கேரள மாநிலத்தில் கடந்த 2011 முதல் 2016 வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி முதல்வராக இருந்தார். அந்த சமயத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கு விஸ்வரூபம் எடுத்தது. உம்மன்சாண்டியுடன் சரிதா நாயரை இணைத்து பல தகவல்கள் வெளியாயின. சரிதா நாயரும், உம்மன்சாண்டிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது உம்மன்சாண்டிக்கு எதிராக எதிர்கட்சியான சி.பி.எம் பல போராட்டங்களை நடத்தியது. முன்னாள் முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தன், அந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
வி.எஸ்.அச்சுதானந்தன் 2013-ம் ஆண்டு ஒரு தனியார் தொலைகட்சியில் நேர்காணலில் கலந்துகொண்டு, ``முதல்வர் உம்மன்சாண்டி தனியாக ஒரு கம்பெனி உருவாக்கி ஊழல் செய்துவிட்டார்" என உம்மன்சாண்டியை கடுமையாக விமர்சித்தார். இது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்தனர்.
அன்றைய ஆளும் கட்சியான காங்கிரசுக்கு மேலும் பதிலடி கொடுத்த வி.எஸ்.அச்சுதானந்தன், "நான் சொல்வதில் உண்மை இல்லை என்றால் உம்மன் சாண்டி என் மீது வழக்குத் தொடரலாம்" என ஆவேசமானார். இதையடுத்து 2014-ம் ஆண்டு திருவனந்தபுரம் பிரின்சிபல் சப் கோர்ட்டில் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்தார் உம்மன்சாண்டி. தனக்கு எதிராக அவதூறு பேசியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருந்தார்.
அந்த வழக்கு சம்பந்தமாக 2019-ல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார் உம்மன்சாண்டி. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக உம்மன்சாண்டிக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. சோலார் வழக்கில் தன்னை விமர்சித்தவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் மிகவும் மகிழ்ச்சியடைந்த உம்மன்சாண்டி, "உண்மை வெற்றிபெற்றுள்ளது" என கூறியிருக்கிறார்.
அதே சமயம் சட்டப் போராட்டம் தொடரும் என வி.எஸ்.அச்சுதானந்தனின் வழக்கறிஞர் கூறியிருக்கிறார். சப் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சோலார் பேனல் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் உம்மன்சாண்டிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது, கேரள அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/kerala-court-judgement-in-favor-of-ummanchandi-in-defamation-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக