Ad

செவ்வாய், 5 ஜனவரி, 2021

`எதிர்ப்புக் குரல்களையும் கேளுங்கள் பிரதமர் மோடி!’ - பிரணாப் முகர்ஜி

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த பிரணாப் முகர்ஜி, 2012 முதல் 2017 வரை நாட்டின் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து `தி பிரசிடென்சியல் இயர்ஸ் 2012 - 2017’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

பிரணாப் முகர்ஜி

அவர் இறப்பதற்கு முன்பாகக் கடந்த ஆண்டு எழுதி முடிக்கப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரணாப் முகர்ஜி பேசியிருக்கிறார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் குரலுக்குச் செவி சாய்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பிரணாப், நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் ஒரு பிரதமராக அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். `இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவி வகிக்கும் மோடி, முந்தைய பிரதமர்களை முன்மாதிரியாகக் கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட வேண்டும். முதல் பதவிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்க அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று, தனது தலைமையை நிரூபிக்க வேண்டும்’’ என்று பிரணாப், தனது இறுதிப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: காங்கிரஸுக்கு எதிரான பிரணாப் முகர்ஜியின் புத்தகம்... சண்டையிடும் வாரிசுகள்!

அதேபோல், `எதிர்ப்புக் குரல்களுக்கு பிரதமர் மோடி செவிசாய்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அடிக்கடி உரையாற்றி, எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தவும், நாட்டு மக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் இடமாகவும் நாடாளுமன்றத்தை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றும் பிரணாப் எழுதியிருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற நாள்களில் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்களோடு அவ்வப்போது கலந்துபேசி பிரச்னைகளைக் கையாண்டதாகவும் அவர், தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரணாப் முகர்ஜி - மோடி

கடந்த 2016-ம் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து மிகைப்படுத்தப்பட்ட அளவில் விளம்பரம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்திய வீரர்கள் 16 பேர் வீரமரணமடைந்த உரி தாக்குதலுக்குப் பத்து நாள்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்குப் பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் அவ்வப்போது இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது வாடிக்கைதான் என்று, தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் பிரணாப், 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் இந்தியாவுக்கு பலன் எதுவும் கிட்டவில்லை என்றும் விமர்சித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/former-president-pranab-mukherjees-new-book-released

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக