கடந்த 2008-ம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள பொய்யாவெளி என்கிற வனப் பகுதியில், மாவோயிஸ்ட்கள் சிலர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைக்கிறது. அதனை அடுத்து, அங்கு விரைந்து சென்ற அதிரடிப்படையினர், வனப் பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்களைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில், மாவோயிஸ்ட் தரப்பில், நவீன் பிரசாத் என்பவர் துப்பாக்கிச்சூட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 7 பேர் தப்பி ஓடினர். இச்சம்பவம் தமிழகம் முழுக்கவே பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read: தேனி முதல் ஒடிசா வரை! - மாவோயிஸ்ட் வேல்முருகனின் கதை...
கொடைக்கானல் போலீஸார், வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கண்ணன், நீலமேகம், ரஞ்சித், லீனா ஜோய்ஸ் மேரி, செண்பகவள்ளி, காளிதாஸ், பகத்சிங் ஆகிய 7 பேரைத் தேடினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த 7 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA), உள்ளிட்ட 16 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 17 ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகள், 210 தோட்டாக்கள், ஒரு வெடிகுண்டு உள்ளிட்ட 32 பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
7 பேர் மீதான வழக்கு, திண்டுக்கல் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, கடந்த 19-ம் தேதி, நீதிபதி செல்வி ஜமுனா தீர்ப்பளித்தார். அதில், அரசுத் தரப்பில் முறையாகக் குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.
Also Read: வயநாடு வனப்பகுதியில் அதிகாலை துப்பாக்கிச்சூடு... சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்!
குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கான நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் கண்ணப்பனிடம் பேசினோம். ``கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழக்கு விசாரணை நடந்துவந்தது. 300 பக்க குற்றப் பத்திரிகை, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்தனர். 7 பேர் மீதும் 16 சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு குற்றசாட்டுக்கும் என அதற்கான விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
கைப்பற்றப்பட்டது வெடிபொருள்தானா என ஆய்வுக்கு அனுப்புவதில் தொடங்கி அனைத்துப் பொருள்களையும் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்பிப்பது வரை இதில் அடங்கும். எதையுமே காவல்துறை தரப்பில் முறையாகச் செய்யவில்லை. அதனால்தான் 7 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது” என்றார்.
சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ் நம்மிடம் பேசும்போது, ``அது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவுடன் UAPA சட்டம் போன்ற சில கடுமையான சட்டப்பிரிவுகளை அவர்கள் மீது போட்டுவிடுகிறது காவல்துறை.
Also Read: கொடைக்கானல் மலையில் ஆயுதப் பயிற்சி: `குற்றம் நிரூபிக்கப்படவில்லை!’ - 7 பேர் விடுதலை
இதனால், அவர்கள் நீண்டகாலம் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்போது 7 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், போலியான வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரஞ்சித்திடம் போனில் பேசினோம். ``எங்களுக்கும் கொடைக்கானல் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கைது செய்யப்பட்ட 7 பேரும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்கள். அனைவரும், கம்யூனிச சித்தாந்தத்தின்படி மக்களின் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
எங்களை திட்டமிட்டே இவ்வழக்கின் இணைத்துவிட்டனர். முழுவதுமாக 8 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறோம். மேலும் பொய் வழக்குப் போட்டு சிலர் சிறையில் உள்ளனர். அவர்களையும் வெளியே கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறோம்” என்றார்.
வழக்கு விசாரணையின் போக்கில், இதுவரை 5 காவல்துறை அதிகாரிகள், இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளாக இருந்துள்ளனர். விசாரணை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
``குற்றம்சாட்டப்பட்ட மாவோயிஸ்ட்கள் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படாமல், போதிய சாட்சிகள் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் எங்கு தவறு நடந்துள்ளது என்பது குறித்து நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும்” என்றார் ஓய்வுபெற்ற காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர்.
source https://www.vikatan.com/social-affairs/judiciary/kodaikanal-weapons-training-case-dindigul-court-released-7-maoists-what-happened
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக