மகாராஷ்டிரா சட்டமன்றதின் இரண்டு நாள் மழை காலக்கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் விபரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் சகன் புஜ்பால் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் நடத்தவேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரினர். ஆனால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், அவையை நடத்திய பாஸ்கர் ஜாதவ் 10 நிமிடம் ஒத்தி வைத்தார். இதனால் சபாநாயகரின் அறைக்கு சென்ற பாஜக உறுப்பினர்கள் சபாநாயகர் அறையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி பாஜக உறுப்பினர்கள் 12 பேரை ஒரு ஆண்டுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமைச்சர் அனில் பரப் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சஞ்சய் குதே, ஆசிஷ் ஷெலார், அபிமன்யுபவார், கிரிஷ் மகாஜன், அதுல், பராக் அலாவ்னி, ஹரிஷ் பம்பாலே, யோகேஷ் சாகர் உட்பட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் ஆவர். சஸ்பெண்ட் காலத்தில் 12 எம்.எல்.ஏ.களும் மும்பை மற்றும் நாக்பூர் சட்டமன்ற வளாகத்திகே வரக்கூடாது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், `எஞ்சிய கூட்டத்தை பாஜக ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி இது என்று குற்றம் சாட்டினார். பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவங்களால் அவையில் ஒரே அமளியாக இருந்தது. சட்டமன்ற கூட்டம் மேலும் ஒரு நாள் மட்டுமே நடக்க இருக்கிறது. இதில் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறும்படி கேட்க பாஜக முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே பாஜக, சிவசேனாவை எங்களின் எதிரி இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து தற்போது பாஜக மற்றும் சிவசேனா இடையிலான உறவு நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் இடையிலான உறவை போன்றது என்று சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சஞ்சய் ராவுத்திடம் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா எங்களது எதிரி கிடையாது என்று தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு, ``நாங்கள் இந்தியா-பாகிஸ்தான் அல்ல. எங்களது உறவு ஆமீர்கான் மற்றும் கிரண் ராவ் இடையிலான உறவைப்போன்றது. எங்கள்( சிவசேனா, பாஜக) வழிகள் வேறு வேறு. ஆனால் நட்பு தொடர்கிறது” என்று தெரிவித்தார்.
பாஜக பக்கம் சென்று விடுவது போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்தி அதன் மூலம் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சிவசேனா நெருக்கடியில் வைத்திருக்க நினைக்கிறது. அதனால்தான் பாஜகவுடனான எங்களது எங்களது நட்பு இன்னும் தொடர்வதாக பாஜக கூறிக்கொண்டிருக்கிறது. ஆமீர்கானும் அவரது மனைவி கிரண் ராவும் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர். ஆனால் விவாகரத்து செய்து கொண்டாலும் தொடர்ந்து நட்புடன் இருப்போம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
source https://www.vikatan.com/news/politics/12-bjp-mlas-suspended-for-one-year-in-maharashtra-assembly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக