மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தீ விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையில்தான் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
புனேவின் மன் ஜரி என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த புதிய தொழிற்சாலையில்தான் தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த தொழிற்சாலை இன்னும் ஒரு மாதத்தில் செயல்படக்கூடிய நிலையில் இருந்தது. அனைத்து இயந்திரங்களும் கொண்டு வந்து நிறுவப்பட்டுவிட்டன. இங்கு வேறு வகையான தடுப்பூசி தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். மெஷின்களைப் பொருத்தும் பணி இறுதிக் கட்டத்தில் இருந்தபோது வெல்டிங் தீப்பொறி பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என்று தெரிகிறது.
Also Read: பற்றியெரியும் சீரம் இன்ஸ்டிடியூட்... கொரோனா தடுப்பூசிகளின் நிலை என்ன?!
இது குறித்து முழுமையாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த பகுதியை நேற்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டார். தனது மகன் ஆதித்யா தாக்கரேயுடன் சென்ற உத்தவ் தாக்கரே தீப்பிடித்த பகுதியைப் பார்வையிட்ட பிறகு சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலாவை சந்தித்து சேத விபரம் குறித்து கேட்டறிந்தார். தீ விபத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக உத்தவ் தாக்கரேவிடம் சைரஸ் எடுத்துக் கூறினார். விசாரணை அறிக்கை வந்த பிறகுதான் தீவித்துக்கான காரணம் தெரிய வரும்.
கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்ந்து எந்தவித இடையூறும் இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் சைரஸ் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார். தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று உத்தவ் தாக்கரே அவரிடம் உறுதியளித்தார் . தீ விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/accident/serum-fire-caused-loses-over-rs-1000-crore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக