Ad

வெள்ளி, 22 ஜனவரி, 2021

கொரோனா தடுப்பூசி: மோடிக்கு நன்றி சொன்ன பிரேசில் பிரதமர்- கவனம் ஈர்த்த ஹனுமான் ரெஃபரென்ஸ்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி தயாரிப்பதில் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வந்தாலும், சில நாடுகளில் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தநிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வர்த்தக ரீதியிலான கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி முதல் ஏற்றுமதியாக பிரேசில் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு விமானம் மூலம் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. பிரேசில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.

கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்து பிரேசில் அனுப்பி வைத்ததற்காக பிரேசில் பிரதமர் ஜெய்ர் பொல்சனாரோ (Jair M. Bolsonaro) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஹனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்தது போன்ற படத்தைப் போட்டு அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். ராமாயண போரில் காயமடைந்த ராமரின் சகோதரரான லக்ஷ்மணனைக் குணப்படுத்த ஹனுமன் மூலிகையை கொண்டு வர சென்ற போது, அவர் சஞ்சீவினி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார். அந்தக் காட்சியை விவரிக்கும் படத்தைப் பதிவிட்டு, அதில் ஹனுமன் கையிலிருக்கும் மலைக்கு மேல் கொரோனா தடுப்பூசி இருப்பதுபோன்ற படங்களை அவர் பதிவிட்டுள்ளார் பிரேசில் பிரதமர் பொல்சனாரோ. மேலும், `தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் தடுப்பூசி வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி’ என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், அவரின் ட்விட்டர் பதிவில், பிரேசில் நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து உதவிய இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி என்றும், உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க, சிறந்த நட்பு நாட்டை பிரேசில் பெற்றிருப்பது பெருமைக்குரியது என்றும் பொல்சனாரோ குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிரேசிலுடன் இணைந்து பணியாற்றுவது பெருமைக்குரியது என்று பிரதமர் மோடியும் ட்வீட் செய்துள்ளார்.

பூட்டான், மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானிய உதவியின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியிருந்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/brazil-president-bolsonaro-thanks-pm-modi-for-sanjeevni-booti

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக