ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா ஷெரீப் (45). இவர் திருமணமாகி சென்னை ஆர்.ஏ.புரம் கேசவபுரத்தில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார். இவரின் கணவர் வேளச்சேரியில் கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், ரூபையா ஷெரிப்பின் செல்போன் எண்ணுக்கு மூன்று தொலைபேசி எண்களில் இருந்து தொடர்ந்து ஆபாச அழைப்புகள் வந்துள்ளதாக அவர் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் கூறுகையில்,``ரூபையா ஷெரிஃப் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அவரின் செல்போன் நம்பருக்கு 2 செல்போன் நம்பர்களிலிருந்தும் ஒரு லேண்ட் லைன் நம்பரிலிருந்தும் அழைப்பு வந்துள்ளது. அந்த நம்பர்கள் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடியுள்ளோம். ஆபாசமாகப் பேசியவர்கள் குறித்த தகவல் கிடைத்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
ரூபையா ஷெரீஃப்புக்கு வந்த போன் அழைப்புகளின் சிக்னலை ஆய்வு செய்த சைபர் க்ரைம் போலீஸார், அது எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆபாசமாகப் பேசியவர்களைப் பிடிக்க அபிராமபுரம் போலீஸார் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் சிக்கினால் மட்டுமே அதன் பின்னணி குறித்த தகவல் தெரியும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Also Read: முப்திமுகமது சயீத்தை எச்சரிக்கும் குலாம்நபி ஆசாத்!
முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத், 1989-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தீவிரவாத கும்பல் அவரின் மகள் ரூபையா ஷெரிஃப்பைக் கடத்தினர். பின்னர் தீவிரவாத கும்பலின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட ரூபையா ஷெரிஃப் விடுவிக்கப்பட்டார். இதையடுத்துதான் ரூபையா ஷெரிஃப் பாதுகாப்பு கருதி சென்னைக்குக் குடிபெயர்ந்தார். தற்போது அவரின் செல்போனுக்கு ஆபாச அழைப்புகள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/ex-cm-daughter-affected-cyber-attack
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக