தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்புகள் குறித்து வேளாண் உற்பத்தி துறை கமிஷனரும் முதன்மை செயலாளருமான ககன்தீப் சிங் பேடி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட பயிரை அறுவடை செய்தால் அறுவடை செய்யும் இயந்திரத்திற்கான வாடகை தருவதற்குக்கூட தேறாது என விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் வாளமர்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களை, தமிழக அரசின் வேளாண் உற்பத்தி கமிஷனரும் முதன்மை செயலாளருமான ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் ககன்தீப் சிங் பேடி கேட்டறிந்தார். அப்போது நீரில் மூழ்கி அழுகிய நிலையில் இருந்த பயிரை விவசாயிகள் காண்பித்தனர்.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளோம். அப்படியே அறுவடை செய்தாலும் அறுவடை இயந்திரத்திற்கான வாடகை தருவதற்குக்கூட பணம் தேறாது என வேதனையுடன் தெரிவித்தனர்.
அதற்கு ககன்தீப் சிங் பேடி, ஏன் இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடை செய்கிறீர்கள் விவசாய தொழிலாளர்களைக் கொண்டு கையினாலேயே அறுவடை செய்தால் என்ன என கேட்டதற்கு, நாங்க கையினால் அறுவடை செய்து சுமார் 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இயந்திரத்தை பயன்படுத்தியே அறுவடை செய்து வருகிறோம்.
அத்துடன் ஆட்களை வைத்து அறுவடை செய்தால் இயந்திரத்தில் அறுவடை செய்வதை விடக் கூடுதலாகச் செலவாகும் என விவசாயிகள் கூறினர். அப்போது ககன்தீப் சிங் பேடி, "நான் விவசாயிகளுக்கு துணை நிற்பேன். நிச்சயம் உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும்" எனத் தெரிவித்தார்.
பின்னர், பொன்னாப்பூர் கிராமத்தில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள,நெல் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரியளவில் இழப்பைச் சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண், தோட்டக்கலை, வருவாய் துறையினர், கணக்கீடு செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர்கூட விடுபடாதவாறு முழுமையாக ஆய்வு செய்து, அதன் அறிக்கையை வரும் 29-ம் தேதிக்குள்ளாக அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்கூட்டியே பயிர் அறுவடை சோதனைகளை முடித்து இழப்பீட்டு தொகையினை விரைவாக வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிர் பாதிப்புக்கான நிவாரணம் வழங்குவதற்கான 33 சதவீத உச்சவரம்பு இந்தியா முழுவதும் உள்ள ஒரு கோட்பாடு. இதை நீக்க வலியுறுத்தும் விவசாயிகளின் கோரிக்கை, அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். நெல் ஈரப்பதத்தை உலர்ந்தும் இயந்திரம், வேளாண் பொறியியல் துறை சார்பில், தலா 12 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி சோதனையில் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் நெல் ஈரப்பதத்தை உலர்த்தும் இயந்திரம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/agriculture/gagandeep-singh-bedi-inspected-farmlands-to-assess-crop-loss
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக