நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து மத்திய அமைச்சரவையில் இது வரையிலும் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்தாண்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் இடமும் காலியாக உள்ளதால் மொத்தத்தில் அமைச்சரவையை விரிவாக்கச் செய்யப் பிரதமர் மோடி கடந்த சில வாரங்களாக பாஜக தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நரேந்திர மோடியுடன் சேர்த்து தற்போது மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 53-ஆக இருக்கிறது ( மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர். தற்போது மொத்தம் அமைச்சரவையில் 28 காலி இடங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விரிவாக்கத்தில் பெண்கள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கும், இதுவரை வாய்ப்புகள் வழங்கப்படாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சிந்தியா, மகாராஷ்டிராவின் நாராயண் ரானே மற்றும் சார்பானந்தா சோனோவால் ஆகியோர் அமைச்சரவை ரேஸில் முன்னணியில் இருக்கின்றனர். அதே போல், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் தம்பி பசுபதி குமார் உள்ளிட்ட பலரும் டெல்லியில் முகாமிட்டு அமைச்சர் பதவிக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கின்றனர். மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தேசியளவில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மத்திய அரசு நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக 'கூட்டுறவு அமைச்சகம்' என்ற புதிய துறையை உருவாக்கியிருக்கிறது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் போது இந்த துறைக்கும் புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுறவு அமைச்சரகம் தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதன் மூலம் வளர்ச்சி என்ற தத்துவத்தைத் தொலைநோக்கு திட்டத்துடன் நடைமுறைப்படுத்த புதிதாகக் கூட்டுறவு அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. நாட்டின் கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள அமைச்சகத்துக்குத் தனி நிர்வாக அமைப்பும், சட்ட வடிவமும், கொள்கை வடிவமைப்பும் உருவாக்கப்படும். இதற்கென புதிய அமைச்சர் தனியாக நியமிக்கப்படுவார். இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தவும், அவற்றுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மேம்படுத்தவும் இந்த துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
சமுதாய அடிப்படையிலான வளர்ச்சியை உருவாக்குவதிலும், ஊக்குவிப்பதிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், கூட்டுறவுத்துறையில் எளிதாகத் தொழில் செய்யும் விதம் , மாநில கூட்டுறவு வளர்ச்சி ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு முறைப்படுத்த இந்த கூட்டுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி கூட்டுறவுத் துறைக்கு புதிய அமைச்சகம் என்று முறையாக அறிவிக்கப்பட்டு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/central-government-creates-a-new-ministry-named-ministry-of-cooperation-amid-ministry-expansion
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக