வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு 11 வயதில் ஓர் பெண் குழந்தை உள்ளது. வறுமையின் பிடியில் தவிக்கும் கலைவாணிக்குச் சொந்தமாக வீடு கிடையாது. வாடகை செலுத்தி தங்குவதற்கும் வசதி இல்லை. அரவணைக்க வேண்டிய சொந்த பந்தங்களும் விலகி நிற்கின்றன. தன் மகளின் பசியைப் போக்குவதற்காக அடுத்தவரிடம் கையேந்தும் பரிதாப நிலைக்கு அவரைத் தள்ளியிருக்கிறது வறுமை. தன்னுடைய மகளுடன் அதே பகுதியில் உள்ள இடிந்துபோன பாழடைந்த கட்டடத்துக்குள் அடைக்கலம் புகுந்திருக்கிறார் கலைவாணி.
முட்புதர் அடர்ந்துள்ள அந்தக் கட்டடத்திலேயே இரண்டு ஆண்டு வாழ்க்கையை நகர்த்திவிட்டார். பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால், மகளை மடியில் தூங்க வைத்து விடிய விடியக் காவல் காக்கிறார் அந்தத் தாய். இரவு நேரங்களிலும், மழைக் காலங்களிலும் வெளியிலிருந்து அந்தப் பாழடைந்த கட்டடத்துக்குள் நடந்து செல்லக்கூட முடியாது. அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், கலைவாணியால் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்ய முடியவில்லை. அதனால் அருகில் உள்ள மலைகளில் இருந்து சுண்டைக்காய் பறித்துவந்து வள்ளலார் பகுதியில் விற்பனை செய்கிறார்.
தினமும் 20 முதல் 50 ரூபாய்தான் வருமானம் கிடைக்கிறது. சில நாள்கள், அதுவும் இல்லை. வெறும் கையுடன் வீட்டுக்குச் செல்வார். சத்துவாச்சாரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் என்பவர் ஊரடங்கில் அவருக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கொடுத்து உதவியிருக்கிறார். மேலும், கலைவாணிக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் காய்கறிகளை விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்து கொடுக்க உள்ளார் தினேஷ் சரவணன்.
இதுகுறித்து கலைவாணி கூறுகையில், ``சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது இந்த வீடு இடிக்கப்பட்டது.
வீட்டின் உரிமையாளர்கள் காலி செய்துவிட்டனர். மகளுடன் ஆதரவின்றி தவித்த எனக்கு இடிக்கப்பட்ட இந்தக் கட்டடமே வீடாக மாறியது. மோசமான இந்தச் சமூகத்தில் பெண் குழந்தையுடன் பாதுகாப்பு இல்லாமல் இப்படித் தங்கியிருப்பதுதான் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் மர்ம நபர்கள் யாரேனும் வந்து தவறாக நடந்து கொள்வார்களோ... என்று தினம் தினம் பயமாக இருக்கிறது. சாப்பாட்டுக்கே வழியில்லை. ஆரம்பத்தில் காலி மது பாட்டில்களைச் சேகரித்து காயிலாங் கடையில் கொடுத்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வயிற்றைக் கழுவினோம். இப்போது சுண்டைக்காய் பறித்து விற்கிறேன். யாராவது உதவி செய்தால், சாகிற வரைக்கும் மறக்க மாட்டேன்’’ என்கிறார் கவலையோடு!
source https://www.vikatan.com/news/tamilnadu/a-woman-from-vellore-is-living-in-poverty-with-her-child
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக