Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

"எம்.ஜி.ஆர் என்னை அரசியலில் ஈடுபட அறிவுறுத்தினார்"- ஸ்டாலின்! உங்கள் கருத்து? #VikatanPoll

தமிழக அரசியல் களத்தில் சூடுபிடிக்கப் பிரசாரங்களும் கூட்டங்களும் நடந்து வருகின்றன. இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முதல், சமீபத்தில் கட்சித் தொடங்கியவர்கள்வரை அனைவரும் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை முன்வைத்தே தங்களின் பிரசாரங்களைச் செய்து வருகின்றனர். ஸ்டாலின் சமீபத்தில், "பெரியப்பாவாக எம்.ஜி.ஆர் என்னை அரசியலில் ஈடுபட அறிவுறுத்தினார்" என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-stalins-statement-on-mgr

`முக்கியத் தலைவர்கள் கைது; ஓராண்டுக்கு அவசர நிலை!’ மியான்மரில் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம்

மியான்மரில் கொரோனா சூழலுக்கு மத்தியில் கடந்த நவம்பரில் தேர்தல் நடந்து முடிந்தது. ஆட்சியமைக்கத் தேவையான 322-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது.

ஆங் சாங் சூகி மற்றும் முக்கிய தலைவர்கள் (கோப்பு படம்)

இன்று மியான்மரில் நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி, அதிபர் வின் மைன்ட் மற்றும் முக்கிய தலைவர்கள் பலரையும் ராணுவம் அதிகாலையில் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது. அதோடு, அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும், இந்த எமர்ஜென்சி அடுத்த ஒரு ஆண்டுக்குத் தொடரும் என்றும் அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Also Read: ரோஹிங்யா விவகாரத்தில் ஆங் சாங் சூகியின் 'கௌரவக் குடிமகள்' விருது பறிப்பு!- ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

இப்படி நடப்பது மியான்மரில் புதிது அல்ல. 1948-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து மியான்மர் விடுதலை பெற்றது. விடுதலைக்குப் பிறகு பெரும்பான்மையான நாள்களில் அந்த நாடு ராணுவ ஆட்சியிலேதான் கழித்து வந்தது. தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி 15 ஆண்டுகளுக்கும் மேல் வீட்டுக் காவலில் தான் இருந்து வந்துள்ளார். ராணுவ ஆட்சியை எதிர்த்து அமைதியான முறையில் போராடி வந்த அவருக்குக் கடந்த 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆங் சாங் சூகி

தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று தொடர்ந்து ராணுவம் கூறிவந்தநிலையில், தற்போது அங்கு ராணுவப் புரட்சி நடந்துள்ளது. நாட்டின் தலைநகரில் தொலைபேசி, இணைய இணைப்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் ஆங் சாங் சூகி கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆங் சான் சூகி மற்றும் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் கைதையடுத்து அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/myanmar-army-declaration-of-emergency-for-one-year

"ராஷ்மிகா மந்தனாவை ரொம்பவே டார்ச்சர் பண்ணேன்!"- துருவ் சர்ஜா

"சின்ன வயசுல இருந்து சென்னைக்கு வந்துட்டு இருக்கேன். எப்பவும் சென்னை பிடிக்கும். மெரினா பீச் அண்ட் சுந்தரி அக்காவுடைய மீன் குழம்பும் ஆல்டைம் ஃபேவரைட். முதல் முறையா என்னோட படம் 'செம திமிரு' தமிழ்ல டப் ஆகுறது சந்தோஷத்தைக் கொடுக்குது. முக்கியமா, என்னோட தாய் மாமா அர்ஜூன் தமிழ் ரைட்ஸ் வாங்கியிருக்கார்" என்கிறார் கன்னட நடிகர் துருவ் சர்ஜா.

திடீர்னு 'பொகரு' படத்தை தமிழ்ல டப் பண்ணணும்னு ஏன் முடிவெடுத்தீங்க?

துருவ் சர்ஜா

'' 'சிவா'ங்குற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். முழுக்க முழுக்க வில்லத்தனம் நிறைஞ்ச கேரக்டர். படத்தோட கடைசி வரைக்குமே வில்லனா மட்டும்தான் இருப்பேன். இருந்தும், படத்தோட ஹீரோ நான்தான். படத்தோட ரைட்டர் அருண் ஸ்க்ரிப்ட் எழுதுறபோதே தமிழ் ஆடியன்ஸூம் பார்த்து ரசிக்குற மாதிரிதான் எழுதினார். பதினேழு வயசு பையனுடைய கேரக்டரும் படத்துல இருக்கு. இதுக்காக என் வெயிட்ல இருந்து 33 கிலோவை குறைச்சு நடிச்சேன். வேலைனு வந்துட்டா நூறு சதவிகிதத்தை அப்படியே கொடுத்திடுவேன். தினமும் 50 மினிட்ஸ் வொர்க் அவுட் பண்ணுவேன். படத்துல இன்டர்நேஷனல் பாடி பில்டர்ஸ் கூடவும் சேர்ந்து நடிச்சிருக்கேன்.''

உங்க மாமா அர்ஜூன் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்?

அர்ஜூன்

"மாமாவுக்கு படம் பிடிச்சிருந்தது. அதனாலதான் படத்தோட தமிழ் ரைட்ஸ் வாங்கி வெளியிடுறார். தவிர, எனக்கு எப்பவும் மாமா மேல பெரிய ப்ரியம் உண்டு. ஃபிட்னஸ் இன்ட்ரஸ்ட் மாமானாலதான் வந்தது. மாமா மாதிரியே நானும் அனுமான் பக்தர்."

ராஷ்மிகாகூட முதல் முறையா ஒண்ணா சேர்ந்து நடிச்ச அனுபவம்?

துருவ் சர்ஜா

"ரொம்ப ஃப்ரெண்ட்லியான பொண்ணு. 'karabu' பாட்டுல நிறைய டார்ச்சர் பண்ணியிருப்பேன். ஆனா, அவங்க கொஞ்சமும் முகம் சுழிக்காம நடிச்சு கொடுத்தாங்க. இந்தப் பாட்டு ரிலீஸானவுடனே செம ஹிட்டாகிருச்சு. கிட்டத்தட்ட பதினெட்டு நாளைக்கு மேல ட்ரெண்டிங்ல இருந்தது. கன்னடத்துல அதிக பேர் ரசிச்சு பார்த்த பாட்டா இது இருக்கு. பாட்டுல வர்ற என்னோட டான்ஸ் ஸ்டெப் நல்லாயிருக்குனு எல்லாரும் சொன்னாங்க. கொஞ்சமும் எனக்கு டான்ஸ் ஆட வராது. ஆனா, டான்ஸ் மாஸ்டர் முரளி கொடுத்த உற்சாகத்துல நல்லா ஆடிட்டேன்."

தமிழ் படங்கள் பார்க்குறது உண்டா?

அர்ஜூன் குடும்பத்துடன்...

''மாமா அர்ஜூனுடைய படங்கள் பார்த்துதான் தமிழ் பேச கத்துக்கிட்டேன். 'முதல்வன்', 'ஜென்டில்மேன்', 'சேவகன்', 'பிரதாப்' படமெல்லாம் பார்த்திருக்கேன். இயக்குநர் பாலா மற்றும் செல்வராகவனின் படங்கள் பிடிக்கும். சீக்கிரமே தமிழ்ல நடிக்கவும் ரெடியா இருக்கேன். முக்கியமா மாமாவுடைய டைரக்‌ஷன்ல நடிக்க ஆசை. ஏன்னா, அவர் படத்தோட திரைக்கதை வடிவம் நல்லாயிருக்கும். ஆனா, மாமா ஷூட்டிங் ஸ்பாட்ல நின்னா அவர் முன்னாடி நின்னு நடிக்குறதுக்கு தயக்கமா ஃபீல் பண்ணுவேன்.''

படத்தோட ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் பற்றி?

பொகரு படத்தில்...

''நல்ல மனிதர். படத்தோட ஒளிப்பதிவாளர்ங்குற விஷயத்தை தாண்டி டீச்சர் மாதிரினு சொல்லுவேன். ஏன்னா, ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுப்பார். நிறைய டிஸ்கஷன் எங்களுக்குள்ள நடந்திருக்கு. இவரோட ஒளிப்பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.''

மறைந்த உங்கள் அண்ணன் சிரஞ்சீவி சர்ஜா பற்றி...

சிரஞ்சீவி சர்ஜா

''அண்ணாவும் நானும் ரொம்ப க்ளோஸ். அவரை இப்ப ரொம்பவே மிஸ் பண்றேன். குட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்திருக்கான். மூணு மாசம் கைக்குழந்தை. இவனை பார்த்து ஒரு மாசம் ஆகிருச்சு. சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்.''



source https://cinema.vikatan.com/tamil-cinema/kannada-actor-dhruva-sarja-about-his-upcoming-movie-pogaru-aka-sema-thimiru

விழுப்புரம்: `அ.தி.மு.க கொடியுடன் வந்தால்...’ - சசிகலாவை எச்சரிக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுவரும் குளத்தைப் பார்வையிட வந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``எந்தக் கட்சியிலுமே, எந்தப் பொறுப்புமே நிரந்தரமான பொறுப்பு கிடையாது. புரட்சித் தலைவருக்குப் பிறகு கட்சியை மீட்டெடுத்து மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை மீட்டெடுத்து எங்களையெல்லாம் வாழவைத்த தெய்வம் அம்மா. அதனால், எங்கள் மனதில் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மாதான். ஆனால், அ.தி.மு.க உள்பட எந்தக் கட்சியிலுமே நிரந்தரத் தலைவர் என்று யாரும் கிடையாது. யாரும் நிரந்தரமாக இருக்கப் போவதும் கிடையாது. அது தவறான கருத்து. அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிளவுபடக் கூடிய சூழலில் கட்சியும், சின்னமும் யாருக்கு சொந்தம் என்று நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நடைபெற்றது.

சி.வி.சண்முகம்

அப்போது டி.டி.வி தினகரன் பெயரிலும், அந்த அணியில் மதுசூதனன் பெயரிலும் வழக்கு நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பல வழக்குகள் ஒருபுறம். தேர்தல் ஆணையத்தில் இறுதி விசாரணை நடைபெறும்போது இரு அணிகளும் ஒன்றாக இணைந்துவிட்டன. முதல்வரும், துணை முதல்வரும், `இனி அ.தி.மு.க ஒன்றாகச் செயல்படும்’ என்று கூறிவிட்டார்கள். அதனடிப்படையில்தான் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் நாங்கள்தான் அ.தி.மு.க என்று கூறி வழக்கை நடத்தினார்கள். அ.தி.மு.க நாங்களா அல்லது அவர்களா என்பது உலகத்துக்கே தெரியும்.

தேர்தல் ஆணையம் இறுதியாக அளித்த தீர்ப்பில் அ.தி.மு.கவில் 100-க்கு 99% தொண்டர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் இருக்கிற இயக்கம்தான் உண்மையான அ.தி.மு.க. அவர்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னத்தின் உரிமை என்று கூறி முடித்து வைக்கப்பட்டுவிட்டது. இதை அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அனைவரும் கூறுவதை கேட்டு ஏமாந்துவிடுவோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். கட்சியையும், கட்சிக்காரர்களையும் ஏமாற்றித் தின்றவர்கள். 30 ஆண்டுகாலம் கொள்ளையடித்த இவர்களைப்போல இல்லை.

தேர்தல் ஆணையம் இறுதியாகக் கூறிவிட்டது. ஒரு கட்சியை ஆரம்பித்த பிறகு அதற்குரியை அங்கீகாரத்தைக் கொடுப்பது தேர்தல் ஆணையம். அந்தத் தேர்தல் ஆணையமே தீர்ப்பு கூறிவிட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் வழக்குப் போட்டு தோல்வியடைந்தார்கள்.

சசிகலா , தினகரன்

உச்ச நீதிமன்றம் இந்த பக்கம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும், அவைத் தலைவர் மதுசூதனன் பெயரையும் வழக்கின் பிரதிவாதியாகச் சேர்த்திருந்தார்கள். அந்தப் பக்கம் சசிகலா பொதுச்செயலாளர் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, டி.டி.வி தினகரன் துணைப் பொதுச் செயலாளர் என்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்று கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் கொடுத்த தீர்ப்பு சரி என்று தீர்ப்பளித்ததுடன் வழக்கையும் தள்ளுபடி செய்துவிட்டது. அதுதான் இறுதித் தீர்ப்பு.

``இப்போது, `நீதிமன்றத்துக்குச் செல்வேன், அ.தி.மு.க எங்களுடையதுதான்’ என்று கூறிவரும் இதே டி.டி.வி தினகரன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர். `நாங்கள் அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரவில்லை’ என்று டி.டி.வி தினகரன் வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அதன்பிறகு கொடுக்கப்பட்ட இறுதித் தீர்ப்புதான் உண்மையான அ.தி.மு.க குறித்த தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு செல்லும் என்பது. அதை எதிர்த்து அன்றை தினம் சிறையில் இருந்த சசிகலா சார்பாக டி.டி.வி தினகரனே உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மறு சீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

இன்று சட்டவிரோதமாக அ.தி.மு.க-வின் கொடியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. நாங்கள்தான் அ.தி.மு.க என்று அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதுதான் இறுதித் தீர்ப்பு. வேறு எங்கும் வழக்கு இல்லை. அ.தி.மு.க யார்? அதன் கொடியை யார் பயன்படுத்துவது? இரட்டை இலைச் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதைத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மீது ஆட்சேபனை இருந்தால், இறுதியான மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். அங்கேயும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இருப்பதுதான் உண்மையான அ.தி.மு.க. இவர்கள் மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி

அதெல்லாம் இனி நடக்காது. 30 ஆண்டுகாலம் ஏமாந்தது எல்லாம் வேறு. உங்களையெல்லாம் யாரும் மனசளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்னைக்கு அம்மா இருந்தார்கள். அம்மாவின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து உங்களை ஏற்றுக்கொண்டோம். அதனால் இன்று கொடியை சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கும் சசிகலாவாக இருந்தாலும், கட்சியை விட்டு நீக்கப்பட்ட வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு சொல்லிக்கொள்வது, இது எங்கள் சொத்து. இதை பயன்படுத்துவதற்கு எந்தக் கொம்பனுக்கும் அதிகாரம் கிடையாது. அவர்கள் மீது உரிய வழக்கு கண்டிப்பாகத் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாட்டு எல்லைக்குள் இரட்டை இலை கொடியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் வந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நாங்கள் வழக்க்குத் தொடருவோம். அதுமட்டுமல்ல அ.தி.மு.க-வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கும் தெரியும்” என்று கூறியவரிடம் `டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் அ.ம.மு.க-வை இணைத்துக் கொள்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கே.பி.முனுசாமி கூறியிருக்கிறாரே?’ என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு,

Also Read: `பாய்ந்த பன்னீீர்... சீறிய சி.வி.சண்முகம்' - அவசரகதியில் முடிந்த அ.தி.மு.க கூட்டம்!

``அது நாங்கள் வழக்கமாகக் கூறுவது. யார் எந்த தப்பு செய்தாலும் அனைத்துக் கட்சியிலும் கூறுவது மன்னிப்புக் கடிதம்தான். அவர் பொதுவாகக் கூறிய கருத்து அது. எந்த காலத்திலும், எந்த நிலையிலும் இனி அவர்களுக்கு இந்தக் கழகத்தில் இடமில்லை. 200% அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்தக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதல்வர் தெள்ளத்தெளிவாகக் கூறிவிட்டார். யாரையும் கட்சியைவிட்டு நீக்க வேண்டிய அவசியம் கிடையாது. அ.தி.மு.க சட்டவிதிகளின்படி கழகத்தை எதிர்த்து வழக்கு தொடர்பவர்கள், அவர்களாகவே அந்த அடிப்படை உரிமையை இழந்துவிடுகிறார்கள். அவர் எப்போதோ நான்தான் அ.தி.மு.க என்று தனியாக போய்விட்டார். வெளியேறியவரைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை?” என்று பதிலளித்தார்.



source https://www.vikatan.com/news/politics/minister-cve-shanmugam-warns-sasikala-over-admk-flag

Corona Vaccine-ஆல் Side effects வருமா? | Covid19 | Dr. V Ramasubramanian Explains



source https://www.vikatan.com/government-and-politics/healthy/dr-v-ramasubramanian-explains-on-corona-vaccine

ஒதுக்கிய அமைச்சர்; பா.ஜ.க-வில் இணைந்த அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி!- கலகலக்கும் கரூர் பாலிடிக்ஸ்

இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் முன்னாள் மாநில செயலாளர் வி.வி.செந்தில்நாதன் பா.ஜ.கவில் இணைந்திருப்பது, கரூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒதுக்கியதால், வி.வி.செந்தில்நாதன் பா.ஜ.க-வுக்குத் தாவியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்

பா.ஜ.கவில் இணைந்த வி.வி.செந்தில்நாதன்

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டவர் வி.வி.செந்தில்நாதன். அதோடு, ஜெயலலிதா இருந்த காலத்தில், இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் மாநிலச் செயலாளர் ஆக்கப்பட்டவர். தொடர்ந்து, அந்தப் பதவி பறிக்கப்பட்டு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் கரூர் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, இவரது அந்த மாவட்டப் பொறுப்பும் பறிக்கப்பட்டது.

Also Read: `சொன்னது மண்பானை உணவகம்; புதுக்கோட்டை டீம் படுரகசியம்!’ - `குக் ராகுல்’ ரகசியம் பகிரும் ஜோதிமணி

இதன் பின்னணியில், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்ததாகக் கூறப்பட்டது. காரணம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபாரிசின்றி இரண்டு முறை அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க தலைமையிடம் இருந்து எம்.எல்.ஏ சீட் பெற்றவர் செந்தில்நாதன். அந்த அளவுக்கு தலைமையோடு நேரடித் தொடர்பில் இருந்தார். இதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் போட்டியாக, கரூர் மாவட்ட அரசியலில் வி.வி.செந்தில்நாதன் வளர்ந்து கொண்டிருந்தார்.

பா.ஜ.கவில் இணைந்த வி.வி.செந்தில்நாதன்

இந்த நிலையில்தான், செந்தில்நாதன் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பறிக்கப்பட்டதின் பின்னணியில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயர் அடிபட்டது. இதனால், கடந்த நான்கு மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார் செந்தில்நாதன். `காங்கிரஸ் கட்சிக்குத் தனது ஆதரவாளர்களோடு செல்ல இருக்கிறார்' என்ற பேச்சு முதலில் அடிப்பட்டது. ஆனால், அதை மறுத்து வந்த வி.வி.செந்தில்நாதன், சென்னை கமலாலயத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் மற்றும் பா.ஜ.க தேசியச் செயலாளரும் தமிழகப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தலைமையில் அக்கட்சியில் இணைந்திருக்கிறார். அ.தி.மு.க-வின் முக்கிய பிரமுகரான செந்தில்நாதன் பா.ஜ.க-வில் இணைந்தது, கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``வி.வி. செந்தில்நாதன் பா.ஜ.க-வில் இணைந்ததன் பின்னணியில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், பா.ஜ.க துணைத் தலைவருமான அண்ணாமலை இருப்பதாக சொல்கிறார்கள். இவர், கரூர் மாவட்டத்தில் பா.ஜ.க-வை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே, அவர் செந்தில்நாதனை பா.ஜ.க பக்கம் இழுத்ததாகத் தெரிகிறது. பா.ஜ.க-வை தமிழகத்தில் வளர்க்க வலுவான ஆளுமை கொண்ட தலைவர்களை உருவாக்கி, வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதே பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம். இதனடிப்படையில், செந்தில்நாதன் பா.ஜ.க-வுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.கவில் இணைந்த வி.வி.செந்தில்நாதன்

அவர் ஏற்கெனவே போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில், வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்படலாம்னு சொல்றாங்க. வரும் தேர்தலில் கரூர் தொகுதியில் தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டியிட இருக்கிறார்கள். ஆனால், இருவரில் யாராவது ஒருவர் நிச்சயம் தோல்வி அடைவதை, அவர்கள் இருவரும் சார்ந்த சமூகத் தலைவர்கள் விரும்பவில்லை.

இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே செந்தில்நாதன் பா.ஜ.க-வுக்கு இழுக்கப்பட்டிருக்கிறார் என்று ஒருதரப்பு சொல்கிறது. அதாவது, கரூரை கூட்டணி கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கினால், கரூரில் செந்தில்பாலாஜியை எதிர்த்து செந்தில்நாதனை போட்டியிட வைக்கலாம். எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதிக்கு ஜாகை மாறலாம் என்ற யோசனைதான் அது. ஆனால், செந்தில்நாதன் தரப்போ வேறு ஒரு மனக் கணக்கில் உள்ளது. அ.தி.மு.க-வில் இருந்தால், வரும் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தனக்கு சீட் கிடைக்காமல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளடி வேலைகள் செய்துவிடுவார் என்று நினைத்துதான், பா.ஜ.க-வுக்கு செந்தில்நாதன் தாவியிருக்கிறார்.

பா.ஜ.கவில் இணைந்த வி.வி.செந்தில்நாதன்

இப்போது, கூட்டணி சார்பில் அரவக்குறிச்சி தொகுதியைக் கேட்டு வாங்கி, அதில் தான் வேட்பாளராக களம் இறங்கலாம் என்று நினைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அப்படி சீட் கிடைக்காவிட்டாலும், அதனைத் தொடர்ந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நியமன உறுப்பினர் பதவியை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால், அ.தி.மு.க-விலிருந்து வி.வி.செந்தில்நாதன் பா.ஜ.க-வுக்குத் தாவியது யாருக்கு லாபமோ இல்லையோ, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குத் தான் லாபம் என அமைச்சர் ஆதரவாளர்கள் உள்ளுக்குள் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்" என்றார்கள்.

இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம். ``அண்ணன், கரூர் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சாதாரண தொண்டர்களைக்கூட அரவணைத்துச் செல்கிறார். ஆனால், செந்தில்நாதன் கட்சிக்குள் பிளவை உண்டாக்கப் பார்த்தார். அதோடு எங்கண்ணனைப் பற்றி, `அமைச்சரிடம் கான்ட்ராக்டர்கள் மட்டுமே பேச முடியும். மற்றவர்கள் யாரும் பேசமுடியாது'னு சொன்னார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கட்சித் தலைமை, செந்தில்நாதன் பற்றி கேள்விப்பட்டு அவரை மாவட்டப் பொறுப்பில் இருந்து எடுத்தது. அதற்கும், அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கட்சி மாறியது, கரூர் மாவட்ட அ.தி.மு.க வளர்ச்சிக்கு நல்லதுதான்" என்றார்கள்.

கட்சி மாறியது தொடர்பாக, வி.வி.செந்தில்நாதனிடம் பேசினோம். ``அ.தி.மு.கவில் 20 வருடங்களாக உறுப்பினராக இருந்தேன். 12 வருடங்களாகப் பதவிகளில் இருந்தேன். இரண்டு தேர்தல்களில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டேன். கட்சிக்காக சொந்த[ பணம் பலகோடிகள் செலவு பண்ணியிருக்கேன். ஆனால், அம்மா இருந்தவரை எனக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் இருந்துச்சு. அவர் மறைந்ததும், கட்சியில் ஒரு பிடிப்பு இல்லாம போச்சு. அதோடு, என்னைத் தூக்கிவிடவும் ஆள் இல்லை. அங்கு மரியாதையும் இல்லை.

வி.வி.செந்தில்நாதன்

அதனால், தேசியக் கட்சியான பா.ஜ.க-வில் இணைஞ்சுருக்கேன். அந்த கட்சியில், எனக்குரிய மரியாதை தர்றாங்க. சிறப்பான ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் மோடியின் கட்சியில் இணைந்திருப்பது புது உற்சாகத்தை தந்திருக்கு" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/karur-admks-vvsenthilnathan-joins-bjp

மதுரையில் முதல்வர் தலைமையில் திறக்கப்பட்ட அம்மா கோயில்! #Jayalalithaa

திறந்த வேனில் அம்மா கோயில் வளாகத்தை வந்தடைந்த முதல்வர் மற்றும் துணை முதல்வர்.

திறப்புவிழாவின் போது 234 கோ தானம் வழங்கப்பட்டது.

யாகசாலையில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அம்மா கோயில் கும்பாபிஷேகத்துக்குக் கொண்டு செல்லப்படும் தீர்த்தங்கள்.

கும்பாபிஷேகம் நடைபெறுவதை கீழே இருந்து வணங்கிய இ.பி.எஸ் & ஓ.பி.எஸ்.

அம்மா கோயிலின் கல்வெட்டுகள் திறப்பு.

அம்மா கோயிலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாலை அணிவித்தனர்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து கற்பூரம் காட்டினர்.

கோயிலின் உட்புறம் திறப்பு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்

அதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவருக்கும் நினைவுப் பரிசாக வேல் அளிக்கப்பட்டது.



source https://www.vikatan.com/ampstories/news/politics/madurai-amma-temple-opening-ceremony

புதுச்சேரி: `23 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி பா.ஜ.க ஆட்சி அமைக்கும்!’ - ஜெ.பி.நட்டா

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க ஆரம்பித்திருப்பதால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அணிமாறும் படலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகயில் இருந்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் உள்ளிட்டவர்கள் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி ஏ.எஃ.டி திடலில் இன்று,`மலரட்டும் தாமரை.. ஒளிரட்டும் புதுவை' முழகத்துடன் பா.ஜ.க-வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க பொதுக்கூட்டம்

அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளருமான நிர்மல் குமார் சுரானா, மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஜே.பி.நட்டா, ``பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறார். புதுச்சேரியில் 100% மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் புதுச்சேரியை ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 1,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காரைக்காலில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஜிப்மர் மருத்துவமனை உருவாக்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரி ஜிப்ரில் இரண்டாவது பிரிவைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

பா.ஜ.கவின் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்

நாட்டின் 130 கோடி மக்களையும் காப்பாற்றும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். முதல்வர் நாராயணசாமி அவர்களால் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி 70% வீழ்ச்சியடைந்திருக்கிறது அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது ஜார்கண்ட் மாநிலத்துக்கு 5,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்தார். ஆனால், புதுச்சேரி மாநிலத்துக்கு இருந்த கடனை தள்ளுபடி செய்யாமல் துரோகம் இழைத்துவிட்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 23-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும். அப்போது புதுச்சேரியில் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும். அதேபோல புதுச்சேரியில் இதுவரை நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல், பா.ஜ.க-வின் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தப்படும்.

Also Read: பா.ஜ.க-வின் புதிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா?

குறிப்பாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் இல்லாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதை புதுச்சேரி மக்கள் தெரிந்துகொள்வார்கள். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசு மற்றும் கூட்டுறவு ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்துடன், நிலுவையில் உள்ள சம்பளமும் வழங்கப்படும். மூடிக்கிடக்கும் அனைத்து தொழிற்சாலைகளும் திறக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-will-win-more-than-23-seats-in-puducherry-says-its-chief-jp-nadda

கரூர்: அம்மா கிளினிக்கைத் திறந்த அமைச்சர்... சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் காயம்!

கரூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்த அம்மா மினி கிளினிக்கின் வராண்டா கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுமிகளுக்குக் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ வெளியாகவே, ஸ்டாலின், கமல்ஹாசன், செந்தில் பாலாஜி என பலரும் இந்த சம்பவத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

அம்மா கிளினிக் திறப்பு விழா

கரூர் மாவட்டத்தில் நேற்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ச்சியாக, பூமி பூஜை, புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அம்மா கிளினிக் திறப்பு விழா போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

Also Read: `சொன்னது மண்பானை உணவகம்; புதுக்கோட்டை டீம் படுரகசியம்!’ - `குக் ராகுல்’ ரகசியம் பகிரும் ஜோதிமணி

நேற்று காலை அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, நேற்று மாலை கரூர் தொழிற்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தையும் திறந்து வைத்தார்.

இடிந்து விழுந்த சுவர்

தொடர்ந்து, அம்மா சமுதாயக் கூடத்துக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, தோகைமலை அருகே உள்ள கொசூர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்துவைத்தார். அவர் திறந்து வைத்த சில நிமிடங்களில் கிளினிக் பகுதியில் உள்ள வராண்டாவின் கைப்பிடிச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த சுவர் இடிந்த சம்பவத்தில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டடத்தில் அதிகாரிகள் அவசர அவசரமாக அம்மா மினி கிளிக்கைத் திறக்க ஏற்பாடு செய்ததாகக் கூறுகிறார்கள். சமீபத்தில் பெய்த தொடர் கனமழையில் ஊறிபோய் டேமேஜ் ஆகியிருந்த அந்த வராண்டா கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. அமைச்சர், அம்மா மினி கிளினிக்கை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், லோக்கல் ஆளுங்கட்சிப் புள்ளிகள் மக்களைத் திரட்டியிருந்தனர். அதில், குழந்தைகள், சிறுவர், சிறுமிகளும் இருந்தனர். அமைச்சர் கிளினிக்கை திறந்தபோது, அங்கே நின்றிருந்த அ.தி.மு.கவினர் அந்த சுவற்றில் அழுத்தம் கொடுத்ததால், அந்த சுவர் இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது.

இடிந்து விழுந்த சுவர்

அப்போது, அந்த சுவற்றின் மீது இரண்டு சிறுமிகள் விழுந்ததால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். `மாறாக, இடிந்து விழுந்த சுவற்றுக்கு அடியில் சிறுமிகள் மாட்டியிருந்தால், நிலைமை விபரீதமாகியிருக்கும்' என்று சொல்கிறார்கள், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களில் சிலர். அதோடு, `தேர்தல் வருவதாக் மக்களை ஏமாற்ற, இப்படி பழைய கட்டடங்களில் அம்மா கிளினிக்கை அவசரகதியில் திறந்து, மக்களின் உயிரோடு விளையாடுறாங்க, இந்த அரசும், மாவட்ட அமைச்சர்களும்' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Also Read: திமுக-வின் `ஸ்லீப்பர் செல்கள்’ திட்டம் முதல்`அம்மா மினி கிளினிக்’ மெகா குளறுபடிவரை கழுகார் அப்டேட்ஸ்

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், `அமைச்சர் திறந்து வைக்கும்போதே, மினி கிளினிக்கும் இடிந்து விழுந்துள்ளது. இதுதான், இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் லட்சணம்' என்று கூறியதோடு, சுவர் இடிந்து விழுவது சம்பந்தமான இரண்டு வீடியோக்களை மக்களிடம் போட்டு காட்ட வைத்தார். இன்னொருபக்கம், மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில்,`கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி கிளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?' என்று கடுமையாகச் சாடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இடிந்து விழுந்த சுவர்

அதேபோல், தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, `அ.தி.மு.க ஊழல் ஆட்சியின் மற்றொரு சான்று. அ.தி.மு.க ஊழல் ஆட்சியில் கரூர் குளித்தலையில், மினி கிளினிக் திறந்து வைக்கும்போதே, இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் படுகாயம்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில், #AdmkFails என்ற ஹேஷ்டேக்கோடு பதிவிட்டுள்ளார். `



source https://www.vikatan.com/government-and-politics/controversy/2-children-injured-in-karur-amma-mini-clinic-accident

மீண்டும் 'அண்ணாத்த' ஸ்பாட்டில் ரஜினி, அனல்பறக்கும் ஏப்ரல் ரிலீஸ், சென்னை டெஸ்ட்டில் ரசிகர்கள்?!

ஏப்ரல் ரிலீஸ் ரேஸ்!

ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கோலிவுட்டில் ரிலீஸ் ரேஸ் அனல் பறக்க இருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் தனுஷின் 'கர்ணன்', கார்த்தியின் 'சுல்தான்', சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' என அதிகம் எதிர்பார்ப்பிலுள்ள மூன்று படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கின்றன. 'கர்ணன்', 'டாக்டர்' என இரண்டு படங்களும் முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில், 'சுல்தான்' படத்தில் மட்டும் இன்னும் சில நாள் ஷூட்டிங் இருக்கிறதாம். 'பொன்னியின் செல்வன்' இடைவெளியில் கார்த்தி வந்துவிட்டால் 'சுல்தான்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிடும் என்கிறார்கள். ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ்படம் 'சுல்தான்' என்பது குறிப்பிடத்தக்கது!

சென்னையில் ஆப்பிள்?!

ஐபோன் 11

ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளுக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட இருக்கின்றன. டாடா எலெக்ட்ரானிக்ஸ், Pegatron, Luxshare ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அமைக்கின்றன. ஐபோன் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம் பெகட்ரான் என்பது குறிப்பிடத்தக்கது. பெகட்ரான் நிறுவனம் மறைமலைநகரில் உள்ள மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது. இந்நிறுவனம் மூலம் 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாரூக்கானின் 'பதான்'!

ஷாருக் கான், தீபிகா படுகோன்

2018-ல் ரிலீஸான 'ஸீரோ' படத்துக்குப்பிறகு புதிதாக எந்தப்படத்தையும் ஷாருக்கான் தொடங்கவில்லை. தொடர்ந்து படங்கள் தோல்வியடைந்ததால் சினிமா பயணத்தில் இரண்டு வருட பிரேக் போட்ட ஷாருக்கான், இப்போது 'பதான்' எனும் புதிய படத்தை தொடங்கியிருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் துபாயில் தொடங்கியிருக்கிறது. ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க, ஜான் ஆபிரகாம் முக்கிய கேரெக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் 'அட்லி' இயக்கும் ஷாருக்கான் படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கயிருக்கிறது.

சென்னை டெஸ்ட்டில் ரசிகர்கள்?!

இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையிலேயே பிப்ரவரி 13-ம் தேதி தொடங்குகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் ரசிகர்கள், மீடியா என யாருக்கும் அனுமதியில்லை என்று முடிவெடுக்கப்பட்ட நிலையில், இப்போது இரண்டாவது டெஸ்ட்டுக்கு ரசிகர்களை அனுமதிக்கும் முடிவை எடுத்திருக்கிறது பிசிசிஐ. தமிழக அரசின் அனுமதி கிடைத்ததும் இரண்டாவது டெஸ்ட்டுக்கான டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் 'அண்ணாத்த' ஷூட்டிங்!

'அண்ணாத்த'

கொரோனா பரவல் மற்றும் ரஜினியின் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பரில் பாதியில் நிறுத்தப்பட்ட 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது. பிப்ரவரி மாத இறுதியில் ரஜினி ஷூட்டிங்கிற்கு வர விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் சன் பிக்சர்ஸுக்கு நெருக்கமானவர்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/rajnikanths-annathe-shoot-ready-to-resume

மத்திய பட்ஜெட் 2021: இன்று 11 மணிக்கு தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்! #LiveUpdates

நாடாளுமன்றம் புறப்பட்டார் நிதியமைச்சர்

பட்ஜெட் ஆவணங்களுடன் நிதியமைச்சகத்திலிருந்து நாடாளுமன்றம் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்

11 மணிக்கு தாக்கலாகும் மத்திய பட்ஜெட் 2021

கோவிட் 19 பெருந்தொற்றால் நாட்டின் நிதிநிலைமை மோசமான நிலையில் இருக்கும் சூழலில் இன்று மத்திய பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சராக இவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இது.

Union Budget 2021

கோவிட்-19 காரணமாக பெரும்பாலான தொழில்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. எனவே தொழில்துறைக்கு கைகொடுக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் முக்கிய சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக பேப்பர்லெஸ் பட்ஜெட்டாகவும் இந்த பட்ஜெட் அமைகிறது. இதையடுத்து பட்ஜெட் ஆவணங்களை மக்கள் படிப்பதற்கு ஏதுவாக `Union Budget' என்னும் செயலியையும் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

Also Read: Union Budget 2021: பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு... நம்பிக்கை கொடுத்த நிர்மலா சீதாராமன்!



source https://www.vikatan.com/business/budget/union-budget-2021-live-updates

இன்னும் எத்தனை `புஷ்பா'க்களின் தீர்ப்புகள் நம் கவனத்திற்கு வராமல் போயிருக்குமோ?! #VoiceOfAval

``ஓர் ஆண், ஒரு குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு, அவள் முன்னிலையில் தன் பேன்ட்டை அவிழ்த்தால்... அது பாலியல் தாக்குதல் ஆகாது."

- இது யாரோ ஒரு வக்கிரக்காரரின், ஆணாதிக்கவாதியின் கூற்று அல்ல. மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.

நீதிபதி புஷ்பா கனெடிவாலா, குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தாக்குதல் வழக்குகளில் இப்படித்தான் `நீதி'யை எழுதுகிறார். கடந்த வியாழன் அன்று, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளைக்கு வந்த மேல்முறையீட்டு வழக்கில் இவர் எழுதியுள்ள தீர்ப்பில் உள்ள வரிகள்தான் மேலே சொன்னவை. இவர்தான், `ஆடைக்கு மேலே கை வைத்து சிறுமியின் மார்பை அழுத்துவது, பாலியல் தாக்குதல் என்ற சட்டப் பிரிவின் கீழ் வராது' என்று சமீபத்தில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியவர். மக்களின் கடும் கண்டனங்கள் காரணமாக, உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்குக் கடந்த புதன்கிழமை தடை விதித்தது. அதற்கு மறுநாளே, நீதிபதி புஷ்பா இப்படி ஒரு தீர்ப்பை எழுதியிருக்கிறார் என்றால், அந்த வழக்காடு மன்றத்தில் நீதிக்கான உத்தரவாதம் என்ன?

Sexual Abuse (Representational Image)

Also Read: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மும்பை உயர்நீதிமன்ற `சர்ச்சை' தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!

12 வயதுச் சிறுமியை 39 வயது ஆண் பாலியல் கொடுமை செய்த மேல்முறையீட்டு வழக்கில், சட்டத்தின் பிரிவுகளைக் காட்டி, ``தோலும் தோலும் தொட்டுக்கொள்ளும்படி எந்தத் தப்பும் நடக்கல. ஆடை மேல கைவெச்சு மார்பை அழுத்துறது அவ்ளோ பெரிய குற்றமல்ல. அதனால, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலுக்குத் தர்ற 3 - 8 வருஷம் சிறைத்தண்டனையெல்லாம் இதுக்குத் தேவையில்ல. `பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு' என்ற பிரிவின் கீழ் ஒரு வருஷம் போதும்" என்பது, ஜனவரி 19 அன்று நீதிபதி புஷ்பா அளித்த முந்தைய தீர்ப்பு. மக்களின் கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

தடை வந்த மறுநாளே, 5 வயதுக் குழந்தையை 50 வயது ஆண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிய வழக்கின் மேல்முறையீட்டில், ஜஸ்டிஸ் புஷ்பா அதே `நீதி'யை எழுதியுள்ளார். இந்த வழக்கில் புகார் அளித்திருந்த பெண், ``நான் வேலைக்காக வெளியில் சென்றுவிட்டேன். வேலை முடிந்து வீடு திரும்பியபோது, என் குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர் தன் பேன்ட்டின் ஸிப்பை அவிழ்த்தபடி நின்றார். மேலும், அவர் என் குழந்தையை படுக்கைக்கு உறங்க வருமாறு அழைத்ததாக என் குழந்தை கூறினாள்" என்று தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

Woman Abuse (Representational Image)

படிக்கும்போதே பதறவைக்கும் இந்தக் குற்ற வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences) சட்டம் பிரிவு 10-ன் கீழ் 5 வருடங்கள் சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தது கீழமை நீதிமன்றம். இதன் மேல்முறையீட்டு வழக்கில், ``குழந்தை முன் பேன்ட்டை அன்ஸிப் செய்வதை பாலியல் தாக்குதல் என்று கொள்ள முடியாது. அது பாலியல் தொல்லை என்றே கொள்ளப்படும்" என்று தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி புஷ்பா, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து அவரை விடுவித்துள்ளார்.

பொதுவாக, தங்களுக்கு நடக்கும் பாலியல் தாக்குதல்களை பெண்களும், தங்கள் பிள்ளைகளுக்கு நடக்கும் பாலியல் தாக்குதல்களை பெற்றோர்களும், சமூக மதிப்பீடுகளுக்கு அஞ்சி மறைக்கும் போக்கே இங்கு பெரும்பான்மை. அதையும் தாண்டி பதிவுக்கு வருவது சில வழக்குகளே. அதிலும், சில காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள் செய்யும் `நடந்தது நடந்துபோச்சு, சரி சரி விடுங்க' பஞ்சாயத்துகளுடன் வீடு திரும்பிவிடுகின்றன.

இத்தனை கட்டங்களையும் தாண்டி கீழமை நீதிமன்றம் வரை வழக்கை எடுத்து வந்து நீதி பெற்று, அவ்வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குச் சென்றபோது அங்கேயும் தளராது சென்ற இந்த 5, 12 வயதுச் சிறுமிகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், நீதிபதி புஷ்பாவின் தீர்ப்புகள் சொல்லியிருக்கும் செய்தி என்ன? ``உங்களுக்கு நடந்தது அவ்ளோ பெரிய விஷயமில்ல, அதெல்லாம் பாலியல் தாக்குதல் கணக்குல வராது, அதனால குறைந்தபட்ச தண்டனைதான் கொடுக்க முடியும்" என்பதைத்தானே?

Court (Representational Image)

Also Read: `ஆடையில்லாமல் தொட்டால்தான் பாலியல் தாக்குதலா?!' - என்ன சொன்னது மும்பை உயர்நீதிமன்றம்?

சம்பந்தப்பட்ட இரு வழக்குகளிலும், அச்சிறுமிகளின் அம்மாக்கள் சம்பவம் நடந்தபோது அங்கு சென்று சேர்ந்ததால், அவர்கள் மீட்கப்பட்டார்கள். ஒருவேளை அப்போது அவர்கள் அங்கு சென்றிருக்கவில்லை எனில்..? இதுபோன்ற சூழல்களில் உயிர்வரை பறிக்கப்பட்ட எத்தனை குழந்தைகளை நாம் பார்த்துள்ளோம்? இந்தக் குற்றத்தில் ஓர் ஆணின் நோக்கம் என்ன, இந்தக் குற்றத்தின் தன்மை என்ன, அது அச்சிறுமிகளுக்கு வாழ்நாள் முழுக்க ஏற்படுத்தக்கூடிய மன அதிர்வுகள் என்ன என்பதைக்கூட உணராமல், ஒரு பெண் நீதிபதியால் எவ்வாறு இந்தத் தீர்ப்புகளை எழுத முடிகிறது?

ஆண்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் இந்த உலகத்தில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்த, இத்தனை ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாகப் போராடிய சமூகச் செயற்பாட்டாளர்களின், பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் முயற்சிகள் அடர்த்தியானவை. அக்குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு சட்ட தண்டனைகள் மூலம் உண்டாக்கப்பட்டுள்ள அச்சமென்பது, பல சட்டத் திருத்தங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்தத் தீர்ப்புகளில் உள்ள சில வரிகள், அந்த முன்நகர்வுகளை எல்லாம் பின்னோக்கி எட்டி உதைத்துவிட்டிருக்கின்றன.

மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்த புஷ்பாவை, நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொலிஜீயம் அளித்திருந்தது. நீதிபதி புஷ்பாவின் இந்த இரண்டு சர்ச்சைக்குரிய, ஆபத்தான தீர்ப்புகளையும் தொடர்ந்து, இப்போது உச்ச நீதிமன்றம் தன் பரிந்துரையைத் திரும்பப் பெற்றுள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான நீதிக்கு வழி என்ன?

இதில் இன்னோர் அச்சமும் ஏற்படுகிறது. இது மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால், ஒரு வைரல் அலை மூலம் நாட்டின் கண்களுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் எத்தனை தீர்ப்புகள் நீதிக்குப் புறம்பாக நம் நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன தெரியவில்லை. கீழமை நீதிமன்றங்களில் எத்தனை சிறுமிகளும் பெண்களும், `உங்களுக்கு நடந்தது அவ்வளவு மோசமான விஷயம் ஒண்ணுமில்ல' என்று சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள் தெரியவில்லை. `அதுக்காக மூணு வருஷம் சிறைத்தண்டனையெல்லாம் கொடுக்க முடியாது' என்று எத்தனை குற்றவாளிகள் சட்டப் பிரிவுகளின் சந்துகள் வழியாக வெளியேற வைக்கப்படுகிறார்கள் தெரியவில்லை.

Supreme Court

சென்ற நூற்றாண்டுகளில் காணப்பட்ட பல சமூகக் குற்றங்கள் படிப்படியாகக் குறைந்தும், சில குற்றங்கள் மறைந்தும் வருவதைப் பார்க்கிறோம். ஆனால், பெண் இனத்துக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மட்டும் வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன. நிர்பயா முதல் ஹத்ராஸ் பெண் வரை ஒவ்வோர் உயிரை கொடூரமாகப் பலிகொடுக்கும்போதும், இதற்குத் தீர்வுதான் என்ன என்று நாம் அயர்ந்திருக்கும் நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுவது எத்துணை ஆபத்தானது?

இப்போது இதைப் படியுங்கள். உங்கள் பெண் குழந்தையை, ஓர் ஆண் தனியாக அழைத்துச் சென்று, அவள் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, அவள் முன்னிலையில் தன் பேன்ட்டின் ஸிப்பை அவிழ்க்கிறான். உங்கள் குழந்தை மிரள்கிறாள். ஆனாலும், அந்த ஆண் செய்தது பாலியல் தாக்குதல் ஆகாது. அதிகம் பதறுகிறது அல்லவா? எந்தச் செய்தியும் இங்கு செய்தி மட்டுமேயல்ல, யாரோ ஒருவரின் வாழ்வே. அது நாளை நம் வீட்டிலும், நமக்கும் நடக்கலாம் என்பதே நிதர்சனம். எனவேதான், அறம் மூச்சடைக்கப்படும்போதெல்லாம் சமூகத்தின் குரல் ஒன்றுபடுவது அவசியமாகிறது. `சிறுமியின் மார்பை ஆடைக்கு மேல் அழுத்தியது பாலியல் தாக்குதல் அல்ல' என்ற தீர்ப்புக்கு அப்படியாக ஒருங்கிணைந்து எழுந்த குரல்களே, அதை தடைசெய்ய வைத்தது.

இப்போது மீண்டும் உரக்கச் சொல்வோம்... Holding kid's hand and unzipping pant is undoubtedly a sexual assault.

- அவள்

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!


source https://www.vikatan.com/social-affairs/women/why-bombay-hc-judge-pushpa-ganediwala-judgments-on-sexual-abuse-cases-are-dangerous

மதுரை: பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு! - பா.ஜ.க-வினரை உற்சாகப்படுத்திய ஜெ.பி.நட்டா விசிட்

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் மதுரை வருகையில் கோயில் தரிசனம், நிர்வாகிகள் கூட்டங்களில் கலந்துகொண்டு தேரதலுக்கான பல ஆலோசனைகளை வழங்கினார். மேலும், தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்திலும் பேசியதால் தமிழக பா.ஜ.க-வினர் உற்சாகமாகியுள்ளனர்.

பா.ஜ.க பிரசாரப் பொதுக் கூட்டம்

கடந்த 29-ம் தேதி இரவு தனி விமானத்தில் மதுரை வந்த ஜே.பி.நட்டா, 30-ம் தேதி காலையில் மனைவியுடன் சென்று மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்பு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

ரிங் ரோடு அருகேயுள்ள அரங்கத்தில் தமிழக அளவிலான பா.ஜ.க உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தேர்தலைச் சந்திப்பது பற்றி ஆலோசனைகளை ஜெ.பி.நட்டா வழங்கினார்.

ஜெ.பி.நட்டா

அதன்பின்பு பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, வருகிற தேர்தலில் அவர்களின் பங்கு எப்படி இருக்க வேண்டுமென்று பேசினார்.

இப்படி தொடர்ச்சியாக கட்சியின் சார்பு அணிக் கூட்டங்களில் கலந்துகொண்ட ஜெ.பி.நட்டாவை, ஜெயலலிதா கோயிலைத் திறந்து வைக்க மதுரை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி உடனே சென்ன கிளம்பிவிட்டார்.

ஜெ.பி.நட்டா

அன்று மாலையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மட்டும் நட்டாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்பட்டது.

மாலையில் பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெ.பி.நட்டா, ``தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

ஜெ.பி.நட்டா

மதுரையில் மீனாட்சியம்மனின் ஆசியுடன் மதுரை மக்களின் ஆசியையும் பெற்றுள்ளேன். காந்தி நினைவு தினம் கொண்டாடப்படும் இந்நாளில் மதுரைக்கும் காந்திக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நினைத்துப் பார்க்கிறேன்.

மீனாட்சியம்மன் ஆட்சி செய்த மதுரையை ராணி மங்கம்மாள், சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி செய்தார்கள். தமிழ் கலாசாரத்தை வளர்த்தார்கள். நம் பிரதமரும் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

Also Read: ராகுல் - நட்டா- மோகன் பகவத் தமிழக விசிட் என்ன பின்னணி?| Vikatan Tv

தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கியது மோடி ஆட்சியில்தான். மதுரையில் எய்ம்ஸ், சென்னையில் மெட்ரோ என்று பல திட்டங்களைக் கொடுத்தது இந்த ஆட்சியில்தான்.பா.ஜ.க-வை குறைகூறும் தி.மு.க போன்றவை தீவிரவாதக் கட்சிகளாக உள்ளன. திமுக, காங்கிரசால் தமிழகம் சரிவடைந்துள்ளது. இப்போது, தி.மு.க-வினர் வேல் எடுத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அதற்கு பா.ஜ.கதான் காரணம்.

பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த கட்சியினர்

அ.தி.மு.க எப்போதும் தேசிய நீரோட்டத்தோடு இணைந்து செல்ல விரும்பும் கட்சி. அதனால், அ.தி.மு.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்போம். இக்கூட்டணி பெரும் வெற்றி பெறும்" என்றார்.

ஜெ.பி.நட்டா ஒரு நாள் முழுவதும் மதுரையில் தங்கியிருந்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், ஐடி விங் நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர், சமுதாயத் தலைவர்கள் உட்பட பா.ஜ.க சார்பு அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார். அத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திலும் பேசிவிட்டுச் சென்றதால் பா.ஜ.க-வினர் உற்சாகமாகியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/politics/jp-naddas-madurai-visit-highlights

புதுச்சேரி: `சங்கடங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமான்!’- ஜெ.பி.நட்டாவைப் புகழ்ந்த நமச்சிவாயம்

புதுச்சேரி ஏ.எஃப்.டி மைதானத்தில் ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா, புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி, சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நமச்சிவாயம், ``உலகிலுள்ள சங்கடங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமானைப் போற்றும் சங்கடஹர சதுர்த்தி நாளில் பா.ஜ.க தலைவர் நட்டா புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கிறார்.

பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவுடன் நமச்சிவாயம

தமிழக பண்பாட்டோடும், தமிழர் அடையாளத்தோடு நம் முன்னே அவர் வந்திருப்பது கோடிக்கணக்கான மக்களை மதிக்கும் விஷயம். தமிழர்களின் பண்பாடுகளை மாறாமல் காக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் கொள்கை - கோட்பாடு. வெவ்வேறு மாநிலங்களில் பிறந்தாலும் நாம் அனைவரும் ஒரே குடும்பம், பாரத அன்னையின் பிள்ளைகள். புதுவை மாநில மக்களின் சங்கடங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமானாக ஜெ.பி நட்டா இருக்கிறார். நானும், தீப்பாய்ந்தானும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த போது நட்டா, அமித்ஷா, சந்தோஷ், சுரானா, சாமிநாதன் ஆகியோர் எங்களை தாயுள்ளத்தோடும், பாசத்தோடும், பரிவோடும், சகோதரத்துவத்துடனும் வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதுவை மாநிலத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த மாநாடு.

இது வெறும் மாநாடு அல்ல. புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கான மாநாடு. புதுவை மாநில வளர்ச்சிக்காகவும் மாநில மக்களுக்காகவும்தான் இங்கு கூடியிருக்கிறோம். எனவேதான் அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள். முதல்வர் நாராயணசாமியால் தாழ்ந்திருக்கும் இந்த புதுவை மாநிலத்தை தலைநிமிரச் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். என் மீது அன்பு கொண்டவர்கள், `ஏன் பா.ஜ.க-வில் சேர்ந்தீர்கள்?’ என்று என்னைக் கேட்டார்கள்.

Also Read: புதுச்சேரி: காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம்; அமைச்சர், எம்.எல்.ஏ ராஜினாமா! - பின்னணி என்ன?

அவர்களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான். புதுச்சேரியில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். புதுச்சேரி பலம்பெற வேண்டும். புதுச்சேரி மேம்பட வேண்டும் என்றால் தாமரை வாழ்ந்தாக வேண்டும். தாமரை மலரும்போது புதுவை மாநிலம் ஒளிரும். புதுவை மாநில மக்களும் உணர்வார்கள் வாழ்வார்கள். எனவே, 2021-ம் ஆண்டு புதுச்சேரியில் தாமரை ஆட்சி மலர நாம் அனைவரும் சபதம் ஏற்போம்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/puducherry-namasivayam-praises-jp-natta

ஏன் ஜாதவ், சாவ்லாக்களைத் தேடி ஓட வேண்டும்... மணிமாறன், ஜெகதீசன், அபராஜித்கள் வென்ற கதை தெரியுமா?!

ஒரே ரன் வித்தியாசத்தில் போன முறை கை நழுவிப்போன கனவுக் கோப்பை..... பதினான்கு வருடக் காத்திருப்புக்குப் இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்குள் வந்து சேர்ந்துவிட்டது. சையது முஸ்தாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் பரோடாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி. போட்டியின் முதல் பந்திலிருந்தே 'கப்பு முக்கியம் தினேஷு' என்பதை உணர்ந்து அந்த நோக்கத்தோடே காய்களை நகர்த்திய தினேஷ் கார்த்திக், அதை, தனது சுழல் படை மற்றும் பேட்டிங் படை கொண்டு சாதித்துக் காட்டியிருக்கிறார்.

அரையிறுதிப் போட்டிகளில், ராஜஸ்தானைத் தோற்கடித்து தமிழ்நாடும், பஞ்சாப்பை வீழ்த்தி பரோடாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தன. இதுவரை இரண்டு முறை சையத் முஸ்தாக் கோப்பையை வென்ற பரோடாவும், ஒருமுறை கோப்பையைக் கையிலேந்தியுள்ள தமிழ்நாடும், இந்த வருட சாம்பியனாக முடிசூட்டிக் கொள்ள முட்டி மோதிக் கொண்டன. அஹமதாபாத்தில் நடைபெற்றது, இந்த பரபரப்பான இறுதிப் போட்டி.

இறுதிப் போட்டி ஏற்றும் அழுத்தத்தைக் கணக்கில் கொண்டும், போன வருடம் ஒரு ரன்னை எடுக்க முடியாமல், கர்நாடகாவிடம் கோட்டை விட்டதை மனதில் நிறுத்தியும், டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக், பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அழுத்தமோ பயமோ எதுவும் எங்களை எதுவும் செய்து விடாது என்று துணிவைத் துணை கொண்டு, பனிப்பொழிவுவின் மீதும் நம்பிக்கை வைத்து, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார் தினேஷ்.

குர்னால் பாண்டியா என்ற மிகப்பெரிய ஆளுமையை, தொடரின் இடையில் இழந்ததால் வலிமை குன்றிக் காணப்பட்ட பரோடாவின் பேட்டிங் லைன் அப்பைப் பந்தாடும் நோக்கோடே களம் கண்டது தமிழ்நாடு. இந்தத் தொடரில் தமிழ்நாட்டின் ஒரே பலவீனமாகக் கருதப்பட்ட பவர்ப்ளேவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு திணறுகின்றனர் என்ற வார்த்தைகளையும் பொய்யாக்க வேண்டும் என்ற முனைப்போடே பந்துடன் புறப்பட்டு வந்தனர், தமிழ்நாட்டின் பௌலர்கள்.

ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என பிட்ச் ரிப்போர்ட் கூற, தினேஷ் கார்த்திக், தன்னுடைய ஸ்பின் ட்வின்களான, சாய் கிஷோர் மற்றும் பாபா அபராஜித்துடன் தாக்குதலைத் தொடங்கினார். பரோடாவின் பக்கம், தேவ்தர் மற்றும் ரத்வா ஓப்பனர்களாகக் களமிறங்கினர். இந்தத் தொடரில் ரன்மழை பொழிந்த தேவ்தர், பவுண்டரியுடன் முதல் பந்துக்கு வரவேற்புக் கொடுக்க, இன்றைய போட்டி, கடந்த ஆண்டு இறுதிப்போட்டியைப் போலவே அனல்பறக்கப் போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், போட்டியின் இரண்டாவது ஓவரில், தனது முதல் பந்திலேயே ரத்வாவேவின் விக்கெட்டை வீழ்த்தி அதிரடி காட்டினார் அபராஜித். இதன்பிறகு விஷ்ணு சோலாங்கி இறங்க, தன்னுடைய வார்ப்பான மணிமாறன் சித்தார்த்தை தினேஷ் இறக்கினார். அந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசிய அபாயகரமான தேவ்தரை, அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்பில் வீசிய பந்தின் மூலமாக, மணிமாறன் காலி செய்ய, பரோடாவின் வீழ்ச்சி தொடங்கியது.

சொலாங்கியைத் தவிர அதற்கடுத்து வந்த அத்தனை பேட்ஸ்மேன்களையும் ஒற்றை இலக்கத்தில் அனுப்பி வைத்து தமிழ்நாட்டின் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்தார் மணிமாறன் சித்தார்த். அவர் ஸ்மித் படேலை எல்பிடபிள்யூவில் வீழ்த்த, பாணுரன் தானாகவே அவுட்டாகி வெளியேறினார். காட் அண்ட் பெளலிங்கில் மணிமாறன் அபிமன்யூவையும், போல்டாக்கி கக்காடேவையும் அனுப்பி, விக்கெட் எடுக்க இருக்கும் அத்தனை வழிகளிலும் வகைக்கொன்றாய் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 9 ஓவரின் முடிவில், 36/6 என்ற நிலையில் பரோடா திணற, 36 என்ற எண்ணின் அச்சமூட்டும் நினைவுகள் ஒருமுறை பரோடா ரசிகர்களுக்கு வந்து போக, சையத் முஸ்டாக் அலி தொடர் வரலாற்றில் குறைவான ஸ்கோரான 30-ஐ தாண்டியதே போதும் என நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இதற்கடுத்து இணைந்த சொலாங்கி ஷேத் கூட்டணிதான் பரோடா அணியை அவமானகரமான தோல்வியிலிருந்து மீட்டெடுத்தது. ஹரியானாவுக்கு எதிரானப் போட்டியில், கடைசி மூன்று பந்தில் 16 ரன்களை எடுத்து, அணியை அரையிறுதிக்கு அழைத்து வந்த, அதே பொறுப்பான ஆட்டத்தை நேற்றும் கையிலெடுத்தார் சொலாங்கி.

இந்த இருவரும் அணியின் ஸ்கோரை, தங்களது 58 ரன்கள் பார்னர்ஷிப்பால், 94-க்கு எடுத்துச் சென்றுபோது, அடுத்தடுத்த பவுண்டரிகளால் பயமுறுத்திக் கொண்டிருந்த ஷேத்தை சோனு யாதவ் அனுப்பிவைத்தார். இதற்கடுத்து உள்ளே வந்த பாட், சொலாங்கியுடன் இணைந்து அதிரடி காட்ட, 9 பந்துகளில் 26 ரன்களை அதிரடியாகக் குவித்தது இந்தக் கூட்டணி! எனினும் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த தமிழ்நாடு, 120 ரன்களுக்கு பரோடாவைச் சுருட்டியது.

13 ஓவர்கள் வரை சுழலினாலேயே ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, காரியத்தை முடித்தது தமிழ்நாடு. எனினும் சொலாங்கி மற்றும் ஷேத் கூட்டணி, பரோடாவை பள்ளத்தாக்கில் இருந்து மீட்டெடுத்திருந்தது.

இலக்கு எளிதானது, பலமான பேட்டிங் வரிசை இருக்கப் போகிறது, பனிப்பொழிவும் பக்கபலமாக இருக்கப் போகிறது என அத்தனை நேர்மறையான விஷயங்களுடனும் தனது இன்னிங்சைத் தொடங்கியது தமிழ்நாடு. இந்தத் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெகதீசனை, இந்தத் தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மெரிவாலா, வெறும் 14 ரன்களுடன் அனுப்பி வைக்க, உள்ளே வந்த அபராஜித், நிஷாந்த்துடன் ஜோடி சேர்ந்தார்.

பரோடா பௌலர்களின் திறமையான பந்துவீச்சாலும், மைதானத்தின் ஒத்துழையாமையாலும், ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்கள் திணற, ரன்களை மெதுவாகவே சேர்த்தது தமிழ்நாடு. அவர்களது நிலையை இன்னும் இக்கட்டில் தள்ளுவதைப் போல, 12-வது ஓவரில் பதான், செட்டில் ஆகி ஆடிக் கொண்டிருந்த நிஷாந்தை வெளியேற்ற, 52 பந்துகளில் 54 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது தமிழ்நாடு.

விக்கெட்டுகளால் மட்டுமே கோப்பையைத் தங்களை நெருங்க வைக்க முடியும் என முடிவு செய்த பரோடா பலவகைகளிலும் அதற்கு முயற்சித்தது‌. ஆனால் ரன்களை ஒவ்வொன்றாய்ச் சேர்த்த தமிழ்நாடு பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழக்கூடாது என்பதில் கவனமாக இருக்க, பந்தும் தேவைப்படும் ரன்களும் சரிசமமாகவே சென்று கொண்டிருந்தன. இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்து, உண்டான அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்த தினேஷ், திரும்பவும் ஒரு பெரிய ஷாட் ஆட முயற்சித்து, ஷேத் பந்தில், சொலாங்கியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தேவைப்படும் ரன்களுக்கும் பந்துகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான ஓட்டப்பந்தயத்தில் ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறத் தொடங்கியது. மெரிவாலாவின் ஓவரில் பவுண்டரி அடித்த ஷாருக்கான் தமிழக ரசிகர்களின் ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைத்தார். பின் இதற்குமேல் பொறுமையில்லை என்பதைப் போல, லாங் ஆனில் அடித்த அற்புத சிக்ஸால், ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்தார். மேலும் துரிதகதியில், வெற்றிக் கோட்டை, அந்த ஓவரின் கடைசிப் பந்திலேயே மேலும் ஒரு பவுண்டரியோடு தொட, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில், 12 பந்துகள் மிச்சமிருக்கும் போதே, அற்புதமான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது தமிழ்நாடு.

ஹர்திக், குர்னால், தீபக் ஹூடா போன்ற சிறந்த வீரர்கள் இல்லாமலே இந்தளவு சாதித்ததிருக்கிறது பரோடா. தமிழ்நாட்டின் தரப்பிலோ, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சுழலில் மாயாஜாலம் காட்டி, கேப்டன் தன் மேல் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியதோடு இல்லாமல் தன்னுடைய திறனையும் முழுவதுமாய் நிரூபித்து, அழகிய தமிழ் மகனாக ஜொலித்தார் மணிமாறன் சித்தார்த். பல ஆண்டுகளாகக் காத்திருந்த வெற்றிக் கோப்பையைக் களிப்புடன் கையிலேந்தியுள்ளனர் தமிழக வீரர்கள். 2006-ம் ஆண்டு தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப்பில் முதன்முறையாகக் கோப்பையை வென்ற தமிழகம், இத்தனை ஆண்டுகள் கழித்து மறுபடியும் அவரது மேலான தலைமையிலேயே அதைச் சாதித்திருப்பதுதான் கூடுதல் சிறப்பு.

வாழ்த்துகள் சாம்பியன்ஸ்!



source https://sports.vikatan.com/cricket/how-tamilnadu-won-the-syed-musta-ali-trophy-2021