Ad

வெள்ளி, 22 ஜனவரி, 2021

சிவகங்கை: விவசாயிகளுக்கு விலையில்லா `பசுமை விகடன்' இதழ்... மாவட்ட ஆட்சியரின் அசத்தல் முயற்சி!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையேற்று நடத்தினார். மேலும் இந்தக் கூட்டத்தில் வருவாய் அலுவலர் லதா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் வெங்கடேசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் முருகேசன், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் செந்தூர்குமரன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர்கள் அழகுமலை, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மானிய திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வேளாண் இடுபொருள்கள் மற்றும் அது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ``நமது மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைக்கும் வகையில் வாட்ஸ்அப் குழு உருவாக்கி அதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட அதிகாரிகளையும் இணைத்து குழுவில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும். நோய் தாக்குதல் மற்றும் பிரச்னைகள் குறித்து வாட்ஸ்அப் குழுவில் தெரிவிக்கும் போது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு வரிசை நடவு குறித்து தெரிவிக்கப்படும். விவசாயம் போக அதன் உப தொழில்களான தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் நமது மாவட்ட விவசாயிகளின் முக்கிய கருத்துகள் மற்றும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு மாதமும் விவசாயம் சார்ந்த வார இதழ்கள் அல்லது மாத இதழ்கள் விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படும்.

பசுமை விகடன் வழங்கப்பட்டது

இதனை இந்த மாதம் முதல் துவங்குகிறோம். தற்போதைய `பசுமை விகடன்' பொங்கல் சிறப்பிதழில் சிவகங்கை மாவட்டம் புலிக்குளம் மாட்டின காளை குறித்தும், சிங்கம்புணரி ஜல்லிக்கட்டு கயிறு குறித்தும் கட்டுரை வெளிவந்துள்ளது. அதனால் இதை துவக்கமாக வைத்து விவசாயிகளுக்கு வழங்குகிறோம். தொடர்ந்து விவசாயிகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

பசுமை விகடன் - 25/01/2021

Also Read: புலிக்குளம் காளை... ஜல்லிக்கட்டில்... பாயும் புலி! கழனிக்காட்டில்... கலக்கும் கில்லி!

இதுகுறித்து பேசிய விவசாயி ஆதிமுலம், ``சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியர் மற்றும் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் இருவரும் இணைந்து விவசாயிகள் மேம்பாடு குறித்து தனி கவனம் செலுத்தவுள்ளதாக இன்றைய கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் பசுமை விகடன் இதழை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கினர். அதில் புலிக்குளம் காளை குறித்த கட்டுரை அட்டைப்படமாக வந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/sivagangai-district-collector-gave-free-pasumai-vikatan-magazine-to-farmers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக