இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்து பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா? பூஸ்டர் டோஸ் பற்றி விளக்க முடியுமா?
- சாருலதா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.
``கோவிட் போன்ற புதிய தொற்றுகள் நம் உடலைத் தாக்கும்போது அதை எதிர்க்கும் நோய்த்தடுப்பு அணுக்கள் உடலில் இருக்காது. அந்த நோய் பாதிப்பிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள ஆன்டிபாடி எனப்படும் நோய்த் தடுப்பாற்றல் அணுக்கள் அவசியம். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான ஆன்டிபாடிக்களை நம் உடல் உருவாக்கும். அவை உருவாகும் தன்மையானது ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உடல் இயக்கத்துக்கும் ஏற்ப மாறுபடும்.
Also Read: Covid Questions: தைராய்டு பிரச்னை, சைனஸ் தொந்தரவும் உள்ளது; நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
கோவிட் தொற்றையே எடுத்துக்கொள்வோம். அதற்கு எதிராகப் போடப்படும் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக், மாடர்னா, ஃபைஸர் என நிறைய தடுப்பூசிகள் இருக்கின்றன. ஒவ்வொரு தடுப்பூசியையும் 1000 பேருக்கு போடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
அந்த 1000 பேருக்கும் வாரம் ஒருமுறை ரத்தத்தில் ஆன்டிபாடிக்களை பரிசோதிப்பார்கள். அந்த ஆன்டிபாடியின் அளவானது அதிகரித்துக்கொண்டே போக வேண்டும். அதைத்தான் `நியூட்ரலைஸிங் ஆன்டிபாடி சீரோ கன்வெர்ஷன்' என்று சொல்வோம். ஓரளவுக்கு உருவான அந்த ஆன்டிபாடி இருக்கும்வரை நமக்குப் பாதுகாப்பைத் தரும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, இந்த ஆன்டிபாடி அளவானது குறையத் தொடங்கும்.
Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?
இந்தக் கால அளவானது 2 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நபருக்கேற்றபடி மாறலாம். ஆன்டிபாடி குறையாமலிருக்க மீண்டும் ஒரு டோஸ் கொடுக்க வேண்டும். இதுதான் பூஸ்டர் டோஸ் எனப்படுகிறது. முதல் தவணையை பிரைமரி என்றும், இரண்டாவது தவணையை பூஸ்டர் என்றும்தான் சொல்ல வேண்டும். அது இரண்டாவது டோஸ் அல்ல.
இரண்டு தவணைகள் போடுவது போதுமானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. முதல் பூஸ்டர் போட்டதும் இரண்டாவது பூஸ்டருக்கான இடைவெளி எத்தனை நாள்கள் என்பதைக் கவனித்துக்கொண்டே வருகிறார்கள். பூஸ்டர் அவசியம் போட்டே ஆக வேண்டுமா என்றால், இந்த நோய் நம்மைவிட்டுப் போகும்வரை அல்லது இந்த நோய்க்கெதிரான முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்வரை பூஸ்டர் அவசியம் தேவைப்படும்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/news/healthy/will-we-need-third-dose-as-a-booster-dose-for-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக