சி.டி.ஸ்கேன் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மருத்துவனைக்கு இளவரசியும் இன்று அழைத்துவரப்படுகிறார். பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை வெளியிட்டுள்ள பரிசோதனை அறிக்கையில், ``சசிகலாவுக்குத் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. நார்மலாக சுவாசிக்கிறார். ஐ.சி.யூ வார்டில் தொடர்ந்து மருத்துவர்களின் கணிகாணிப்பில் இருக்கிறார். சிகிச்சைக்கும் சசிகலா முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, ``ஆக்சிஜன் அளவு நேற்று 95 சதவிகிதமாக இருந்தது. இன்று 98 சதவிகதமாக அதிகரித்துள்ளது. உட்கொள்ளும் மருந்துகளுக்கும் அவரின் உடல் ஒத்துழைக்கிறது. சுய நினைவுடன் இயல்பாக இருக்கிறார். சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு மாற்ற உறவினர்கள் கேட்டார்கள்.
அதற்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இதுவரை 7,500-க்கும் அதிகமான கோவிட் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ வசதிகளும் இருக்கிறது. தொடர்ந்து இங்கேயே சிகிச்சை எடுக்க சசிகலா தரப்பும் ஒப்புக்கொண்டனர்" என்றார்.
Also Read: சசிகலா உடல்நிலை: `அரசியல் உள்நோக்கம் இருக்கலாம்!’- தஞ்சையில் சீமான் பேச்சு
இந்த நிலையில், சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக இளவரசியும் விக்டோரியா மருத்துவமனைக்கு இன்று அழைத்து வரப்பட உள்ளார். சசிகலாவைத் தொடர்ந்து இளவரசிக்கும் ஏற்கெனவே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் இருவருக்குமே தொற்று இல்லை என நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. சசிகலாவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது.
இந்த பரிசோதனையில், சசிகலாவுக்கு நுரையிலில் அதி தீவிர கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, இளவரசிக்கும் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. சசிகலாவின் உடல்நிலையை அறிய அவரின் உறவினர்களும், அ.ம.மு.க-வினரும் பெங்களூருவுக்கு அதிகளவில் வருகிறார்கள்.
source https://www.vikatan.com/news/politics/bengaluru-victoria-hospital-releases-health-bulletin-of-vk-sasikala
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக