Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

நெல்லை : `41 கொலை வழக்கு; தொடர்புடையவர்கள் அனைவரும் கைது!’ - 2020 க்ரைம் ரிப்போர்ட்

கொரோனா பாதிப்பு, லாக் டெளன், புயல், வெள்ளம் என 2020-ம் ஆண்டு சேதங்களை சந்தித்தப் போதிலும், குற்றச் செயல்களைத் தடுக்க நெல்லை மாவட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Also Read: `அப்பாகூட உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியலை’ -நெல்லை காவல்துறை அதிகாரியின் மகள் உருக்கம்

ஆனாலும், கொலை, கொள்ளை, சாலை, விபத்துகள் என தொடர்ந்து நடந்தன. இருப்பினும் அத்தகைய குற்றச் செயல்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் குற்றங்கள் குறைந்திருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குண்டர் தடுப்புச் சட்டம்!

``நெல்லை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட்ட 80 பேர், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 11பேர், இரு கள்ளச்சாராயப் பேர்வழிகள், ஒன்பது பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

arrest

அத்துடன், போதைப்பொருள் கஞ்சா விற்பனை செய்த 10 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் உட்பட 122 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 6 மாதத்தில் மட்டும் 86 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியிருக்கிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 102 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டர். அதனால் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-ல் 20 பேர் கூடுதலாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

2020-ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 41 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விடவும் 6 சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. இருப்பினும், அனைத்து கொலை வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள்!

கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு ஆகியவை தொடர்பாக 345 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், 205 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.79,00,000/ மதிப்பிலான நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

எஸ்.பி அலுவலகம்

நெல்லை மாவட்டம் முழுவதும் நிலுவையில் இருந்த ஒன்பது பழைய சொத்து வழக்குகள் விசாரணைக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.5,29,000 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன. அதனால் மாவட்டம் முழுவதும் 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்ட சொத்துகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் போதை தடுப்பு குற்றம் தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன் மூலம் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Also Read: நெல்லை: `தந்தையின் மரணம்; கடமை முக்கியம்!’ - அணிவகுப்பை ஏற்று நடத்திய பெண் காவல் ஆய்வாளர்

அத்துடன், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 769 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மணல் திருட்டு!

2020-ம் ஆண்டு, சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மணல் கடத்தல்தொடர்பாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மணல் கடத்தலில் ஈடுபட்ட 527 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்கு துணையாக இருந்த 405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணல் கடத்தல் தொடர்பாக 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். முந்தைய ஆண்டில் மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை விடவும் கூடுதலாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2020-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 720 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 147 பேர் மரணமடைந்துள்ளனர். 2019-ம் ஆண்டில் 851 சாலை விபத்துகளும் 203 பேர் மரணமும் நிகழ்ந்த நிலையில், கடந்த ஆண்டு 27.5 சதவிகித சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்திருந்தது.

காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்

இந்த ஆண்டிலும் நெல்லை மாவட்ட காவல்துறை விவேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு குற்றம் மற்றும் சாலை விபத்துக்கள் நடவாமல் தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/2020-crime-list-was-released-by-nellai-district-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக