Ad

திங்கள், 4 ஜனவரி, 2021

``அம்மாவுக்கும் ரஹ்மானுக்குமான பாசம் தெய்வீகமானது!” - உருகும் ரைஹானா

ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு முன்பு... `நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ என ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல் சொன்னார், ``எனக்கொரு அன்னை இருக்கின்றாள்" என்று.

அதாவது, ``நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய்விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை. அது போதும் எனக்கு’’ என்றார் ரஹ்மான். தாயின் அன்புக்கு நிகராக இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே இல்லை என்று சொன்ன ரஹ்மானின் மாறா அன்புக்குரிய தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் கடந்த 28-ம் தேதி சென்னையில் காலமானார்.

ரைஹானா

ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பம் தீரா துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தாயுமான ரைஹானா தன் தாயின் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

``மூணு பொண்ணுங்க ஒரு பையன்னு மொத்தம் நாலு பிள்ளைங்க... கடைசி பெண் குழந்தைக்கு ஒன்றரை வயசு... இப்படியான சூழல்ல திடீர்னு கணவர் இறந்துபோனா ஒரு பொண்னோட நிலைமை என்ன ஆகும்? நினைச்சுப் பார்க்கவே முடியாத துயரம் அது. அப்படியான துயரத்தை தன்னம்பிக்கையோட கடந்து வந்து எங்களையெல்லாம் ஆளாக்கினாங்க எங்க அம்மா” உருக்கமாகப் பேச ஆரம்பிக்கிறார் ரைஹானா.

``அம்மாவைவிட அப்பா 12 வயசு பெரியவர். அப்பா இறக்கும்போது அம்மாவுக்கு வயசு 28 தான். அடுத்து என்ன செய்யப்போறோம்னு திக்குத்தெரியாத சூழல்ல, எங்க அப்பா விட்டுட்டுப் போயிருந்த லேட்டஸ்ட் மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்தான் எங்க அம்மாவுக்கு கைகொடுத்துச்சு. அப்போ எங்ககிட்ட இருந்ததுபோல அப்டேட்டடான இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இங்கே யாருகிட்டேயும் இல்லை. எல்லாருமே ஹார்மோனியம்தான் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. `ப்ரேக் த்ரூ' மாதிரி அப்பா புது டெக்னாலஜியான கீபோர்டை இங்கே அறிமுகப்படுத்தியிருந்தார். அது கச்சேரி நடத்துறவங்க மத்தியில பெரிசா பாப்புலர் ஆச்சு. அதனால அப்பாகிட்ட இருந்த இன்ஸ்ட்ரூமென்டுக்கு நல்ல டிமாண்ட். அதை வாடகைக்கு விட்டுத்தான் கொஞ்ச காலம் எங்க குடும்பம் ஓடுச்சு.

கரீமா பேகம், ஏ.ஆர்.ரஹ்மான்

என்னதான் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இருந்தாலும் அதை நிர்வகிக்கிற திறமை வேணும்ல? அந்தக் கருவிகளெல்லாம் அடிக்கடி பழுதாகும். இன்ஜினீயரை தேடிப்பிடிச்சு சரி பண்ணணும். இதற்கிடையில பிள்ளைகளையும் பார்த்துகிட்டு குடும்பத்தை நடத்தணும். எங்க அம்மா அதை ரொம்ப சாதுரியமா பண்ணினாங்க. எங்க தாத்தா பாட்டிக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் கழிச்சுதான் எங்க அம்மா பிறந்தாங்களாம். அதனால சின்ன வயசுலயே ரொம்ப செல்லமா வளர்ந்திருக்காங்க. அப்பா இறந்ததுக்குப் பிறகுதான் கஷ்டத்தையே அனுபவிச்சுருக்காங்க. நாலு பிள்ளைகள் மட்டுமல்லாமல் எங்க தாத்தா பாட்டியையும் கவனிச்சுக்க வேண்டிய பொறுப்பும் அம்மாவுக்கு இருந்தது. அதுமட்டுமல்ல எங்க சித்திக்கும் அம்மாதான் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியிருந்தது. இப்படிப் பல சவால்களைத் தனி மனுஷியா எதிர்கொண்டவங்க எங்க அம்மா... சுருக்கமா சொல்லணும்னா எங்க அம்மா ஒரு கிரேட் சப்போர்ட்டர்.

சில வருஷங்களுக்குப் பிறகு, எங்ககிட்ட இருந்த இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்லாம் பழசாச்சு. புதிய கருவிகள் வாங்க முடியாத சூழல். அதுமட்டுமல்லாம, கச்சேரி செய்யறவங்க ஒவ்வொருத்தரும் சொந்தமா இசைக்கருவிகள் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால வாடகைக்கு எடுக்கிறதுக்கான தேவை குறைஞ்சுபோச்சு. அப்போதான் ரஹ்மானை கீபோர்டு கத்துக்க அனுப்பினாங்க. பத்துப் பதிமூணு வயசுல வாசிக்க ஆரம்பிச்சுட்டார். அவர் ஜீனியஸ். குறுகிய காலத்துலயே நம்பர் ஒன் கீபோர்டு பிளேயரா ஆனார். அதன் பிறகு, நிறைய ஜிங்கிள்ஸ் பண்ணினார். எங்க குடும்பம் பொருளாதார ரீதியா தலையெடுக்க ஆரம்பிச்சது. ரஹ்மான் இசையில இந்தளவுக்கு வளர்ந்திருக்கார்னா அதுக்கு எங்க அம்மாதான் முழு முதற்காரணம்.

குடும்பத்துடன் கரீமா பேகம்

அம்மாவுக்கு ஒரு தெய்வீகத்தன்மை இருந்தது. தீர்க்கதரிசியைப் போல எதிர்காலத்தில் நடக்கப்போறதைத் துல்லியமா கணிச்சிருவாங்க. அவங்க எடுக்கும் முடிவு 90 சதவிகிதம் சரியா இருக்கும். ரஹ்மானுக்கு எலெக்ட்ரானிக் இன்ஜினீயர் ஆகணும்னுதான் விருப்பம். `இல்லை... மியூஸிக்தான் உன்னுடைய பாதை’ன்னு அம்மாதான் திட்டவட்டமா சொன்னாங்க. அவங்க அப்போ அந்தத் தீர்க்கமான முடிவெடுக்கலைன்னா இன்னைக்கு இசைப் புயலா அவர் உருவாகிருப்பாரான்னு தெரியலை. எங்க அம்மா எங்களுக்காக நிறைய தியாகம் செஞ்சிருக்காங்க. ஆனா, அவங்களுக்கு ரஹ்மான்தான் மெயின். அவருக்குப் பிறகுதான் நாங்களெல்லாம். காரணம், நாங்களெல்லாம் அப்பா இல்லாத வலி தெரியாமலே வளர்ந்தோம். அந்த வலிகளை மொத்தமா சுமந்தது ரஹ்மான்தான். அதனாலதான் அம்மா... ரஹ்மான்தான் உலகம்னு இருப்பாங்க. எந்நேரமும் ரஹ்மானுக்காக பிரார்த்தனை செஞ்சுகிட்டே இருப்பாங்க. ரஹ்மானுக்கும் அம்மாதான் உலகம். அவரும் அம்மாவும் பரஸ்பரம் வெச்சுருந்த பாசம் ரொம்ப ரொம்ப ஆழமானது... தெய்வீகமானது” என்றவர் குரல், தழுதழுக்கிறது.

``ரஹ்மானுக்கு டெக்னாலஜியின் மீது தீராதக் காதல். புதுசா ஏதாவதொரு இன்ஸ்ட்ரூமென்ட் வந்ததுன்னா அதை வாங்கித்தான் ஆகணும். அப்படியான சூழல்ல அதுக்கெல்லாம் அம்மா பயங்கரமா சப்போர்ட் பண்ணுவாங்க. தன்னுடைய நகைகளை அடமானம் வெச்சு அவருக்கு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வாங்கிக் கொடுத்துருக்காங்க. ரஹ்மானும் அந்தளவுக்கு டெடிகேட்டடா வொர்க் பண்ணுவார். பாட்டு ஓகே ஆனதும் முதல்ல அம்மாகிட்டதான் போட்டு காண்பிப்பார். ஒவ்வொரு சிடியும் அம்மா ப்ரே பண்ணிக் கொடுத்த பிறகுதான் வெளியாகும். ரஹ்மான் பீக்குக்கு வந்த பிறகு, அம்மாவுக்கு உள்ளுக்குள்ள பெரிய சந்தோஷம். ஆனா, ஒருபோதும் அவங்க அதை தலையில ஏத்திக்கிட்டதே இல்லை. வெளியில காண்பிச்சதே இல்லை. அந்த வெற்றியை தான் மட்டுமே என்ஜாய் பண்ணணும்னு நினைக்க மாட்டாங்க.

ஏ.ஆர்.ரஹ்மான், கரீமா பேகம்

ஒரு ரெஸ்டாரன்ட் போவோம்... பிக்னிக் போவோம்னு நாங்க எங்கேயுமே போனது கிடையாது. வெளில போனா ஒண்ணு கச்சேரிக்கா இருக்கும்; இல்லைன்னா தர்காவுக்கா இருக்கும். உலகம் முழுக்க நிறைய இடங்களுக்குப் போயிருந்தாலும் அது தர்காவுக்காகவோ, கச்சேரிக்காகவோதான். அவங்க தனக்குன்னு எதையும் ஆசைப்பட்டதே கிடையாது. அவங்க ஏதாவது ஆசைப்பட்டா அது ரஹ்மானுக்காக இருக்கும். அதுக்கப்புறம் மத்தவங்களுக்காக இருக்கும். நிறைய உதவிகள் பண்ணிகிட்டே இருந்தாங்க. உடல்நிலை சரியில்லாதவங்களுக்கு பண உதவி... சாப்பாடு இல்லாதவங்களுக்கு சாப்பாடு போடுறதுன்னு தொடர்ந்து உதவி செஞ்சுகிட்டே இருந்தாங்க.

அம்மாவோட பழைய நினைவுகளையெல்லாம் கிளறும்போது மனசு ரொம்ப வலிக்குது. கிட்னி பிரச்னை வந்து கடந்த சில வருஷங்களாவே அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. எப்படியாவது சரியாகிடுவாங்க எழுந்து வந்துருவாங்கன்னு நாங்க நம்பினோம். ஆனா, அவங்க உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமா பின்னடைவைத்தான் சந்திச்சது. ஒரு கட்டத்துக்கு மேல இரண்டு கிட்னியும் பழுதாகிருச்சு. அதன் பிறகுதான் எங்களுக்கு நம்பிக்கை விட்டுப்போச்சு. அவங்களுடைய மரணம் ஒரு வகையில தீராத வலியிருந்து அவங்களுக்கு விடுதலை கொடுத்துருக்குன்னு நினைச்சு ஆறுதல் அடைஞ்சுக்குறோம்.

A.R.Rahman Family

நான் தைரியமா பேசுவேன். கதறி அழுது எனக்கு சோகத்தை வெளிப்படுத்தத் தெரியாது. ஆனா, மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கேன். என்னால எந்த வொர்க்கும் பண்ண முடியலை. ரஹ்மானும் என்னை மாதிரிதான் எதையும் பெருசா வெளிக்காட்டிக்க மாட்டார். ஆஸ்கர் மேடையில் நின்னுகிட்டு, `நான் எவ்வளவு பெரிய ஆளானாலும் என் அம்மாவுக்கு மகன்தான்’னு சொன்னவர் அவர். அவரும் ரொம்ப உடைஞ்சுபோயிருக்கார். அவர் வலியை வார்த்தைகளால் கடத்திட முடியாது. ரஹ்மானின் பையனும் என்னுடைய இன்னொரு சகோதரி பாத்திமாவின் பிள்ளைகளும் அழுகைய நிறுத்தவே இல்லை. அம்மாவின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்றார் ஆற்றாமையுடன்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/a-r-reihana-speaks-about-bonding-between-her-mother-and-arrahman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக