Ad

வியாழன், 20 ஜூலை, 2023

பிராட்வே: மோசமான சாலைகள்; வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளங்கள்... `அபாயத்தை' உணருவார்களா அதிகாரிகள்?

பிராட்வே பேருந்து நிலையத்துக்கு அருகிலேயும், அந்தப் பகுதிகளிலும்... குறிப்பாக, பிரகாசம் சாலையில் கழிவுநீர் மேலாண்மைக்காகத் தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாமல் கிடக்கின்றன. மேலும் பிராட்வே சிக்னலுக்கு அருகிலுள்ள சாலையின் நடுவே இருக்கும் மழைநீர் வடிகால் குழிகள் மூடிய நிலையில் இருந்தாலும், அவை மிகவும் மேடும் பள்ளமுமாக இருப்பதால், போக்குவரத்துக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

அதேபோல, சாலையிலுள்ள இந்தக் குழிகள் முறையே மூடப்படாமல், அவற்றின்மீது மரப்பலகைகள், பிளாஸ்டிக் தகடுகள் போன்றவை வைக்கப்பட்டிருக்கின்றன. அவையும் முறையே பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சாலையின் இரு புறங்களிலும் இது போன்ற பள்ளங்கள் இருப்பதால், நடுவே இருக்கும் குறுகிய பாதையில் வாகனங்களை ஓட்டும் நிலைமைக்கு வாகனஓட்டிகள் தள்ளப்படுகின்றனர். அதிலும் அந்தக் குழிகளை எச்சரிக்கும்விதமாக அங்கே எந்த ஒரு தடுப்புகளும் வைக்கப்படவில்லை. இதனால் பலருக்கும் அடிப்படும் நிலைமை ஏற்படுகிறது.

இது குறித்து அந்தப் பகுதியில் சைக்கிளில் சரக்குகளை ஏற்றிச் செல்பவர்கள் நம்மிடம் பேசுகையில், "தினமும் சைக்கிளில்தான் சரக்குகளை ஏற்றிச் செல்கிறோம். இங்குப் பல கூலித்தொழிலாளிகள் பல வகையான வேலைகளைச் செய்கிறோம். கடந்த சில மாதங்களாகவே இங்குச் சாக்கடை கால்வாய் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, சாலைகளில் நீண்ட தூரம் பள்ளங்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். இதிலிருந்து துர்நாற்றம் வருவது மட்டுமல்லாமல், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்தச் சாலையில் இது போன்ற பள்ளங்கள் இருப்பதால், பொருள்களை முறையே எடுத்துச் செல்லவும் முடிவதில்லை.

அதையும் மீறி எடுத்துச் செல்லும்போது, கால்களில் அடிப்படுகிறது. அதுமட்டுமின்றி சாலைகளின் நடுவே இருக்கும் இந்தப் பள்ளங்களில் வாகனங்கள் தெரியாமல் இறங்கிவிட்டாலும் அவற்றை எடுப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. பகல் நேரங்களில்கூட சமாளித்து விடுகிறோம். ஆனால் இரவு நேரத்தில்தான் மிகவும் கடினமாக இருக்கிறது. அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை புகார் தெரிவித்தபோதும், அவர்கள் பெரிதாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாரத்துக்கு ஒரு முறையாவது இந்தச் சாலையில் யாரேனும் ஒருவருக்கு அடிப்பட்டு விடுகிறது. இது மாதிரி சாலையின் இரண்டு புறங்களிலுமே பள்ளங்கள் இருப்பதால், வாகனத்தை மிகவும் ஜாக்கிரதையாக இயக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்துமே சிலர் சாக்கடைகளில் விழுந்துவிடுகின்றனர். இந்தச் சாலை, போக்குவரத்து மற்றும் வியாபாரத்துக்கு மிகவும் முக்கியமான சாலையாக உள்ளது. இங்கு நிறைய வியாபாரங்கள் நடக்கின்றன, நிறையக் கடைவீதிகளும் இருக்கின்றன. ஆனால் இந்த முக்கிய சாலையில் இது போன்ற நிறையப் பள்ளங்களும், முறையே மூடப்படாமல் இருக்கும் சாக்கடைகளும் இருக்கின்றன" என்றனர்.

இது குறித்து அந்த வழியே தினசரி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் சிலர், ``நாங்கள் தினசரி இந்த வழியாகத்தான் வேலைக்குச் செல்கிறோம். இது மாதிரி சாலையின் இரண்டு புறங்களிலுமே சாக்கடைப் பணிகள் நடைபெறுவதாகத் தோண்டப்பட்ட குழிகளால், வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சிரமமாகத்தான் இருக்கிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது இதில் சிலர் விழுந்துவிடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஏற்கெனவே வடிகாலுக்காகப் போடப்பட்டிருக்கும் வடிகால் ஓட்டைகள் முறையே மூடப்படாமல் இது மாதிரியான பலகைகள், பிளாஸ்டிக் அட்டைகளை போட்டிருப்பதால் அவை உடைந்து விடுகின்றன. அந்த இடங்களில் வாகனத்தை முறையாக இயக்கக்கூட முடியவில்லை. கடந்த வாரம்கூட ஒரு பெண் வண்டியில் வரும்போது சாக்கடைக்குள் தவறி விழுந்துவிட்டார். இது போன்று இந்தச் சாலையில் அடிக்கடி நடக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தப் பள்ளங்களாலேயே அதிகப்படியான போக்குவரத்து நெரிசலும் இங்கு ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/roads-in-the-broadway-area-are-bumpy-and-potholes-making-it-difficult-for-motorists-to-drive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக