வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த பட்ஜெட்டில் அனைத்துத் துறையினரும் பல்வேறு விஷயங்களை எதிர்பார்த்துவரும் நிலையில், பங்குச் சந்தை துறை சார்ந்தவர்கள் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, ஓரியன்டல் ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பங்குச் சந்தை நிபுணருமான வ.நாகப்பனிடம் பேசினோம்.
``பங்குப் பரிவர்த்தனை வரியை (எஸ்.டி.டி - Security Transaction Tax) நீக்க வேண்டும் என்பதே எங்களுடைய முதல் எதிர்பார்ப்பு. ஏனெனில், எஸ்.டி.டி கொண்டுவருவதால், நீண்டகால மூலதன ஆதாய வரியை நீக்குவதாக அறிவித்து அதன்படி நீக்கினார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நீண்டகால மூலதன ஆதாய வரியையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள். இதைக் கொண்டுவந்தவர்கள் எஸ்.டி.டி-யை நீக்கியிருக்க வேண்டும்.
Also Read: `100 ஆண்டுகளில் இந்தியா பார்த்திராத பட்ஜெட்!' - பட்ஜெட் 2020-21 குறித்து நிர்மலா சீதாராமன்
ஆனால், அப்படிச் செய்யவில்லை. தற்போது இரண்டு வரிகளும் நடைமுறையில் இருந்துவருகின்றன. முதலீடு செய்யும்போதும் வரி, லாபத்துக்கும் வரி என ஒரே தொகைக்கு இரண்டு வரி விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?
பங்குச் சந்தையில் ஒருவர் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து, அவருக்கு இழப்பு இருந்தால் அதை ஈடுசெய்து லாபத்துக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். ஆனால், எஸ்.டி.டி என்பது அப்படியல்ல; பங்குகளை வாங்கினாலும், விற்றாலும் வரி செலுத்த வேண்டும். அதனால், மறைமுக வரியாகக் கருதப்படும் எஸ்.டி.டி-யை நீக்குவதுதான் சரியாக இருக்கும். ஒருவேளை, எஸ்.டி.டி-யை நீக்க முடியாது; அப்படி நீக்கினால் அரசாங்கத்துக்கு அதிக அளவில் வரி வருமான இழப்பு ஏற்படும் என நினைத்தால், பழையபடி எஸ்.டி.டி தொகையைச் செலுத்த வேண்டிய வரியில் கழித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ஒரு நிறுவனம் தனக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை எடுத்து, முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் கொடுக்கிறது. இப்படி வழங்கும் டிவிடெண்டுக்கு `டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டாக்ஸ்’ (டி.டிடி) செலுத்திய பிறகு, குறைவான டிவிடெண்ட் தொகைதான் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கிறது.
ஒரு நிறுவனம் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி வரி செலுத்துகிறது; தவிர, அனைத்துச் செலவுகளுக்கும் ஜி.எஸ்.டி வரி செலுத்துகிறது. பொருளைத் தயாரித்து விற்கும்போதும் கிடைக்கும் லாபத்துக்கு வருமான வரி செலுத்துகிறது. இவ்வளவு வரி செலுத்திய பிறகும், கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டாகப் பிரித்துக் கொடுக்கும்போது மீண்டும் `டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டாக்ஸ்’ செலுத்த வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
இதனால்தான் இந்த வரி விதிப்பையும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நீக்க முடியாமல் போனால், இதையும் முதலீட்டாளர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியில் ஒரு லட்சம் ரூபாய் வரை கழித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, `சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' கொண்டுவரப் போவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று வரை அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கொரோனா பேரிடர் நேரங்களில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்குப் பணம் கிடைப்பதில்தான் சிக்கல் நிலவுகிறது. இது மாதிரியான நேரத்தில் `சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' கொண்டுவந்தால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தை வாயிலாக நிதி திரட்டுவதற்கு வசதியாக இருக்கும்.
அதாவது, தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தங்களை ஒரு நிறுவனமாக பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் மூலம் `சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' வாயிலாக ஐ.பி.ஓ வெளியிட்டு, அதன் மூலம் நிதியைத் திரட்டலாம். சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதால், திரட்டப்படும் நிதியை எந்தெந்த தேவைகளுக்கு அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் கட்டாயம் பதிவு செய்தாக வேண்டும். இதனால் சமூக அக்கறையுடன் நிதி வழங்குபவர்களுக்கும் சரியான நிறுவனத்துக்குத்தான் பணத்தை வழங்குகிறோம் என்கிற மனநிறைவும் கிடைக்கும்.
`சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' மூலம் லாபம் ஈட்ட முடியாது என்றாலும், புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள முடியும் என்பது நிச்சயம். அதோடு, கொரோனா நோய் தொற்று பரவலால், அரசின் மருத்துவம் மற்றும் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த நேரத்தில் இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசின் பொருளாதாரப் பளு குறையும்" என்றார் தெளிவாக.
இந்த பட்ஜெட் மூலம் நிதி அமைச்சரின் கருணைப் பார்வை பங்குச் சந்தையின் பக்கம் திரும்புமா என்று பார்ப்போம்!
source https://www.vikatan.com/business/budget/what-do-share-market-analysts-expecting-from-the-union-budget-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக