Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

வீடு முழுக்க தொழில்நுட்பம்... ஆட்டோமேஷனில் இயங்கும் ஃபேன், ரோபோ! - இளைஞரின் ஸ்மார்ட் வீடு!

தனது வீட்டை அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஸ்மார்ட் ஹவுஸாக மாற்றியுள்ளார் நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர். வீட்டுக்குள் நுழைந்தவுடன் தானாக ஓட ஆரம்பிக்கும் ஃபேன்கள், தானாக எரியும் பல்புகள், வீட்டைச் சுத்தம் செய்ய தானியங்கி ரோபோ, இவற்றை இயக்க சோலார் பேட்டரி என்று அவரது வீடு முழுக்க தொழில்நுட்ப சாதனங்கள் நிறைந்து, ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளைப் பார்ப்பதுபோல் மாயஜால வித்தைகள் நடக்கின்றன.

தானாக பேன் சுற்றும்போது...

Also Read: சிறுகுன்றின் மேல் நிற்கும் வரலாற்று அதிசயம்... சுண்டக்கா பாறையை மீட்டெடுக்கக் கோரிக்கை!

நாமக்கல் நகரில் சேலம் சாலையில் வசிப்பவர் நவீன்குமார். பொறியியல் பட்டதாரியான இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் சாஃப்ட்வேர் கம்பெனியில் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக தற்போது வீட்டில் இருந்தபடி பணிபுரிந்து வருகிறார். இவர்தான், தனது வீட்டை நவீன தொழில்நுட்பம் நிறைந்த, ஸ்மார்ட் ஹவுஸாக மாற்றியுள்ளார். இதுகுறித்து, நவீன்குமாரைச் சந்தித்துப் பேசினோம்.

ஸ்மார்ட் ஹவுஸில் நவீன்குமார்

"சிறுவயதில் இருந்தே எனக்கு அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இயல்பாகவே ஆர்வம் அதிகம். பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் படத்தில் வரும் ஜேம்ஸ் பாண்ட் படக்காட்சிகளைக் கண்ட எனக்கு, 'ஏன் இம்மாதிரியான தொழில்நுட்பங்களை நாமும் பயன்படுத்தக் கூடாது' என்ற எண்ணம் ஏற்பட்டது. அதேபோல், சிறுவயது முதல் நான் சுட்டிவிகடன் வாசகர். அதில் வரும் கிரியேஷன்களை செய்து பார்த்து, என்னோட கிரியேட்டிவிட்டியை அதிகப்படுத்திக்கிட்டேன்.

எனது வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றவேண்டும் என்ற முயற்சியை, 6-ம் வகுப்பு படிக்கும் போதே தொடங்கிவிட்டேன். ஆனால், அதுகுறித்த தொழில்நுட்ப விவரங்கள் எனக்கு கிடைக்கவேயில்லை. இருந்தாலும், அந்த ஆர்வத்தில் நான் பள்ளி படிப்பை முடிக்கும்போது, கணினிகளைப் பழுதுநீக்கும் அளவிற்குக் கற்றுத் தேர்ந்து, அதன்மூலம் வருமானமும் ஈட்டத் தொடங்கினேன். பொறியியல் படிப்பில் சேர்ந்து, கணினி அறிவியலைப் பாடமாக எடுத்துப் படித்தேன். ஆனால், அங்கும் எனக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான தகவல்கள் கிடைக்காத நிலையே ஏற்பட்டது.

தானியங்கி சுத்தம் செய்யும் ரோபோ

இதனால், கல்லூரிப் படிப்பு படிக்கும்போது இணையதளத்தில் எனது தேடலைத் தொடங்கினேன். அங்கு கிடைத்த ஒவ்வொரு தகவல் மற்றும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, எனது வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றினேன். வீட்டிற்குள் நுழைந்ததும் மின்விசிறி தானாக இயங்குவது, கணினி ஆன் ஆவது, சூரிய வெளிச்சம் குறைந்தவுடன் மின் விளக்குகள் ஒளிரத் தொடங்குவது, தானியங்கியாக வீட்டை சுத்தம் செய்யும் ரோபோ, உட்கார்ந்த இடத்திலிருந்தே மொபைல் போன் மூலம் வீட்டில் உள்ள பொருள்களான டி.வி உள்ளிட்ட மின்சாதன பொருள்களைக் கட்டுப்படுத்துவது எனப் பல தொழில்நுட்பப் அமைப்புகளைச் செய்துள்ளேன்.

வீட்டைவிட்டு வெளியில் போகும்போதும், ஃபேன், லைட்டெல்லாம் இயக்கத்தை தானாக நிறுத்திக் கொள்ளும். அதோடு, இந்த உபகரணங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை வீட்டிலேயே எப்போது வேண்டுமானலும் உடனடியாகத் தயாரிக்கும் வகையிலான, த்ரீ டி பிரிண்டர் இயந்திரம் ஒன்றையும் வடிவமைத்து, அதில் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கவும் ஆரம்பித்திருக்கிறேன். அப்படி, பல பொருள்களைத் தயாரித்தும் விற்பனை செய்தும் வருகிறேன். இணையவசதி இல்லாமலேயே, இத்தனையும் தானியங்கியாக இயங்கும் வகையில் அமைத்துள்ளேன்.

த்ரீ டி பிரின்டர்

அதற்காக, எனது கணினியில் லினெக்ஸ் சர்வரை அப்லோடு செய்திருக்கிறேன். இந்த சர்வர் மூலம், வெளியில் வரும் ஆள்கள், ஆடுமாடுகள், நாய் உள்ளிட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகளை மட்டும் தானியங்கியாக இந்த சர்வர் மானிட்டர் செய்யும். அதாவது, தேவையில்லாதவற்றை மானிட்டர் பதிவு செய்யாது. வெளிநாடுகளில் இதுபோன்ற ஸ்மார்ட் ஹவுஸ்களை, கூகுள் ஹோம் மாதிரியான சர்வரை வைத்து இயக்குவார்கள்.

கம்பெனிகள், ஸ்மார்ட் ஹவுஸுக்கான அக்ரிமென்ட் காலக்கட்டம் முடிந்து வெளியேறினால், அதன்பிறகு ஸ்மார்ட் ஹவுஸில் தொழில்நுட்பங்கள் வேலை செய்யாது. ஆனால், என்னுடைய ஸ்மார்ட் ஹவுஸில் அப்படி பிரச்னை இல்லை. சோலார் மூலம் மின்சாரம் எடுத்து, அதை லித்தியான் பேட்டரி மூலம் சேமித்து, அந்த மின்சாரத்தில் இவ்வளவு தொழில்நுட்பங்களையும் இயங்க வைக்கிறேன். இத்தனை விஷயங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக சொந்த உழைப்பில் கிடைத்த பணத்தில் செய்தேன். நான்கு லட்சம் வரை இதுக்கு செலவு ஆனது. மூன்று வருட காலமானது.

செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் நவீன்குமார்

இதைப் பார்க்க பல இளைஞர்களும், மாணவர்களும் வர்றாங்க. அரசாங்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிற மடிக்கணினியில் இருக்கும் லினெக்ஸ் டூலைக் கொண்டே, இதுபோல் பல தொழில்நுட்பங்களை செய்யமுடியும். தொழில்நுட்பத்தில் மாணவர்கள் தங்களை இனோவேட்டிவாக வளர்த்துக்கொள்ள, அந்த டூல் பெரிதும் பயன்படும். ஆனால், பலருக்கும் இந்த டூலைப் பற்றி தெரியவில்லை.

அதேபோல், எந்த ஒரு பொருளுக்கும், தொழில்நுட்பத்திற்கும் வெளிநாடுகளையே நம்பி இருக்காமல், லித்தியன் பேட்டரி மூலம் மின்சுவரை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறேன். இந்த தொழில்நுட்பங்களை எனக்கு தெரிந்து இந்தியாவில் யாரும் பயன்படுத்தவில்லை. நான் ஒரு தொழில் முனைவோராகவும், தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராகவும் ஆக வேண்டும் என்ற லட்சிய வேட்கையோடு மேற்கொண்ட ஒன்பது ஆண்டுகள் போராட்டத்தில், நம்பிக்கை வரும் அளவுக்கான வெற்றியை அடைந்திருக்கிறேன். அதேபோல், தனியார் கம்பெனிகளுக்கு வலைதளங்கள் வடிவமைத்து தருவது, ஆப்கள் உருவாக்கித் தருவது எனத் தனியாக செயல்படுறேன்.

த்ரீ ட் பிரின்டர்

இன்றைய இளைஞர்கள் படித்து முடித்தவுடன் தனியார் கம்பெனிகளில் சம்பளத்திற்குத் வேலைக்குச் செல்லாமல், ஆராய்ச்சியிலும், தொழில்நுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதைக் கண்டறிவதிலும் முனைப்புகாட்ட வேண்டும். அம்மாதிரியான இளைஞர்களுக்கு நான் உதவத் தயாராக இருக்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/technology/tech-news/this-namakkal-youth-made-his-home-a-smart-home-with-technology

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக