Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

திருச்சி: `அண்ணன் நேருவை கேட்டுதான் செயல்படுகிறேன்!’ - மகேஷ் பொய்யாமொழி

`திருச்சி தி.மு.க-வில் எந்தவித உட்கட்சி பூசலும் இல்லை. உட்கட்சி பூசல் என சிலர் சொல்லுவது அவர்களின் அனுமானம் தான். நான் எந்த ஒரு செயலை செய்தாலும் முதலில் கே.என்.நேரு அண்ணனைக் கேட்டுவிட்டுத் தான் செய்வேன். நான் சுயமாக எந்தவித முடிவும் எடுப்பதில்லை” என்கிறார் அன்பில் மகேஷ்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தும் மகேஷ்

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தி.மு.க திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க மற்றும் ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழ்நாட்டின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. திருச்சியைத் தலைநகராக்க எம்.ஜி.ஆர் எடுத்த முடிவை அப்போது ஏன் அவர் நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரியவில்லை. ஆனால், இன்றைய தலைமுறையின் கருத்தாகத் திருச்சியே இரண்டாவது தலைநகராக வேண்டும். அதற்கேற்ற அனைத்து வசதிகளும் திருச்சியில்தான் உள்ளன.

அன்பில் மகேஷ் - நேரு

இரண்டாம் தலைநகர் என்கிற அந்தஸ்து ஒரு மாவட்டத்திற்கு வழங்க வேண்டுமானால் அது திருச்சி மாவட்டத்திற்குத் தான் வழங்க வேண்டும்" என்றார்.

அதனைத்தொடர்ந்து தி.மு.க வில் உள்ள மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் நிலவுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு. ``திருச்சி மாவட்ட தி.மு.கவில் உட்கட்சி பூசல் இல்லை. உட்கட்சி பூசல் எனச் சிலர் கூறுவது அவர்களின் அனுமானமே. முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைக் கலந்தாலோசித்தே நான் நிகழ்வுகளை நடத்துகிறேன்.

அன்பில் மகேஷ்

மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மாநில பதவியிலிருந்த காலத்திலிருந்து நேரு அண்ணனுடைய தலைமைதான் நாங்கள் வேலை பார்த்துக்கிட்டு வரோம். இப்போது கூட தெற்கு மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் கூட அவர்கள் போட்ட ஆட்கள் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் முகவரி கொடுத்ததே நேரு அண்ணன் தான். கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை வழக்கம் போல் தான் சென்றுகொண்டிருக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்பது எனது எண்ணம். இதனைத் தான் கட்சித்தலைமையும் விரும்புகிறது. அதன் படிதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/anbil-mahesh-opens-about-the-party-issue-in-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக