Ad

புதன், 29 ஜூலை, 2020

குமரி: `சிறுமி வாக்குமூலம்; நெல்லையில் கைது’ - மருத்துவமனையில் முன்னாள் எம்.எல்.ஏ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனார். இதுகுறித்து கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபருடன் வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்தது. சுசீந்திரம் பகுதியில் பதுங்கி இருந்த அவர்களைக் கோட்டாறு போலீஸார் மீட்டனர்.

கடத்தப்பட்டது சிறுமி என்பதால் இந்த வழக்கை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் சிறுமி கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். குழந்தைகள் நல அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2017-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மற்றும் சிலர் தன்னை சிறார் வதை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். இந்தச் செயலுக்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

சிறார் வதை வழக்கில் கைது செய்யப்பட்ட நாஞ்சில் முருகேசன்

இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுமியை சிறார்வதை செய்ததாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் (60), இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த பால் (66), அசோக் குமார் (43), கோட்டாறு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (28) ஆகியோர் மீதும். சிறுமியின் தாய் மீதும் போக்ஸோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 27-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நாஞ்சில் முருகேசன் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நாஞ்சில் முருகேசன் தலைமறைவான நிலையில் சிறுமியின் தாய் உட்பட 4 பேரும் கடந்த 28-ம் தேதி கைது செய்யப்பட்டனர். நாஞ்சில் முருகேசனை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் கடைக்குளம் பகுதியில் ஒரு தோட்டத்தில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன்

கைது செய்யப்பட்ட நாஞ்சில் முருகேசனை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்பு மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகக் கூறி நாஞ்சில் முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Also Read: குமரி: சிறுமி வாக்குமூலம்; டிஜிபி-க்கு ரிப்போர்ட்! - சிக்கிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ



source https://www.vikatan.com/government-and-politics/crime/admk-ex-mla-arrested-in-child-abuse-case-was-admitted-in-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக