Ad

திங்கள், 27 ஜூலை, 2020

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு: பா.ஜ.க-வை விளாசிய அ.தி.மு.க... டிவி விவாத வில்லங்கம்!

``எம்.ஜி.ஆர் பத்தி பேசுறதுக்கு பி.ஜே.பி காரருக்கு என்ன தகுதி இருக்கு. ஜாக்கிரதையா இருங்க. அண்ணா தி.மு.க தொண்டர்கள் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டீங்க... ஜாக்கிரதை''

- தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதத்தில், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் பயன்படுத்திய வார்த்தைகள்தான் இவை. கடந்த இரண்டு நாள்களாக கோவை செல்வராஜ் தெரிவித்த கருத்துகள்தான் போஸ்ட்களாகவும் மீம்ஸ்களாகவும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக கோவை சுந்தராபுரம் பகுதியில், பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், சரத்குமார், ஜவாஹிருல்லா, விஜயகாந்த், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். போத்தனூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்ற இளைஞர் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்தவர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில், இந்துக் கடவுள் முருகனைப் பற்றி இழிவாகப் பேசியதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசியதாகக் காவல் நிலையத்தில் அவர் வாக்குமூலம் அளித்தார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், புதுச்சேரி வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்மநபர்கள் காவித்துண்டு போர்த்திய சம்பவம் அடுத்த சர்ச்சைக்கு வழி வகுத்தது. தகவல் அறிந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தொண்டர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது. இந்தக் காட்டுமிராண்டித்தனம் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. சமீபகாலத்தில் இதுபோன்ற, சமூகத்துக்குத் தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறர் ஏற்கப் பாடுபடுவது மட்டுமல்ல, மாற்று கருத்துக்களையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும்'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க - பா.ஜ.க-வின் உறவில் விரிசலா என்கிற தலைப்பில், நடைபெற்ற விவாதத்தில்தான், கோவை செல்வராஜ் இப்படியொரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சமீப நாள்களாகவே அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியிடையே சரியான உறவு இல்லை. பா.ஜ.க-வை கூட்டணியில் இருந்து விலக்க அ.தி.மு.க தலைமை விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து நாம் ஜூனியர் விகடனிலும், விகடன் ஆன் லைனிலும் ஏற்கெனவே கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில்தான், கோவை செல்வராஜ் இப்படியொரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

``கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஏன்?'' என்று அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் கேட்டோம்:

``காவித் துணியையோ, அந்த நிறத்தையோ நாங்கள் விமர்சிக்கவில்லை. அதேவேளை, திராவிடப் பாரம்பர்யத்தில், பெரியார், அண்ணா ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு கட்சி நடத்திய தலைவரின் மீது, காவித்துண்டை போர்த்தியது தவறு என முதல்வர் கண்டித்து அறிக்கைவிட்டது தவறு என நாராயணன் பேசும்போது நான் எப்படி அமைதியாக இருக்கமுடியும்? எங்கள் கட்சியின் நிறுவனரைக் களங்கப்படுத்தியதை நாங்கள் கண்டிக்கக் கூடாது என்றால் அது எவ்வளவு பெரிய அராஜகம். எம்.ஜி.ஆர் என்ன பா.ஜ.க-வின் தலைவரா, உறுப்பினரா, ஒன்றரை கோடித் தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சியின் நிறுவனர் அவருக்கு எப்படி காவிக்கொடியைப் போர்த்தலாம். அதைக் கண்டிக்காமல் அமைதியாக இருந்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

நாராயணன் திருப்பதி

காவித்துண்டை போர்த்தியதை தவறில்லை என இவர்கள் நியாயப்படுத்தும்போது, இவர்கள்தான் செய்திருப்பார்களோ என்கிற சந்தேகமே எழுகிறது. நாராயணன், காவி நிறம் இந்தியாவின் அடையாளம், இந்தியாவுக்கே காவி சொத்து எனப் பேசுகிறார். தேசியக் கொடியில் காவி நிறம் இருக்கிறது. எம்.ஜி.ஆர் இறந்த பின்பு அவரின் பூதவுடலுக்கு காவிக்கொடியை போட்டுத்தான் எடுத்துக்கொண்டு போனார்கள் என்று சொல்கிறார். இதையெல்லாம் எப்படி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?

இதற்கு கட்சித் தலைமை பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது போன்ற விஷயங்களுக்கு பதில் சொல்லத்தான் எங்களைப் போன்ற செய்தித் தொடர்பாளர்களை வைத்திருக்கிறார்கள். நான், நடமாட முடியாது என பா.ஜ.க-வினரைச் சொல்லவில்லை, அண்ணாவையோ, எம்.ஜி,ஆரையோ யார் களங்கப்படுத்தினாலும் அ.தி.மு.க தொண்டர்கள் நடமாட விடமாட்டார்கள் என்றுதான் சொன்னேன். இதற்கும், தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமில்லை. அவர் பேசியதற்கு நான் பதில் சொன்னேன் அவ்வளவுதான்'' என்றவரிடம், காட்டுமிராண்டித்தனம் என முதல்வர் பேசுகிற அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை எனச் சொல்வது குறித்துக் கேட்க...

கோவை செல்வராஜ்

``கண்டிப்பாக இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் காட்டுமிராண்டிகள்தான். மனித நேயமுள்ளவர் நேர்மையானவர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இறந்த தலைவர்கள், தேசத்துக்குக்காக உழைத்த தலைவர்களைக் களங்கப்படுத்துபவர்களைக் காட்டுமிராண்டிகள் என முதல்வர் சொன்னது சரியானதுதான்'' என்கிறார் கோவை செல்வராஜ்.

Also Read: புதுச்சேரி: `எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவித் துண்டு!’ - கொதிக்கும் அ.தி.மு.க; புதிய சர்ச்சை

இந்தநிலையில், அன்றைய விவாதத்தில் என்ன நடந்தது என பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர், நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

``நான் தவறாகக் கூட எதுவும் பேசவில்லை. திடீரென அவர் அப்படிக் கோபப்பட்டுவிட்டார். கந்த சஷ்டி விவகாரம் குறித்து, அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட எந்தக் கட்சியினரும் தவறு செய்தவர்களை விமர்சிக்க முன்வரவில்லை. முதல்வர், துணைமுதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட யாரும் அதுகுறித்து உடனடியாக வாய் திறக்கவுமில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், ஈ.வெ.ரா சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டது. அது தவறுதான்; காரணம் காவி என்பது மிகவும் புனிதமானது. அதைக் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரின் மீது பூசியது நிச்சயமாகத் தவறுதான். அதேவேளை, எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தியது திட்டம்போட்டு உள்நோக்கத்துடன் செய்ததாகத் தெரியவில்லை.

ஒருவேளை உள்நோக்கத்துடன் போர்த்தப்பட்டிருந்தால் அது தவறுதான். அது யாரால் போர்த்தப்பட்டது என்பது தெரியாமலேயே காட்டுமிராண்டித்தனம் எனவும் காவித்துண்டை போர்த்தியதால் களங்கப்பட்டுவிட்டது எனவும் முதல்வர் சொன்னத்தைத்தான் நாங்கள் ஏற்கவில்லை. காவி, பா.ஜ.க-வுக்குச் சொந்தமானது இல்லை. இந்த நாட்டுக்கு, நம் கலாசாரத்துக்குச் சொந்தமானது'' என்றவரிடம்,

``வந்தே பாரத் விஷயத்திலும் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை எனவும் நிதி ஒதுக்கியதில் தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டியதாகவும் அ.தி.மு.க சார்பில் குற்றச்சாட்டப்பட்டது. ஒருவேளை பா.ஜ.க-வை கூட்டணியில் இருந்து விலக்குவதற்காக இது போன்ற கருத்துகளை முன்வைக்கிறதா அ.தி.மு.க?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

``எங்களைப் பொறுத்தவரை இதுவரை அப்படித் தெரியவில்லை. அதேவேளை, நான் எம்.ஜி,ஆரையோ, முதல்வரையோ கடுமையாக விமர்சிக்காதபோது, கோவை செல்வராஜ் கடுமையாகப் பேசியது ஏன் என்பது குறித்து, தமிழக முதல்வர், துணைமுதல்வர், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர்கள் விளக்க வேண்டும். ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு செய்தித் தொடர்பாளர் இப்படிப் பேசியிருக்கிறார், அதற்கு உரிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/clash-between-bjp-and-aiadmk-spokesperson-over-insult-to-the-mgrs-statue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக