Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

``இறைச்சிக் கடைகளை மூட முடிவெடுத்தால் பொது இடங்களில் கறி சமைத்து சாப்பிடுவோம்!''- சீமான் எச்சரிக்கை

``வட மாநிலத்தவர் விழாவுக்காக, தமிழகத்தில் பத்து நாள்கள் இறைச்சிக்கடைகளை மூட தமிழக அரசு சம்மதித்தால், பொது இடங்களில் இறைச்சி சமைத்து உண்ணுவோம்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியும் ஜெயின் பண்டிகையான `பரூஷண் பர்வா’ ஆகிய தினங்களையொட்டி, தமிழகத்தில் பத்து நாள்கள் இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபானக் கடைகளை அடைக்கவேண்டும் என மதுரை வட இந்தியர் நலச்சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 14-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, `டிவிஷன் பெஞ்ச்' இந்த மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 18-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ``மகாவீரர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சிக்கடை மூடப்படுவதால், `பரூஷண் பர்வா’ பண்டிகைக்காக 10 நாள்கள் இவற்றை மூடவேண்டிய அவசியம் இல்லை” என்று வாதிட்டார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதாகக் கூறினர்.

விநாயகர் சதுர்த்தி

இது ஒருபுறமிருக்க, வட இந்தியர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு,

``இந்து மதத்தினரில் பெரும்பான்மையானவர்கள் கொண்டாடக்கூடிய ஒரு விழாவின்போது, அவர்கள் சார்பில் யாருமே கோரிக்கை வைக்காத போது, மதுரையில் வட இந்தியர்கள் நலச் சங்கத்தினர் தடைவிதிக்கக் கோருவது முறையல்ல. இந்த வருடம் `பரூஷண் பர்வா' விரத நாள்களுக்குள் விநாயக சதுர்த்தி பூஜையையும் அவர்கள் சேர்த்துக் கோரிக்கை வைத்தது `பக்கத்து இலைக்குப் பாயசம் ஊற்றச் சொல்வதைப்போல’ உள்ளது'' என கருத்துத் தெரிவித்திருந்தார்.

மறுபுறம், நாம் தமிழர் கட்சியின் சீமான், காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``கொல்லாமையைப் போதித்த மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏற்கனவே ஒரு நாள் இறைச்சிக்கடைகள் தமிழகத்தில் மூடப்படுகிறது. அதைத் தமிழர்கள் நாம் இதுவரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம் என்பது நமது பெருந்தன்மை. அதற்காகத் தொடர்ந்து பத்து நாட்கள் தமிழர்கள் அனைவரும் இறைச்சி உண்ணக்கூடாது என்று சட்டத்தின் மூலம் அடக்குமுறைக்குள்ளாக்க துணிவது தமிழர்களின் உணவை, உணர்வை, உரிமையைப் பறிக்கின்ற கொடுஞ்செயலாகும்'' என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சந்துரு

இதுகுறித்து சீமானிடம் பேசினேன்;

``பத்து நாள்கள் இறைச்சிக் கடைகளை மூட முடிவெடுத்தால் அது தமிழர்களுக்கு இழைக்கின்ற மாபெரும் அநீதி. தமிழ்நாடு தமிழர்களின் நிலம். இங்கு பிற மாநிலத்தவர்கள் பாதுகாப்பாக வாழவும், தொழில் செய்யவும் அனுமதித்திருப்பதற்கே பிற மாநிலத்தவர்கள் தமிழர்களுக்கு நன்றியுணர்வோடு இருக்கவேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அல்லது வேறு ஏதாவது அவர்களின் விழாவினை முன்னிட்டோ அவர்கள் விரதம் இருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இறைச்சிக் கடைகளை அடைத்து எங்களையும் விரதம் இருக்கச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. எங்களுடைய உணவுப் பழக்கவழக்கத்தில் தலையிட அவர்கள் யார்?

Also Read: `டாஸ்மாக்குக்கு ஓகே... விநாயகர் சதுர்த்திக்குத் தடையா?' - கொதிக்கும் இந்து முன்னணி!

தமிழகத்தில், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிற தமிழர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும்போது மற்றவர்களும் நோன்பு இருக்கவேண்டும் எனச் சொல்வதில்லை. அதேபோல, கிறிஸ்தவர்கள் அவர்களின் தவக்காலத்தில் விரதம் இருக்கும்போது மற்றவர்களையும் விரதம் இருக்கச் சொல்வதில்லை. தைப்பூசத்துக்கு, திருமுருகப் பெருவிழாவுக்கு, ஐயப்பன் கோயிலுக்கு தமிழர்கள் விரதம் இருக்கும்போது மற்ற அனைவரும் விரதம் இருக்கவேண்டும் எனச் சொல்வதில்லையே? ஆனால், எங்கோ இருந்து வந்து தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு, தமிழர்களின் உணவுப் பழக்கவழக்கத்தில், பண்பாட்டில் தலையிடுவது என்பது கொடுங்கோன்மை இல்லையா?

சீமான்

பிற மாநிலங்களில்வாழும் தமிழர்கள் யாரும் அந்த மண்ணில் தமிழர்களின் அடையாளத்தை, பண்பாட்டை மற்றவர்கள் மீது திணிப்பதில்லை. அப்படியிருக்க, வந்து வாழ்கிற இடத்தில், தங்களுடைய அடையாளத்தை, அதிகாரத்தைத் பிற மாநிலத்தவர் திணிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படித்தான் தீபாவளியை, விநாயகர் சதுர்த்தியை தமிழ் மண்ணில் திணித்தார்கள். இப்போது அந்த விழாக்களின் மூலம் தமிழர்களின் பண்பாட்டின் மீது படையெடுக்கின்றனர். அப்படி ஒருவேளை கடையை அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டால், வீட்டுக்கு வீடு கறி சமைத்து பொது இடங்களில் கறி உண்ணும் போராட்டத்தை நடத்துவோம். மதம் சார்ந்து எந்த ஒரு விஷயத்தையும் அரசு தீர்மானிக்கக் கூடாது. மதம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்றால் மனிதனுக்கு எந்தவொரு உரிமையும் மிச்சமிருக்காது. அதை அரசு கவனத்தில் கொண்டு சரியாக நடந்து கொள்ளவேண்டும்'' என வெடிக்கிறார் சீமான்.

எங்கே தொடங்கியது இது?

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் `பரூஷண் பர்வா விரதத்தையொட்டி 10 நாள்களுக்கு தேனி மாவட்டத்திலுள்ள இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும்’ என்று கடந்த 13.8.20-ம் தேதி தனது மின்னஞ்சல் மூலம் உத்தரவிட்டது கடும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. ஆனால், பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்குப்பிறகு 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு திரும்பிப் பெறப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவைப் பார்த்துதான் வழக்குத் தொடர்ந்ததாக வட இந்தியர் நலச்சங்கமும் தெரிவிக்கிறது.

மதுரை வட இந்தியர் நலச்சங்கத்தின் தலைவர் ஹுக்கம் சிங்கிடம் பேசினோம்.

``பத்து நாள்கள் கடை அடைக்கவேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதைப் பார்த்துதான் நாங்களும் வழக்குத் தொடர்ந்தோம். இவ்வளவு ஆண்டுகள் அப்படி ஒரு வழக்கம் இல்லை என்றால் ஏன் இந்த ஆண்டிலிருந்து தொடங்கக் கூடாதா? விநாயகர் சதுர்த்தி இந்துக்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகை இல்லையே... அனைத்து மதத்தினரும்தான் கொண்டாடுகிறார்கள். கணேஷ்ஜி-க்கு கோபமே வராது. அவர் அனைவருக்குமானவர்.

திருவாரூர், முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் படங்கள் - க.சதீஸ்குமார்

வெளியில் இருந்து வந்த நாங்கள் மட்டுமல்ல, இங்கிருக்கும் தமிழ் மக்களும்தான் கடைகளை அடைக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். அவர்களுக்காகவும்தான் நாங்கள் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறோம். சுற்றுச்சூழல் கெடுகிறது என இந்த வழக்கைத் தொடுக்கக் காரணம், அசைவம் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்கிறார்கள் அதுகுறித்து எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் எப்போதும் சைவம்தான் சாப்பிடுவோம். அசைவம் சாப்பிடுகிறவர்கள்தான் அதுகுறித்துச் சொல்லவேண்டும். நாங்கள் வழக்குத் தொடர்ந்ததற்கு பி.ஜே.பியைத் தொடர்புபடுத்தி சிலர் பேசுகிறார்கள். பி.ஜே.பிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. கடைகளை அடைத்தால் பொது இடங்களில் கறி சமைத்துச் சாப்பிடுவோம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் நாம் அதில் தலையிட முடியாது. பத்து நாள்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை விநாயகர் சதுர்த்தி அன்றாவது கடைகளை அடைக்கவேண்டும்'' என்றார் அவர்.

இந்தநிலையில் இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசியபோது, அரசு அது குறித்து பரிசீலித்து வருவதாகக் கருத்துத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/news/seeman-says-he-would-protest-if-meat-shops-will-close-due-to-paryushan-parva

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக