Ad

புதன், 6 ஜனவரி, 2021

மதுரை: சட்ட விரோதமாக ஆப் மூலம் கடன்! - ஆர்.பி.ஐ ஆளுநர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``வளர்ந்துள்ள டிஜிட்டல் உலகில் செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய ஆப்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை ஆர்.பி.ஐ அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் செல்போன் மூலம் கடன் பெறுவதற்கு பல ஆப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. செல்போன் ஆப் மூலம் கடன் பெறுபவர்களுக்கு அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது. செல்போன் ஆப்களில் கடன் தரும் அவர்கள் எந்தவிதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றுவது இல்லை. இவ்வாறு கடன் பெற்று, கடன்களை சரியாக செலுத்தாத நபர்களின் விவரங்கள், புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் உள்ள குழுக்களில் பகிர்வது, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவறாக பேசுவது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Madurai HC bench

இதன் காரணமாக கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு செல்கின்றனர்.
இந்த கடன் ஆப்களில் கூகுள் செயலில் மூலம் பஜாஜ்பின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், கேஸ் இ, ஸ்மார்ட் காயின் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆப்கள் கடன்களை வழங்கி வருகின்றனர். இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்த ஆப் மூலம் கடன் பெற்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழக ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆப் மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

கடன் வழங்கும் பல ஆப் பின்னணியில் சீனா நாடு மறைமுகமாக செயல்படுவது தெரிய வருகிறது. இவர்கள் இந்தியாவில் உள்ள சிலர் மூலம் வங்கி பரிவர்த்தனைகளும் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடன் வழங்கும் ஆப் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஆர்.பி.ஐ இணையதளம் மற்றும் ஆப் மூலம் கடன் வழங்குபவர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் , இதுபோன்ற சட்ட விரோதமாக செயல்படும் ஆப்களை தடை விதிக்க நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என தெரிவித்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆன்லைன் லோன் ஆப்

அப்போது நீதிபதிகள், ``தற்போது ஆப் மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. இது வருத்தத்திற்கு உரியது. செயலி மூலம் கடன் பெறுவதில் இரண்டு முக்கிய பிரச்னைகள் இருந்து வருகிறது. செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் அவர்களுக்கான விதிமுறைகளை அவர்களே உருவாக்கியுள்ளனர். இது சட்ட விரோதம். கடன்களை வசூல் செய்வதில் அங்கீகரிக்க முடியாத முறைகளைப் பின்பற்றுகின்றனர். இவை இரண்டும் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவது இல்லை” எனக்கூறிய நீதிபதிகள் மனு குறித்து ஆர்.பி.ஐ ஆளுநர், கூகுள் நிறுவனம், மத்திய நிதித்துறை செயலர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 3.02.2021அன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.



source https://www.vikatan.com/news/judiciary/madurai-high-court-order-to-rbi-in-loan-through-app

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக