Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

`வண்டியை எப்ப கொடுப்ப; பணம் வரும்போது!’ -16 வாடகைக் கார்களை அடகுவைத்து நூதன மோசடி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த செட்டித்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28), கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்திவருகிறார். கொரோனா பொது முடக்கத்தினால், கார்களை வாடகைக்கு இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தார். இந்த சூழலில், ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (30) என்ற கார் ஓட்டுநர் வினோத்குமாரை அணுகியிருக்கிறார்.

அவரிடம்,``கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து முடங்கியிருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு கார் வேண்டுமாம். வாடகைச் சரியாக கொடுத்துவிடுகிறேன்’’ என்று கதை அளந்திருக்கிறார் உதயகுமார்.

ராணிப்பேட்டை

`அரசாங்கப் பணிக்குத் தானே கார் கேட்கிறார். பிரச்னை இருக்காது, வருமானமும் கிடைத்துவிடும்’ என்று நம்பி, தன்னிடம் இருப்பதிலேயே எது சொகுசான காரோ, அதைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் வினோத்குமார். காரை எடுத்துச் சென்ற உதயகுமார், கந்து வட்டிக் கும்பலிடம் அடமானம் வைத்து இரண்டு லட்ச ரூபாயை ரொக்கமாகப் பெற்றிருக்கிறார்.

அந்தப் பணத்தில் ஜாலியாக இருந்துள்ளார் உதயகுமார். இது தெரியாமல் கார் உரிமையாளரான வினோத்குமார், போன் செய்து வாடகைப் பணத்தை கேட்டுள்ளார். உதயகுமார் ஒன்றும் தெரியாதவர் போல 10 நாள்களுக்கான வாடகைப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறார். அதன் பின்னர், வாடகைப் பணமும் வரவில்லை. உதயகுமாரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. காரின் உரிமையாளரின் அழைப்புகளைத் தொடர்ந்து துண்டித்துள்ளார் உதயகுமார்.

கார்கள்

சமீபத்தில், உதயகுமாரிடமிருந்து கார் உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு ஓர் குறுஞ்செய்தி வந்தது. அதில், ``உங்கள் கார் என்னிடம் இல்லை. இன்னாரிடம் அடகு வைத்துவிட்டேன். பணத்தைச் செலுத்தி மீட்டுக் கொள்ளவும்’’ என்று கூறப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றுப் பார்த்துள்ளார். அப்போது, அவரது காரை கந்துவட்டி கும்பல் வைத்திருந்ததைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார். உடனடியாக, ராணிப்பேட்டை காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த உதயகுமாரைத் தேடிப் பிடித்து விசாரணைக்காக அழைத்துவந்தனர். விசாரணையில், வினோத்குமாரிடம் காட்டிய அதே ஃபோர்ஜரி பாணியில் ஆற்காடு, ராணிப்பேட்டை, காரை, செய்யாறு உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 16 கார்களை வாடகைக்கு எடுத்துவந்து, அடமானம் வைத்து, லட்சக்கணக்கில் சுருட்டியிருப்பதும் தெரியவந்தது. இந்த 16 கார்களையும் ஊரடங்கில் எடுத்து அடகு வைத்திருப்பதுதான் கூடுதல் அதிர்ச்சிக்குக் காரணம்.

உதயகுமார்

ஊரடங்கிற்கு முன்னர் இருந்தே இந்த மோசடி வேலையை உதயகுமார் செய்திருப்பதும் தெரியவந்தது. கார் அடமானம் வைத்த தகவலை உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவிடுவதையும் உதயகுமார் செய்திருக்கிறார். அடமானம் வைக்கப்பட்டிருந்த 16 கார்களையும் மீட்ட போலீஸார், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவருகிறார்கள். மேலும், வழக்குப்பதிந்து உதயகுமாரை கைதுசெய்தனர்.

``வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை நினைவுபடுத்துவது போல் இந்த நூதன மோசடியில் உதயகுமார் ஈடுபட்டிருக்கிறார். ஓர் திரைப்படத்தில் சைக்கிளை வாடகைக்கு எடுக்கும் வடிவேலு பல நாள்களாக வாடகை தராமல் ஜாலியாக சுற்றுவார். சைக்கிள் உரிமையாளர், `வண்டியை எப்பயா கொடுப்ப..’ என்று கேட்பார். அதற்கு வடிவேலு,`பணம் வரப்போ விடுறேன்’ என்பார். ‘பணம் எப்பயா வரும்’ என்று உரிமையாளர் கேட்க, ‘வண்டியை விடுறப்ப வரும்’ என்றுகூறி சைக்கிளுடன் எஸ்கேப் ஆவார் வடிவேலு.

அதே பாணியில்தான் உதயகுமாரும் கார் உரிமையாளர்களின் வாழ்க்கையில் வில்லங்கமாக விளையாடியிருக்கிறார்’’ என்கிறார்கள் ராணிப்பேட்டை காவல்துறை வட்டாரத்தில்.



source https://www.vikatan.com/news/crime/ranipet-police-arrests-man-in-cheating-charges

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக