Ad

வெள்ளி, 2 ஜூலை, 2021

தஞ்சாவூர்: கிடைக்காத 'கஜா' புயல் நிவாரணம்; வீடின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளி!

ஒரத்தநாடு அருகே விவசாய கூலித் தொழிலாளி ஒருவர் கஜா புயலில் வீடு இடிந்து விழுந்து தன் அண்ணன் உயிரிழந்த நிலையில் அரசு அறிவித்த நிவாரணப் பணம் கிடைக்காமல் இரண்டு வருடங்களாக அலைந்து வருகிறார். ஆதரவுக்கு யாரும் இல்லை குடியிருந்த வீடும் கட்டாந்தரையாக மாறிக் கிடக்க வறுமைக்கிடையே அரசின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும் துயருடன் கடந்து வருவது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கஜா புயலில் இடிந்த வீடு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (43) விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய அண்ணன் சுரேஷ் பெற்றோர் இறந்த நிலையில் இருவரும் ஒன்றாக ஆம்பலாப்பட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான ஓட்டு கட்டட வீட்டில் வசித்து வந்தனர்.சிவக்குமார் விவசாய வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் 2018-ல் வீசிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களை களைத்துப் போட்டது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை,பேராவூரணி பகுதிகளில் பெரும் பெருளாதார இழப்பை ஏற்படுத்திச் சென்றது.

ஒரே இரவில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். வீடு இடிந்து விழுந்ததிலும், மரம் முறிந்து விழுந்ததிலும் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் புயலின் கோரப்பசிக்கு பலியாகின. புயல் வீசி இரண்டு வருடங்களைக் கடந்துவிட்ட நிலையிலும் அவை ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் இன்றளவும் அழியாத சுவடாகவே இருந்து வருகிறது.புயலில் சிவக்குமாரின் ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் இருந்த அண்ணன் சுரேஷ் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். கஜா புயலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அப்போதைய அரசு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கியது. சுரேஷ் குடும்பத்திற்கு அந்த நிவாரணப் பணம் கிடைக்கவில்லை. ஆதரவாக இருந்த அண்ணனும் இறந்து விட்டார். வசித்து வந்த வீடும் இடிந்து விழுந்த பிறகு கட்டாந்தரையாக மாறிவிட்டது.

வீடு இருந்த இடத்தில் சிவக்குமார்

வருமானத்திற்கு வழியில்லை வாழ்வதற்கும் வீடில்லை.இது போன்ற சூழலில் அரசு அறிவித்த நிவாரணப் பணத்திற்காக நடையாக நடந்து கொண்டிருக்கிறார் சிவக்குமார். பக்கத்து வீட்டுத் திண்ணை, கோயில், பள்ளிக்கூடம் என மாறி மாறி இருந்து ஒவ்வொரு நாளையும் பெரும் துயரத்தோடு கடக்கிறார். நிவாரணப் பணம் மற்றும் அரசு சார்பில் உதவிகள் கிடைத்தால் மட்டுமே தனக்கு மறுவாழ்வு என துரத்தும் வறுமைக்கிடையில் போராடிக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து சிவக்குமாரிடம் பேசினோம், "என்னோட அப்பா செல்வம் நான் சின்ன பிள்ளையா இருக்கும்போதே இறந்துட்டார். அம்மா பாப்பாம்மாள் ஆறு வருஷத்துக்கு முன்னாடி விபத்துல சிக்கி இறந்துட்டாங்க. நானும்,அண்ணனும் ஒன்றாக வசித்து வந்தோம். நான் எந்த ஊர்ல விவசாயக் கூலி வேலை கிடைச்சாலும் போயிடுவேன். புயல் வீசுற அன்னைக்கும் பேராவூரணிக்கு வேலைக்கு போயிட்டேன். காத்து வீசும்ங்கறதால வீட்டுக்கு போகாம அங்கேயே தங்கிட்டேன்.

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு

அண்ணன் மட்டும் வீட்டுல இருந்தான். புயலை தாங்க முடியாத எங்க ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அதில் உள்ளே இருந்த அண்ணனுக்கு பலத்த அடிப்பட்டது. வீட்டை சுற்றியிருந்த மரங்களும் விழுந்தன. இதனால் வீட்டுப்பக்கம் அருகில் உள்ளவர்கள் யாரும் வருவதற்கு வாய்பில்லாமல் போனது. கிட்டத்தட்ட ரெண்டு நாள் பெரிய கற்கள், ஓடுகளுக்கு இடையே சிக்கித் தவித்தான்.

அதன் பிறகே வீடு இடிந்து விழுந்தது எல்லோருக்கும் தெரிய சாலைகள் மற்றும் வீட்டின் அருகே கிடந்த மரங்களை வெற்றி அகற்றி விட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து அண்ணனை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஓரளவிற்கு நிலைமை சீராகி நான் வீட்டுக்கு வந்தப்ப வீடு அப்பளம் போல நொறுங்கிக் கிடந்தன. நெஞ்சுல அடிச்சுக்கிட்டு அழுதேன் அண்ணன் பொழைச்சிடணும்னு வேண்டாத சாமியில்ல.

சிவக்குமார்

ஆனால் ஆச்பத்திரியில சேர்த்த அடுத்த நாளே அவன் இறந்துட்டான்.எனக்குனு இருந்த ஒரே ஆதரவு அவன் தான் அவனையும் இரக்கமில்லாத அந்த காத்து கொண்டு போயிடிச்சேனு அழாத ராத்திரிகள் இல்ல. அரசு அறிவித்த நிவாரண பணத்திற்கு எழுதிக் கொடுத்திருந்தேன். பணம் வந்த பிறகு வீட்டை கட்டலாம் என காத்துக் கெடந்தேன். அதற்காக அதிகாரிகள பாத்து நடையாய் நடந்து என்னோட நிலையை சொல்லுவேன். வாரிசு சான்றிதழ் வேணும் என சொன்னார்கள் நீதிமன்றம் மூலம் அதையும் வாங்கிக் கொடுத்துட்டேன்.

ஆனால் பணம் மட்டும் வந்து சேரவே இல்ல. அரசு அதிகாரிங்க அடிக்கடி வந்து விசாரிச்சுட்டு போகும்போது எனக்கு பணம் கிடைச்சிடும்னு நம்பிக்கை ஏற்பட்டு பின்னர் ஏமாற்றமாக மாறிவிடும். இப்படியே இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடி விட்டது. நிவாரணம் பணம் வந்தால் வீட்டை கட்டி விடலாம் என கனவு கண்டேன் இன்றளவிற்கும் கனவாகவே தொடர்கிறது. வீடு இருந்த இடம் அந்த சுவடே தெரியாத அளவிற்கு கட்டாந்தரையாக மாறி கெடக்குது. வர்ற வருமானம் வயித்துக்கே சரியா இருக்குது.

அரசு பள்ளியில் சிவக்குமார்

வீடு கட்டுற அளவுக்கு எங்கிட்ட சக்தியில்ல.எல்லாத்தையும் இழந்துட்டு நிக்குறதுனால முன்ன மாதிரி வேலைக்கும் போக முடியல. ராத்திரில பொது இடத்துல தூங்கி எந்திரிப்பேன். இப்படியே ஒவ்வொரு பொழுதும் கரையுது.து நடக்காத என்ற ஏக்கத்தோடு உயிர கையில பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.

அரசு அறிவிச்ச நிவாரணம் கிடைச்சிட்டா போதும் என் வாழ்க்கை மாறிடும். அரசு செய்யுற உதவியா இருந்தாலும் அத காலத்தோட செஞ்சா அதற்கான பயன் கிடைக்கும். எல்லாத்தையும் இழந்துட்ட நிக்குற என்னோட வலிய வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனக்கான வழியை அரசு சீக்கிரம் செய்யும்ங்கிற நம்பிக்கையோடே ஒவ்வொரு நாளும் எனக்கு விடியுது" என ஆற்றாமையுடன் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/in-thanjavur-a-farmer-still-didnt-get-gaja-cyclone-relief-fund-from-tamilnadu-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக