சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பழனி. வெளிநாடுகளில் இருந்து பர்னிச்சர் பொருட்களை இறக்குமதி செய்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். காரைக்குடியில் அறியப்படும் தொழிலதிபராகவும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பியான, ஓ.ராஜா, பெரியகுளத்தில் தனது குடும்பத்திற்குச் சொந்தமான இயங்கிவரும் பள்ளிக்கு சோஃபா உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்களை கடந்த 2019-ம் ஆண்டு வாங்கியதாகவும், அதற்கான பணத்தைக் கேட்கும் போது, தன்னை மிரட்டுவதாகவும் கூறி காரைக்குடி டி.எஸ்.பி அருணிடம் புகார் கொடுத்தார் பழனி.
Also Read: “ஆவினில் ஆட்டம் போடுகிறார் ஓ.ராஜா!”
பழனி கொடுத்த புகாரில், ``தனக்கு கொடுக்க வேண்டிய ரூ 2 லட்சத்தி 10 ஆயிரத்தை திருப்பிக் கேட்டதற்கு, அடியாட்கள் மூலம் ஆயுதங்களை வைத்து மிரட்டி, என்னைக் கடத்தி சென்று கொலை செய்துவிடுவதாக மிரட்டி, வெற்று முத்திரைத் தாள் மற்றும் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கினர். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவே என்னுடைய பணம் மற்றும் நான் வெத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டதையும் வாங்கிக் கொடுத்து ஓ.ராஜா அவரது மகன் அமர், சென்னையை சேர்ந்த குணா, ஹரி, வாசிம், சதிஷ், விஜயமுத்துராஜ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
பழனி புகார் கொடுத்த ஒரு சில நாட்களில், தனது புகாரை வாபஸ் பெற்றார். பழனியிடம் நாம் பேசினோம். “எனக்கும் ஓ.பி.எஸ் தம்பி ராஜாவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்களுக்கு என்று தெரிந்திருந்தால் நான் என்னுடைய மெட்டீரியலை அனுப்பி இருக்கவே மாட்டேன். சென்னையைச் சேர்ந்த குணாவிற்கு தான் பொருட்களை அனுப்பினேன். குணாவிற்கும் ராஜா தரப்பினருக்கும் தான் ஏதோ டீலிங் இருந்துள்ளது. அவர்களுக்குள் என்ன நடந்ததென்று தெரியவில்லை.
அந்தச் சம்பவத்தில் என் பணத்தைக் கேட்டதற்கு என்னையே கடத்தி, வெத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். எனவே தான் பணத்தையும், என்னை மிரட்டி வாங்கிய பத்திரத்திரத்தையும் கேட்டு போலீஸில் புகார் கொடுத்தேன். பின்னர் அவர்களே பணத்தையும், பத்திரத்தையும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இது குறித்து மேற்கொண்டு பேச விரும்பவில்லை" என்று முடித்துக்கொண்டார்.
Also Read: `மீண்டும் ஆவின் தலைவராகிறாரா ஓ.ராஜா?!' - சர்ச்சையில் தேனி ஆவின்
காரைக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சுந்தர மகாலிங்கத்திடம் பேசினோம், "புகார்தாரர் பழனி, தன்னுடைய பணத்தை ஏமாற்றியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வெத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் புகார் கொடுத்திருந்தார். அது குறித்து விசாரணை நடத்தினோம். செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்ததில், ஓ.ராஜா காரைக்குடி வந்து சென்றதற்கான எந்த தடையமும் இல்லை. இருவருக்கும் நேரடி தொடர்பு இல்லை. எனினும், பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்த போது தான், தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் பழனி. அந்தப் புகார், விசாரணை செய்துகொண்டிருந்த போதே வாபஸ் பெறப்பட்டதால் அதில் வேறு எந்த அப்டேட்டும் இல்லை" என்றார்.
இது குறித்து ஓ.ராஜாவிடம் போனில் பேசினோம். “எனக்கும் புகார் கொடுத்த காரைக்குடிகாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று தான் என்னுடைய பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை நான் சும்மா விடப்போவதில்லை. அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்” என்றார் கோபமாக.
Also Read: ஓ.ராஜா தோட்டத்தில் வேலை செய்தவர் மர்ம மரணம்?!- உறவினர்கள் சாலை மறியலால் தேனியில் திடீர் பரபரப்பு
source https://www.vikatan.com/news/politics/case-by-businessman-against-oraja-was-withdraw-what-happened-in-sivaganga
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக