Ad

வியாழன், 30 ஜூலை, 2020

புதுக்கோட்டை: யாசகம் பெற்று ஒருவேளைச் சாப்பாடு!- தவிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்

புதுக்கோட்டை அருகே தாந்தாணியில் வசிக்கிறது மாற்றுத்திறனாளி முருகனின் குடும்பம். முருகனின் ஓட்டு வீடு வெளியில் பார்ப்பதற்கு அழகான தோற்றமளிக்கிறது. உள்ளே உள்ள மரச்சட்டங்கள் எல்லாம் கரையான்களுக்கு இறையாகிவிட்டன. தொடர்ந்து சில நிமிடங்கள் மழை பெய்தாலே, ஓட்டின் விரிசல் வழியாக மழை நீர் வீட்டிற்குள் புகுந்து வீடே குளம்போல மாறிவிடுகிறது. மழை நீர் ஒழுகும் இடங்களில் எல்லாம் ஆங்காங்கே பாத்திரங்களை அடுக்கி வைத்து மழைநீரைச் சேகரிக்கின்றனர். அறந்தாங்கியில் உள்ள தியேட்டரில், படம் பார்க்க வருபவர்களின் வாகனங்களுக்கு டோக்கன் போட்டு வாகனங்களைப் பாதுகாக்கும் வேலை முருகனுக்கு. கூன் விழுந்த முதுகோடு, ஒரு காலை, தன் கையால் தாங்கியவாறு விட்டிலிருந்து 2 கி.மீ தூரம் உள்ள எரிச்சிக்கு நடந்து சென்று அங்கிருந்து பேருந்தில் தியேட்டருக்கு வேலைக்குச் சென்று வந்தார்.

ஊரடங்கால் தவிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்

அதில், கிடைக்கும் வருமானத்தை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், ஊரடங்கு அந்த சொற்ப வருமானமும் இல்லை. ஊரடங்கு முருகனை வீட்டிற்குள்ளே முடக்கிப்போட்டுவிட்டது. கடந்த 4 மாதங்களாக எந்த வருமானமும் இல்லாததால், 3 வேளை சாப்பாடு ஒரு வேளையாகச் சுருங்கிவிட்டது. அதுவும் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒவ்வொருவரிடமும் குழம்பினை யாசகம் பெற்றுத்தான் அந்த ஒரே வேளையும் சாப்பிடுகின்றனர். பல நாள் இரண்டு நேரம் பிஸ்கட், வாழைப்பழம்தான் சாப்பாடு. அதையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, இருவரும் பட்டினி கிடக்கின்றனர். கொரோனா ஊரடங்கு முருகனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.

முருகனின் மனைவி புவனேஸ்வரியிடம் பேசினோம்.``சின்ன வயசுலயே அவருக்கு ஒரு விபத்துல கை,கால், முதுகு எல்லாம் முடங்கிப்போச்சு. கூன் விழுந்தவனையா கல்யாணம் பண்ணிக்கப் போற என்று சொந்தக்காரங்களே ஏளனம் பேசினாங்க. அதை எல்லாம் நான் காதில் வாங்கிக்கலை. அவருக்கு முதுகு தான் கூன் முதுகு. ஆனா, ரொம்பவே இலகுன மனசு. எனக்கு அவரை பிடிச்சி போனதால, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவரோட 20 வருஷம் ஓடிருச்சு. எங்களுக்கும் 2 பொம்பள பிள்ளைகள் பிறந்திருச்சு. எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். ஆனாலும், கொஞ்ச நேரத்துல சமாதானம் ஆகிடுவோம். சண்டையெல்லாம், பணத் தேவையில்தான் ஆரம்பிக்கும்.

புவனேஸ்வரி

மொதல்ல, கொஞ்ச வருஷம் வெளியூர்ல தங்கி குத்தகைக்கு விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்தோம். பெருசா கைகொடுக்கலை. அதற்கப்புறம் ஊருக்கு வந்திட்டோம். சின்ன, சின்ன வேலைகளைப் பார்த்து 4 பேர் சாப்பிடுகிற அளவுக்கு வேலை செஞ்சு பணம் கொண்டு வந்துவிடுவாரு. யாருக்கிட்டயும் யாசகம் வாங்க மாட்டாரு. இப்ப கொஞ்ச வருஷமாகத் தான் தியேட்டர் வேலைக்கு போறாரு. காலையில் 10மணிக்கு நடந்து போனால், இரவு 10 மணிக்குத் தான் வருவாரு. அதில் கிடைக்கிற வருமானத்தில் பெருசா பிள்ளைகளுக்காக சேர்த்து வைக்க முடியலாட்டியும், சாப்பாட்டுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் குடும்பம் ஓட்டிக்கிட்டு இருந்தேன். மொதல்ல நானும் சின்ன, சின்ன வேலைகளுக்குப் போயிட்டு தான் வந்தேன்.

Also Read: புதுக்கோட்டை: `அப்பா இல்லாம நாங்க பட்ட கஷ்டம்..!’ - ஃபேஸ்புக் பதிவால் இணைந்த குடும்பம்

குடும்பக்கட்டுப்பாடு செஞ்சதுக்கு அப்புறம் எந்த வேலையும் செய்ய முடியாமல் போச்சு. இதற்கிடையில தான் திடீர்னு அவருக்கு சிறுநீரகத்துல பிரச்னை வந்திருச்சு. உடனே அதை சரிசெய்யணும் இல்லைன்னா, உயிருக்கே ஆபத்தாகிரும்னு சொன்னாங்க. என்ன செய்றதுன்னே தெரியலை. உறவுக்காரங்க பலரும் இருந்தும் யாரும் உதவிக்கு வரலை. அந்த நேரத்துல தான் என் மகள் படிக்கிற பள்ளிக்கூடத்துல பாடம் எடுக்கிற ராதிகா டீச்சர், எங்களோட நிலையை அறிந்து அவங்களாகவே முன்வந்து பணம் கொடுத்து உதவி பண்ணாங்க. அவங்க உதவியால இன்னைக்கு அவருக்கு சிறுநீரகப் பிரச்னையை சரியாகிருச்சு. இப்பவும், என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கன்னு தான் சொல்வாங்க.

ஊரடங்கால் தவிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்

ஒருத்தவங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கக்கூடாதுல்ல, அதுனால, இப்போதைக்கு தேவை எதுவும் இல்லைன்னு சொல்லிருவோம். ஊரடங்குக்கு முன்னாடி வேலைக்குப் போகாம ஒரு நாள் கூட வீட்டில் இருக்க மாட்டாரு. ஊரடங்கால் இப்போ ரொம்ப நாளா வேலைக்குப் போக முடியவில்லை. அதனால், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறோம். ரேசனில் அரிசி கிடைக்குது ஆனாலும், காய்கறி எல்லாம் காசு கொடுத்து வாங்க முடியல. வீட்டுல குழம்பு வச்சே ரொம்ப நாள் ஆகுது. ஆனாலும், பக்கத்துவீட்டுக்காரங்க நிலைமை அறிந்து பொம்பள பிள்ளை போய் கேட்டால், குழம்பு யாசகமாகக் கொடுக்கிறாங்க. அதுவும் எத்தனை நாளைக்குன்னு தெரியலை. பிள்ளைகளுக்காகத் தான் நாங்க வாழ்ந்திக்கிட்டு இருக்கோம்" என்கிறார் வேதனையுடன்.



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukottai-poor-man-family-severely-affected-by-lock-down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக