திருப்பூரைச் சேர்ந்தவர்கள் காஜா மைதீன் - சாரா பானு தம்பதியர். இவர்களுக்கு 11 மற்றும் 7 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். காஜா மைதீன் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனியில் மேனேஜராகப் பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட காஜா மைதீன் - சாரா பானு தம்பதியினருக்கு இடையே கடந்த ஒராண்டிற்கும் மேலாக பிரச்னை இருந்து வந்திருக்கிறது. குழந்தைகளுடன் காஜா மைதீன் வசித்து வர, சாரா பானுவோ அவரது அம்மா வீட்டில் தனியே இருந்திருக்கிறார். இருவரும் அவ்வப்போது மாறிமாறி புகார் கொடுப்பதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுமாக இருந்திருக்கின்றனர்.
Also Read: Corona Live Updates: ஓரே நாளில் 47,704 பேருக்கு கொரோனா!’ இந்தியாவில் 15 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு
இதற்கிடையே இருவீட்டாரும் ஜமாத்தில் உட்காந்து பேசி, வாரத்துக்கு ஒரு முறையாவது குழந்தைகளைப் பார்க்க சாரா பானுவை, காஜா மைதீன் அனுமதிக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளனர். அந்தவகையில், வாராவாரம் சனிக்கிழமை மாலை வந்துவிட்டு, திங்கள்கிழமை காலை வரை சாரா பானு குழந்தைகளுடன் தங்கி இருந்துவிட்டுச் செல்வதுமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை சுமார் 8 மணியளவில் குளிக்கச் சென்ற காஜா மைதீன் திரும்பி வரும்போது, வீட்டில் மனைவியும் குழந்தையும் இல்லை. பதறிப்போய் பைக்கில் பல இடங்களுக்குச் சென்று தேடியவர், `குழந்தையைக் காணவில்லை’ என படத்துடன் வாட்ஸ்அப்பில் செய்தியை பகிர அது காட்டுத்தீயாய் பரவி வைராகியிருக்கிறது.
போலீஸாரும் சமூக ஆர்வலர்களும் இந்தச் செய்தியை முடிந்த அளவுக்குப் பரவலாகப் பலருக்கும் பகிர்ந்திருக்கின்றனர். இந்நிலையில், குழந்தையுடன் சாரா பானு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்திருக்கிறார். `இந்தக் குழந்தையின் அம்மா நான்தான். யாரும் குழந்தையைக் கடத்தவில்லை. குழந்தை காணாமலும் போகவில்லை. குழந்தை என்னிடம் பத்திரமாகத்தான் இருக்கிறது’ என்றிருக்கிறார்.
உடனே, குழந்தையின் தந்தை காஜா மைதீனை போலீஸார் வரவழைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில் இருவருக்கும் இடையே இருந்த பிரச்னையில், தேவையில்லாமல் `குழந்தையைக் காணவில்லை’ என வாட்ஸ்அப்பில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது
உடனே, இருவரையும் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்துக்கும் குழந்தைகள் நல அதிகாரிகளிடமும் அனுப்பி கவுன்சலிங் கொடுத்திருக்கின்றனர். குழந்தை அம்மாவுடன் செல்வதாக விருப்பம் தெரிவிக்க, அவருடனேயே குழந்தையை அனுப்பி வைத்திருக்கின்றனர். நடந்த சம்பவம் இப்படியிருக்க, திருப்பூர் சிட்டி போலீஸின் ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக, `வாட்ஸப் குரூப்பில் பகிர்ந்து காணாமல் போன குழந்தை கண்டுபிடிப்பு. வாட்ஸ்அப் செய்தியைப் பகிர்ந்து உதவிய அனைவருக்கும் நன்றி’ என ட்வீட் போட்டுள்ளனர்.
அதற்கு பொதுமக்கள் பலரும், `வேகமாகச் செயல்பட்டு குழந்தையைத் தேடி கண்டுபிடித்த போலீஸாரின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறோம்’ எனப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். எஃப்.ஐ.ஆர் போடாத, கடத்தப்படாத ஒரு குழந்தையை, தாயே குழந்தையுடன் வந்து ஸ்டேஷனில் விளக்கம் கொடுத்த பின்னரும், போலீஸார் ஏன் இப்படி ஒரு ட்வீட்டை பெருமையாகப் போட்டார்கள் எனத் தெரியவில்லை என்ற விமர்சனமும் ஒருபுறம் எழுந்திருக்கிறது.
source https://www.vikatan.com/social-affairs/controversy/child-missing-whats-app-post-gone-viral-in-tiruppur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக