட, கடைசி ஓவரில் ஆறு ரன்கள் தேவை என வந்து நின்றது.
கயிறு இழுக்கும் போட்டியாக, இருபக்கமும் மாறி மாறி போய்க் கொண்டிருந்தது, வெற்றி. கடைசி ஓவரை வீச தேவ் ராகுல் வந்தார். முதல் பந்தில், வீசப்பட்ட லோ ஃபுல் டாஸ் பாலை சிங்கிளாக மாற்றி ஸ்ட்ரைக்கை பிரதோஷிடம் தந்தார் சஞ்சய். இரண்டாவது பந்து டாட் பாலாக, மூன்றாவது பந்தில், பிரதோஷின் விக்கெட் விழுந்து ரசிகர்களின் கை நகங்கள் எல்லாவற்றையும் காலி செய்தது. இறுதி மூன்று பந்துகளில், ஐந்து ரன்கள் தேவை என்ற நிலையில், பதற்றம் சூழ்ந்தது எங்கும். அதே பதற்றம், அடுத்த பந்தை வொய்டாக தேவ் ராகுலை வீசவைக்க, நான்காவது பந்தை, பவுண்டரி லைனைத் தாண்ட வைத்த இந்திரஜித், அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெல்ல வைத்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸின் சிறப்பான பௌலிங் மற்றும் ஃபீல்டிங்கையும் மீறி, வெற்றிக் கோட்டைத் தாண்டித் தடம் பதித்தது நெல்லை. என்றாலும், சேப்பாக் சூப்பர் கில்லீஸும், அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுக்கவில்லை. நெல்லையோ சென்ற போட்டியில் சந்தித்த மோசமான தோல்வியில் இருந்து, மீண்டு வந்து, இப்போட்டியில் கடைசி ஓவர் வரை திருப்பங்களைச் சந்தித்து, அபாரமாக தங்களது முதல் வெற்றியைப் பெற்றது.
வலுவான அணியாக பேப்பரில் காணப்படும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தோல்வியைச் சந்தித்துள்ளது. நாளின் முடிவில், டி20-யின் அழகே அதுதானே?!
source https://sports.vikatan.com/cricket/tnpl-nellai-royal-kings-beat-chepauk-super-gillies-in-a-last-over-thriller
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக