Ad

வெள்ளி, 2 ஜூலை, 2021

''பஞ்சமி நில மீட்புக்கு வேறு யாரும் பட்டா போடவேண்டாம்!''- வி.சி.க-வை சீண்டும் எல்.முருகன்!

'ஒன்றிய அரசு' சொல்லாடல் குறித்து தமிழக பா.ஜ.க-வினர் எழுப்பிவந்த சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் புதுச்சேரி யூனியன் பிரதேச ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்! புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பின்போது, 'இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு" என அழுத்தமாக உச்சரித்திருக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன். ஆனாலும் தமிழக அரசியலில், 'ஒன்றிய அரசு, ஜெய் ஹிந்த்' வார்த்தைகளை வைத்து நடைபெற்றுவரும் சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை!

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனை சந்திதேன்....

'''ஒன்றிய அரசு' என்று தி.மு.க-வினர் குறிப்பிட்டுப் பேசுவதில், பா.ஜ.க-வினருக்கு என்னதான் பிரச்னை?''

''ஒன்றிய அரசு என்ற வார்த்தைக்கான பொருளில் எந்தவித தவறும் இல்லை. ஆனால், தி.மு.க-வினர் இந்த வார்த்தையை அழுத்திச் சொல்வதில் ஒருவித உள்நோக்கம் இருக்கிறது.

மு.க.ஸ்டாலின்

கடந்த மே 2-ம் தேதி வரையிலுமே 'மத்திய அரசு' என்ற வார்த்தையைத்தானே தி.மு.க-வினர் பயன்படுத்தி வந்தனர். 1996-லிருந்து 2014 வரை மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகித்துவந்த போதும்கூட 'ஒன்றிய அரசு' குறித்தெல்லாம் இவர்கள் எதுவுமே பேசியதில்லையே! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' (Union of States) என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வார்த்தையை தி.மு.க-வினர் பயன்படுத்துகிற விதம்தான் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அதாவது தற்போதைய சூழலில், இந்த சொல்லாடலானது பிரிவினைவாதிகளுக்கு தி.மு.க-வினர் கைகொடுப்பதுபோன்ற ஒரு ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தையை சட்டமன்றத்திலேயே அவமதிக்கிற சூழல் நடந்திருக்கிறது. 'ஜெய் ஹிந்த்' எனும் வார்த்தையை முதன்முதலில் உச்சரித்தவரே தமிழரான செண்பகராமன் ஐயாதான். நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு, உயிர் நீத்த மாபெரும் தலைவர்களில் ஆரம்பித்து இன்றைக்கு நமது ராணுவத்தினர் வரை அனைவருமே 'ஜெய் ஹிந்த்' என்று பெருமையோடுதான் பேச்சையே தொடங்குவர். தேசப்பற்றை விளக்குகிற பெருமைமிகு வார்த்தையை இன்றைக்கு தி.மு.க-வினர் இழிவுபடுத்துகிற தொனியில் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.''

''ஒன்றிய அரசு வார்த்தையை தி.மு.க-வினர் உச்சரிப்பது அம்பேத்கரையே அவமதிப்பாக உள்ளது என எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்?''

''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'சென்ட்ரல் கவர்ன்மென்ட்', 'பாரத் சர்க்கார்' என்றெல்லாம் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் 'யூனியன் கவர்ன்மென்ட்' என்று குறிப்பிடப்படவில்லை; 'யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' என்றுதான் இருக்கிறது. எனவேதான் தி.மு.க-வினர் பயன்படுத்துகிற வார்த்தைப் பிரயோகம் சட்டமேதை அம்பேத்கரையே இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறேன். அதாவது, நிர்வாக வசதிக்காக மத்திய அரசால், பிரிக்கப்பட்டதுதான் மாநிலங்களே தவிர... மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியாவை உருவாக்கவில்லை!''

நரேந்திர மோடி

''ஒன்றிய அரசு என்ற வார்த்தைப் பிரயோகம், 'ஒரே நாடு' என்ற பா.ஜ.க-வின் கொள்கைக்கு நேர் எதிராக இருக்கிறது என்பதால்தானே பயப்படுகிறீர்கள்?''

''எங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது. தி.மு.க-வினரின் சொல்லாடலைத்தான் சந்தேகப்படுகிறோம். இவர்கள் நினைத்தால், 'வெளியே போய்விடலாம், வரலாம்' என்பதெல்லாம் கிடையாது. அது முடியவும் முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அதை அனுமதியாது. 'ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மக்கள்' என்பதுதான் எங்களுடைய எண்ணம். இதில், தி.மு.க-வைக் கண்டு நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை!''

Also Read: காட்பாடி: ரயிலில் வந்த பார்சல்; தப்பி ஓடிய கடத்தல் கும்பல்! - 42 கிலோ கஞ்சா பறிமுதல்

''ஆளுநர் தன் உரையின் இறுதியில், ' நன்றி வணக்கம்' என முடித்திருந்ததை தி.மு.க-வினர் வரவேற்றுள்ளனர். இதில் 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தையை இழிவுபடுத்திவிட்டனர் என எப்படிச் சொல்கிறீர்கள்?''

''ஆளுநர் தன் உரையின் முடிவில், 'ஜெய் ஹிந்த்' என்று சொல்லவில்லை. மாறாக 'நன்றி, வணக்கம்' என்றே முடித்திருக்கிறார். எனவே தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது என கொ.ம.தே.க தலைவர் சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால், 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தை தி.மு.க ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு பெரிய பயத்தைக் கொடுத்திருக்கிறதா?

பன்வாரிலால் புரோஹித்

தமிழரான செண்பகராமன் ஐயாதான் முதன்முதலில் 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தையே எழுப்பினார். 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தைக்கு 'வெல்க பாரதம்' அல்லது 'வாழ்க பாரதம்' என்றுதான் அர்த்தம். இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இயக்கம் 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தைத்தான் எழுப்பியது. நேதாஜியின் வழிவந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் 'ஜெய் ஹிந்த்' வார்த்தையைத்தான் பிரயோகப்படுத்தியிருக்கிறார். எனவே, தி.மு.க-வினரது செய்கையை தமிழக பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது. வரவிருக்கிற சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் தமிழக பா.ஜ.க இதுகுறித்த எங்கள் கண்டனத்தைத் தெரிவிப்போம்!''

Also Read: செங்கல்பட்டு: ஆபாச இணையதளங்களுக்கு அடிமை! - சிறுமி கொடூரக் கொலை வழக்கில் சிக்கிய சிறுவன்

''பஞ்சமி நில மீட்புக்காக, முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறது வி.சி.க. ஆனால், கடந்த காலத்தில், 'முரசொலி அலுவலக பஞ்சமி நில சர்ச்சை'யில் எல்.முருகன் அரசியல் மட்டும்தானே செய்தார்?''

''தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் என்ற பொறுப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனவே, இப்போதைய எல்.முருகனோடு, ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகனை தொடர்புபடுத்தக்கூடாது.

திருமாவளவன்

தமிழ்நாட்டில், எந்தெந்த மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இருக்கின்றன, அவற்றில் எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரங்களையெல்லாம் முறையாக ஆய்வு செய்து கணக்கெடுத்ததோடு, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்தவர் அப்போதைய துணைத்தலைவர் எல்.முருகன். அந்தவரிசையில்தான் முரசொலி இட விவகாரம் குறித்து வந்த புகாரையும் விசாரித்தறிந்தனர். எனவே, இதில் எந்தவித அரசியலும் கிடையாது.'பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்' என்பதை பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் சொல்லிவிட்டோம். ஆகவே, தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏழை எளிய மக்களுக்கான நிலத்தை மீட்டெடுத்து ஒப்படைக்கவேண்டும். எனவே, பஞ்சமி நில மீட்புக்காக வேறு யாரும் பட்டா போடவேண்டிய தேவையில்லை!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-bjp-leader-lmurugan-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக