Ad

வியாழன், 19 அக்டோபர், 2023

'மோடி... அதானி; முறைகேடு புகார்' - அதிரடிக்கும் ராகுல்; ஆர்ப்பரிக்கும் கதர்கள்; நெருக்கடியில் பாஜக?!

கடந்த ஜனவரியில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' வெளியிட்ட அறிக்கையில், 'அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது. இதனால் இந்திய அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்தக் குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருக்கிறது' என தெரிவித்திருந்தது. இதை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், பா.ஜ.க அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர். குறிப்பாக பிரதமர், வெளிநாடுகளுக்கு பயணம் சென்றபோதெல்லாம் தொழிலதிபர் கௌதம் அதானியைக் கூடவே அழைத்துச் சென்றார் என புகைப்படமும் வெளியானது. இவற்றைக் கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டன.

அதானி - ஹிண்டன்பர்க்

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் உரை பாஜகவினருக்கு கிலியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில்தான் ராகுல் காந்திக்கு எதிரான சூரத் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. தொடர்ந்து அவரது பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க குறித்து அதிகமாக ராகுல் விமர்சனம் செய்ததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனாலும் பிரதமர், அதானி குறித்து விமர்சனம் செய்வதில் இருந்து ராகுல் பின்வாங்கவில்லை. இதற்கிடையில் டெல்லியில் இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி அடுத்த பரபரப்பு பட்டாசை கொளுத்திபோட்டிருக்கிறார். அது இந்திய அரசியலில் மீண்டும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"அதானி குழுமம் சந்தை மதிப்பை விட அதிகமாக கொடுத்து பல நூறு கோடி டாலர்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்திருப்பதை செய்தி நிறுவனம் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. இதனால் மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து அதானி குழுமம் ரூ.12,000 கோடியை சுருட்டியுள்ளது" என எடுத்த எடுப்பிலேயே அனலை கக்கியிருந்தார், ராகுல்காந்தி. தொடர்ந்து பேசிய அவர், "இந்தோனேசியாவில் இருந்து அதானி வாங்கிய நிலக்கரி இந்தியாவுக்கு வந்ததும், அதன் விலை இரட்டிப்பாகியுள்ளது. இது சாமானிய மக்களின் மின் கட்டணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, அதிக கட்டணத்தை அவர்கள் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

அதானி - பாஜக - மோடி

இதுபோன்ற ஒரு சம்பவம் உலகின் வேறுநாடுகளில் நடைபெற்றிருந்தால் அந்த அரசு கவிழ்ந்திருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் எந்தவொரு நடவடிக்கையும் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்படவில்லை. அதானி யாருடைய பாதுகாப்பில் இருக்கிறார்; அவரை பாதுகாக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் சாதிப்பது ஏன்? அவருக்கு நான் உதவி மட்டுமே செய்கிறேன். விசாரணையை உடனடியாக தொடங்கி பிரதமர் தனது நம்பகத்தன்மையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்" என கொதித்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் ராகுல் மீண்டும் அதிரடிக்க ஆரம்பித்துவிட்டார் என காங்கிரஸார் ஆர்ப்பரிக்கிறார்கள். மறுபுறம் பா.ஜ.க-வினரோ, 'ஊழல் இல்லாத ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம். தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் குற்றம்ச் சாட்டுகின்றன' என்கிறார்கள்.

துரை கருணா

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா, "I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நல்ல ஆட்சி தருவோம், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் என்ற வாக்குறுதிகள் கொடுக்கவில்லை. அவர்களின் ஒரே நோக்கம் பா.ஜ.க-வையும், மோடியையும் வீழ்த்துவதுதான். அதற்காக எந்த ஆயுதத்தையும் கையில் எடுப்பார்கள். இதை எதிர்கொள்ள பா.ஜ.கவும் தயாராக இருக்கிறது. அதானி, அம்பானியை வளர்த்தது காங்கிரஸ்தான். தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் தேர்தலை எதிர்கொள்ளும்போது கோடிக்கணக்கான ரூபாய் வேண்டும். அதற்கு தொழில் நிறுவனங்களிடம் தான் வசூல் செய்வார்கள். எனவே ராகுலின் இந்த பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது. பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்க தான் வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் மீது மாநில கட்சிகளுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. ராகுலின் பிரசாரமும் எந்த தேர்தலிலும் காங்கிரஸுக்கு வெற்றியை கொடுத்ததில்லை" என்றார்.

ப்ரியன்

மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேசுகையில், "இந்த குற்றச்சாட்டுக்களை ராகுல் காந்தி கூறவில்லை. பத்திரிகைகளில் வந்திருப்பதையும், ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையையும் மக்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்து வருகிறார். இதுபோன்ற தகவல்களை இந்திய பத்திரிகைகள் வெளியிடவில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் தான் தெரிவிக்கின்றன. அதைத்தான் ராகுல் கூறி வருகிறார். இதை தேர்தலுக்காக என்று சொல்வதை விட மக்களிடம் கொண்டு செல்கிறார். அவரை போல I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியின் தலைவர்கள் பேசுவது இல்லை. எனவே மோடி, அதானி மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை அனைத்து கட்சிகளும் எடுத்து பேச வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-heaps-complaints-on-adani-will-it-work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக