Ad

வெள்ளி, 22 ஜனவரி, 2021

`எதிர்க்கட்சி முதல் ஒருவர்கூட வெற்றியல்ல வரை'- தமிழகத்தில் கம்யூனிஸ்ட்களின் தேர்தல் வரலாறு தெரியுமா?

இந்தியாவில் கம்யூனிசம் பிறந்தது!

1917-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்த லெனின் தலைமையில் புரட்சி வெடித்தது. அந்த புரட்சியின் மூலமாக ரஷ்யாவில் கொடுங்கோல் ஆட்சி தூக்கியெறியப்பட்டு, உழைக்கும் மக்களின் ஆட்சி நிறுவப்பட்டது. ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் 1920-ல் `இந்திய கம்யூனிஸ்ட் கட்சி' பிறந்தது. 1925-ம் ஆண்டு கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த சிங்கார வேலர் இந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

பகத் சிங்

Also Read: தி.மு.க Vs அ.தி.மு.க: 1952 முதல் 2016 வரை தேர்தல் ஹைலைட்ஸ்!

கம்யூனிசக் கொள்கைகளைக் கொண்டு செயல்பட்ட பகத் சிங், தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக `நான் மார்க்சிய லெனினியத்தை அடிப்படையாகக் கொண்டவன்’ என்று அறிவித்தார். பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரிட்டிஷாரை எதிர்ப்பதிலும், இந்தியச் சுரண்டலை அகற்றுவதிலும் கம்யூனிஸ்ட்களே சிறந்தவர்கள் என்ற எண்ணம் உருவானது. தொடர்ந்து, இந்திய இளைஞர்கள் பலரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையத் தொடங்கினர். இந்தியா முழுவதும் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது இந்திய கம்யூனிஸ்ட்!

நூறாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இயங்கி வரும் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் என்ன சாதித்தது என்பதை அலசுவதே இந்தக் கட்டுரை!

முதல் தேர்தல்!

சுதந்திரத்துக்குப் பிறகு 1952-ம் ஆண்டு, முதல் முறையாகத் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில், 131 இடங்களில் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் 62 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. 1957 தேர்தலில், 68 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி கண்டது. 1967 தேர்தலுக்கு முன்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சிலர் விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று தனியாக ஒரு கட்சியைத் தொடங்கினர்.

கம்யூனிஸ்ட்

கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுக்கு என்ன காரணம்?

`காங்கிரஸ் கட்சியை, இந்திய கம்யூனிஸ்ட் தீவிரமாக எதிர்க்கவில்லை' என்பதே கட்சியின் பிளவுக்குக் காரணமாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தான் பிளவுக்கு உண்மையான காரணம் என்கிறார்கள் தோழர்கள் சிலர். ரஷ்யாவும் சீனாவும் கம்யூனிசத்தை அடைய வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தன. சீன ஆதரவு நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் (சி.பி.எம்), ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட்டும் (சி.பி.ஐ) எடுத்தன. இதுதான் பிளவுக்கு உண்மையான காரணம் என்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ, சி.பி.எம்!

1967-லிருந்து இரண்டு கட்சிகளும் தனித் தனியே தேர்தலைச் சந்தித்தன. சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துள்ளன.

முதல்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில்தான், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்ந்த ஒருவர்கூட வெற்றிபெறவில்லை.

2016-ம் ஆண்டு, தே.மு.தி.க தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் இரண்டு கம்யூனிசக் கட்சிகளும் இணைந்தன. சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 25 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

ஆண்டு வாரியாக, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வானார்கள் என்பதைக் கீழுள்ள இன்போகிராபிக்ஸில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்..!

CPI, CPM

Also Read: அ.தி.மு.க 68... ம.நீ.ம 4... தி.மு.க-வுக்கு எத்தனை..? ஏபிபி கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?!

2021 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்பது குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்!


source https://www.vikatan.com/government-and-politics/election/history-of-communist-party-in-tamilnadu-legislative-assembly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக