Ad

புதன், 29 ஜூலை, 2020

தென்காசி: `வனத்துறையினர் மீது கொலை வழக்கு?’ - ஒரு வாரமாக உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து (வயது 75) என்ற விவசாயி, தன் தோட்டத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்ததற்காக 22-ம் தேதி இரவு 11 மணிக்கு வனவர் நெல்லை நாயகம் தலைமையிலான 5 வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.. 

வனத்துறை விசாரணையின்போது உயிரிழந்த அணைக்கரை முத்து

விசாரணையின்போது விவசாயிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அதிகாலை சுமார் 1.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

Also Read: தென்காசி: வனத்துறை அலுவலகத்தில் விவசாயி மரணம்! - மாஜிஸ்திரேட் விசாரணையால் அதிகாரிகள் கலக்கம்

விவசாயியின் சந்தேக மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்திய நிலையில், அவரது குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

அரசு நிவாரணத்தை ஏற்க மறுத்த குடும்பத்தினர்.

அரசின் நிவாரண உதவிகளை ஏற்க மறுத்த அணைக்கரை முத்து குடும்பத்தினர், வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொலை வழக்கு மற்றும் சிபிசிஐடி விசாரணை கோரி, அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன், `மாலை 4 மணிக்கு மேல் உடற்கூறு ஆய்வு செய்யக் கூடாது என்ற சட்ட விதிமுறைகளை மீறி இரவு 9 மணிக்கு அவசரமாக அணைக்கரை முத்து உடற்கூறு ஆய்வு செய்து முடிக்கப்பட்டிருக்கிறது’ என நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டினார். 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

இது குறித்து அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், உடற்கூறு ஆய்வின் முடிவு மற்றும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இன்று (29-ம் தேதி) அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் பின்னரே அணைக்கரை முத்துவின் உடலை உறவினர்கள் வாங்குவது பற்றி முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது.

வனத்துறை மீதான புகார் காரணமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அணைக்கரை முத்து உடல், பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அம்பாசமுத்திரம் அருகே மதியழகன் என்பவரை ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்தது. ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில் போலீஸாரின் கவனக் குறைவால் இந்தக் கொலை நடந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை

மதியழகன் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வருகிறார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்தப்பணியாளர் தருண் சர்மா என்பவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு இழப்பீடு கோரி உடலை வாங்க மறுத்து வருகிறார்கள். 

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மூன்று பேரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்துவது காவல்துறையினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/for-separate-reasons-three-bodies-preserved-in-gh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக