பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
``ஐயோ என் புருஷனுக்கு என்னாச்சுன்னு தெரிலயே இப்படி வயிறு வலில துடிக்கிறாரே.. இப்போ நான் என்ன செய்வேன்"
வசனத்தை வேறு வேறு விதமான குரல் மாற்றத்தோடு நடித்துப் பார்த்துக் கொண்டே மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன்.
ஒரு வாரத்திற்குப் பின் எங்கள் பள்ளியில் நடக்கவிருக்கும் நுகர்வோர் நாடகத்திற்காகத் தான் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் பள்ளியில் நுகர்வோர் மன்றம் சார்பாக நாடகப் போட்டி நடக்கப் போவதாகவும் அதற்கு தலைப்பு நுகர்வோர் என்றும் கூறினர்.
நுகர்வோர் என்றால் பொருட்களை வாங்குவோர்(consumer) என்று மட்டும் தான் தெரியும். அதில் எப்படி நாடகம் நடிப்பது என்று குழப்பத்தில் ஆசிரியை இந்திரா காந்தியின் உதவியை நாடினோம்.
"சிம்பிள்லா சொல்லனும்னா பால் ல தண்ணி கலந்து கலப்படம் பண்றாங்க.. கெட்டே போகாத தேன்ல வெல்ல தண்ணி, சக்கரை பாகு ஊத்தி கெட்டுப் போக வெக்கறாங்க.. அரிசில கல் கலக்கறாங்க.. இன்னும் கலப்படத்த பத்தி பேசிக்கிட்டே இருக்கலாம்.. அவ்ளோ கலப்படம் நடக்குது நம்ல சுத்தி.. நமக்கு இப்போ நிறைய நோய் வரதுக்கு காரணமே கலப்படம் தான்"
ஆசிரியர் கூறுவதை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தோம் நாங்கள்.
எங்களுக்குள் குமுறல் சத்தம் 'மனிதாபிமானம் அற்று எப்படி இப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள்... மனித உயிர்களை பற்றி இவர்களுக்கு கவலையில்லையா... அப்படி சம்பாரித்து என்ன செய்யப் போகிறார்கள்!!'
"நீங்க உங்க ட்ராமால என்ன மத்தவங்களுக்கு புரிய வெக்கணும்னா.. கலப்படம் பண்ண உணவ சாப்டா வரை தீமை... அதோட விளைவு. அப்புறம் கலப்படம் பண்ணிருக்குனு தெரிஞ்சா நம்ம வழக்கு தொடுக்கலாம்.. இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 அப்புறம் உணவு கலப்பட தடைச் சட்டம் 1954 இத பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தற மாதிரி நாடகம் பண்ணுங்க.. "
அனைவரும் குறிப்பு எடுத்துக்கொண்டோம். வீட்டில் இது பற்றி சிந்தித்து கதை தோன்றினால் எழுதிக் கொண்டு வருவோம் என்று எங்களுக்குள் கலந்து ஆலோசித்து முடிவெடுத்தோம்.
மறுநாள்..
யாவரும் ஒரு வரியில் கதையை யோசித்து வர.. நூர்ஜஹானோ கதை திரைக்கதை வசனங்கள் வரை எழுதிக் கொண்டு வந்துவிட்டாள். அவளின் முயற்சியைக் கண்டு வியப்படைந்தேன்.
கதையும் பிறரை கவரும் வண்ணம் இருந்தது. மனிதாபிமானம் கலந்த நகைச்சுவை உணர்வோடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதம் இருந்தது கதை.
யாருக்கு என்ன கதாபாத்திரம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் மீதியை நான் ஏற்று கொள்கிறேன் என்று கூறினாள் நூர்ஜஹான். இவ்வளவு கஷ்டப்பட்டு கதை யோசித்து வசனங்கள் எழுதியிருந்தும் கிடைக்கும் பாத்திரத்தில் நடிக்கிறேன் என்று அவள் கூறியது அவளை என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் வைத்தது.
Also Read: ``என் அப்பா பொழைக்கத் தெரியாதவராம்...!’’ - மகளின் ஆதங்கம் #MyVikatan
கதைக்கு வருவோம்..
சித்ரகுப்தன் பாவக் கணக்கு எழுதும் போது அதிகம் கலப்படம் செய்வோர் பற்றி எழுதுவது போலவும் அது பற்றி எமன் கேட்க பூலோகத்திற்கு நேரடியாக வந்து பார்ப்பதாக நாடகம் தொடங்குகிறது.
எனக்கு மனைவி கதாபாத்திரம்.. என் கணவன் செங்கல் தூள் கலந்த மிளகாய்த்தூளில் செய்த குழம்பை சாப்பிட்டுவிட்டு வயிறு வலியில் துடிக்கிறான்.
அந்த வேடத்தில் ஃபாத்திமா நன்கு பொருந்திப் போய் கதறினாள்.
நூர்ஜஹானுக்கு கிடைத்தது மருத்துவர் வேடம். நான் அழுவதை சற்று காமெடி கலந்து கொண்டுபோவது போலவும் செங்கல் தூளினால் ஏற்பட்ட அபாயத்தை அழுத்தமாகக் கூறுவது போலவும் இருந்தது நூர்ஜஹானின் நடிப்பு.
நீதிமன்றத்தில் எங்கள் வக்கீலாக ஜெயப்ரியா. எனக்கு பிடித்தமான தோழி நடிப்பிலும் பின்னிவிட்டாள்.
நீதிபதியாக ஷோபனா மிளகாய்பொடியில் செங்கல்பொடி கலந்து இருப்பதை சரிபார்த்து விட்டு தீர்ப்பு சொல்ல வேண்டும். அங்கு தான் நாங்கள் சொதப்பிவிட்டோம்.
என் கணவனின் மருத்துவ அறிக்கை மற்றும் மிளகாய் பொடியில் கலப்படம் இருக்கும் சான்றிதழையும் சரிப்பார்த்து விட்டு அங்கே வைத்திருந்த மிளகாய் பொடியை சோதித்து கீழே வைத்துவிட்டு எதுவும் பேசாமல் அமர்ந்து விட்டாள். அடுத்து தீர்ப்பு சொல்ல வேண்டும் ஆனால் அவளோ அமைதியாக அமர்ந்து விட்டாள்.
அவள் பேசுவாள் என்று நாங்களோ அவள் முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்க அவள் மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நானும் ஜெயப்ரியாவும் நேருக்கு நேர் பார்க்கையில் எங்களுக்குள் சிரிப்பு மூண்டது. இருவரும் வாய் விட்டுச் சிரிக்க என் வயிற்று வலி கணவனும் சிரிக்க மொத்த நாடகமும் சிரிக்க இன்னும் ஒன்றும் விளங்காதவளாய் ஷோபனா அமர்ந்து இருக்க.. "தீர்ப்பு சொல்லுடி" என்று மெல்லிய ஓசையில் அவளிடம் நாங்கள் சொல்ல.. எப்படியோ இறுதியில் நன்றாக முடித்து விட்டோம்.
மேடையை விட்டு கீழே இறங்கியதும் ஷோபனா புலம்ப ஆரம்பித்தாள்.
ஏன்டி சிரிச்சீங்க.. நம்ம நல்லா சொதப்பிட்டோம்.. போங்கடி" ஷோபனா நொந்து கொண்டாள்.
"நமக்கு நல்ல அனுபவம் கிடைச்சதுல.. விடு" என்றாள் ரம்யா
"ஆமா டி.. சிரிச்சது தவிர நம்ம நல்லா தான் பண்ணோம்" என்றாள் வெண்ணிலா "நாடகம் மூலமா என்ன சொல்ல நினைச்சமோ அத சொல்லிட்டோம்" என்றேன்.
"கலந்துகிட்டதுக்கே செர்டிபிகேட் இருக்கு" என்றாள் ஜெயப்ரியா
"இல்ல.. நம்ம நிறைய உழைப்பு போட்ருக்கோம் அது பத்தாது" தவித்தாள் நூர்ஜஹான் அப்பொழுது எங்கள் வாக்குவாதங்களை துளைத்து ஒலிபெருக்கி சத்தமிட்டது.
'முதல் பரிசு - நூர்ஜஹான் அண்ட் டீம்'
-செ. ரேவதி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/memories-of-stage-performance-during-school-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக