மஞ்சள் காமாலைக்கான சிகிச்சையில் இருப்பவர்களும் பத்தியம் இருப்பவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
- கலைராஜன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் தீபக் சுப்ரமணியன்.
``Jaundice எனப்படும் மஞ்சள் காமாலையை பலரும் ஒரு நோய் என நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியல்ல. அது ஓர் அறிகுறி. சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் ரத்தசோகை மாதிரி மஞ்சள் காமாலையும் ஓர் அறிகுறி, அவ்வளவே. அது ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம்.
மஞ்சள் காமாலையில் மெடிக்கல் ஜாண்டிஸ், சர்ஜிகல் ஜாண்டிஸ்; இப்படி பல வகை உண்டு. கல்லீரல் பாதிப்பால் வருவது மெடிக்கல் ஜாண்டிஸ். பித்தப்பை பாதையில் அடைப்பு காரணமாக வருவது சர்ஜிகல் ஜாண்டிஸ். சிலருக்குப் புற்றுநோய் பாதிப்பால்கூட ஜாண்டிஸ் வரலாம். குறிப்பாக கணையப் புற்றுநோய்.
ஒரு நபருக்கு தற்சமயம் மஞ்சள் காமாலை இருக்கிறது என்றால் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அந்த நபருக்கு முன்பு ஜாண்டிஸ் வந்து, அதிலிருந்து குணமாகிவிட்டார் என்றால் கொரோனா தொற்றுக்கெதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்க வேண்டாம். தாமதிக்காமல் போட்டுக்கொள்ளலாம். முற்றிலும் குணமாகாதவர்களுக்குத் தான் அதன் காரணத்தைப் பொறுத்து, மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கேற்ப தடுப்பூசியைத் திட்டமிட வேண்டும்.
Also Read: Covid Questions: நம்பிக்கை அளிக்கும்படி கொரோனாவுக்கு புதிய மருந்துகள் ஏதேனும் விரைவில் வருமா?
புற்றுநோயால் ஜாண்டிஸ் பாதிப்புக்குள்ளானோருக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். இவர்கள் இம்யூனோசப்ரெஸ்டு வகையில் வருவார்கள். இவர்கள் மட்டும் தமக்கு சிகிச்சையளிக்கிற புற்றுநோய் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சாதாரண மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு இது பொருந்தாது. மஞ்சள் காமாலையிலிருந்து குணமானவர்கள் இரண்டு வாரங்கள் மட்டும் இடைவெளிவிட்டு, அதன் பிறகு கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். பத்திய உணவு சாப்பிடுபவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இரண்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
பொதுவாகவே நம் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும்படியான பாதிப்புகள் இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்வதைப் பற்றி யோசித்து முடிவெடுக்க வேண்டும். மற்ற எல்லோரும் அவசியம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/a-person-who-undergoing-treatment-for-jaundice-can-take-covid-19-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக