Ad

வியாழன், 30 ஜூலை, 2020

கார்த்திக் இல்லா கதை; சிரித்த சுஹாசினி... `மௌன ராகம்'-இன் முதல் ஸ்க்ரிப்ட் `திவ்யா' எப்படி இருந்தது?

தமிழ் சினிமாவின் நடிப்புப் பாணியை நடிகர் சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின் என்று உத்தேசமாகப் பிரிக்க முடிவதைப் போல அதன் திரைமொழியை மணிரத்னத்திற்கு முன், பின் என்று பிரிக்கலாம். எண்பதுகளின் காலக்கட்டத்தில் ஒரு புதிய பாய்ச்சலை நோக்கி தமிழ் சினிமாவை நகர்த்திய நவீன அடையாளமாக மணிரத்னத்தைச் சொல்ல முடியும். கதை சொல்லும் முறை, ஒளிப்பதிவின் தரம், திரைக்கதையின் மெனக்கெடல், காட்சிக்கோர்வைகளை உருவாக்கும் நேர்த்தி, ‘சுருக்’ வசனம் என்று தமிழ் சினிமாவின் முகத்தை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டவர் மணிரத்னம்.

அரங்கத்தில் சிறைப்பட்டிருந்த தமிழ் சினிமாவை கைப்பிடித்து வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு அழைத்து வந்த சாதனை பாரதிராஜாவைச் சேரும். அதைப் போலவே இதிலிருந்த பெரும்பாலான கிளிஷேக்களைத் தவிர்த்து அதற்கு நவீன வண்ணத்தை அளித்தவர் என்று மணிரத்னத்தைச் சொல்லலாம்.

மணிரத்னம்

வசனத்தை மிகச் சுருக்கமாக உபயோகிக்கும் மணிரத்ன பாணிக்கு ஓர் உதாரணம். ‘தளபதி’ திரைப்படத்தில் ரஜினி செய்த கொலைப்பழியை இன்னொரு ஆசாமி ஏற்றுக் கொண்டு போலீஸில் சரண் அடைவார். ரஜினி அவரிடம் ‘ஏன்?” என்பார். பதிலுக்கு அவர் ‘தேவா’ என்பார். அவ்வளவுதான் இதன் வசனம். மம்முட்டியின் ஏற்பாட்டில் ரஜினி விடுதலையாகிறார் என்பது பார்வையாளர்களுக்கு மிகச் சுருக்கமாக உணர்த்தப்பட்டு விடும்.

‘பம்பாய்’ திரைப்படத்தில். ஓர் இஸ்லாமியப் பெண்ணை தன் மகன் திருமணம் செய்வதை எதிர்ப்பார் நாசர். “நான் உயிரோட இருக்கற வரைக்கும் இது நடக்காது” என்று கத்துவார். பதிலுக்கு அரவிந்த்சாமி சொல்லும் பதில் அதிரடியாக இருக்கும். “அதுவரைக்கும் என்னால காத்திருக்க முடியாது”. பொதுவாக இது போன்றவற்றை சென்ட்டிமென்ட் காட்சியாக்கி விடுவார்கள். ஆனால் மணிரத்னம் எழுதிய வசனம் புதுமையாக இருந்தது.

இத்தனைக்கும் மணிரத்னம் எந்தவொரு சினிமா இயக்குநரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. இது ஒருவகையான பலவீனம் போல் தோன்றினாலும் இதுவே அவரது பலம். அதுவரையான தமிழ் சினிமா இயக்குநர்களின் வரிசையை கவனியுங்கள். ஏறத்தாழ தங்கள் குருமார்களின் பாணியை அப்படியே நகலெடுப்பார்கள். அவர்கள் உருவாக்கும் படங்களில் அவர்களின் தனித்தன்மை இருக்குமே ஒழிய, முன்னோர்களின் பாதையில் தடம் பிசகாமல் பயணிப்பார்கள். பாரதிராஜா பள்ளி, பாலசந்தர் பள்ளி என்று சில உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆனால் இந்த மரபை உடைத்த அரிதான இயக்குநர்களும் உண்டு. இதற்கு சரியான உதாரணங்களில் ஒருவர் இயக்குநர் பாலா. தனது குருவான பாலுமகேந்திராவின் படங்களில் இருந்த மென்மைக்கு எதிராக இருண்மையான உலகங்களை, வன்முறைகளை சித்திரித்தவர்.

மணிரத்னம்

எவரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்ததே, ஒரு புதிய பாதையை மணிரத்னம் உருவாக்க காரணமாக இருந்திருக்கலாம். உலக சினிமாக்களின் மூலமும் புத்தகங்களின் மூலம் நல்ல சினிமாக்களை, அவற்றின் நேர்த்தியை அறிந்த மணிரத்னம் அவற்றை தமிழ் சினிமாவிலும் பிரதிபலிக்க முயன்றார். ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிதாக இருக்கவில்லை.

சினிமா தயாரிப்பு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் முதல் சினிமாவை இயக்கும் வாய்ப்பு மணிரத்னத்திற்கு அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. நிதி மேலாண்மையில் பட்டப்படிப்பு படித்திருந்த மணிரத்னம், சினிமா இயக்குநர் ஆனது ஒரு விபத்து. சினிமா மீது ஆர்வமுள்ள இவரின் நண்பர்கள், ஒரு திரைப்படத்தை உருவாக்க முயற்சி செய்த போது கூட இருந்த அனுபவத்தினால் மணிரத்னத்திற்கும் அந்த ஆவல் தன்னிச்சையாகப் பற்றிக் கொண்டது.

ஆங்கிலத்தில் ஒரு திரைக்கதையை எழுதிய மணிரத்னம் அதை விற்பதற்காகவும் அதன் மூலம் சினிமாவை கற்றுக் கொள்வதற்காகவும் முயன்றார். இதற்காக பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் போன்றவா்களை சந்திக்கச் சென்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இவரது உறவினரான கிருஷ்ணமூர்த்தி, அந்த திரைக்கதையை கன்னடத்தில், குறைந்த முதலீட்டில் தயாரிக்க முன்வந்தார். அதுதான் மணிரத்னம் இயக்கிய முதல் திரைப்படமான ‘பல்லவி அனுபல்லவி’.

இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தாமதம் ஆன சமயத்தில் ‘திவ்யா’ என்றொரு சிறுகதையை ஆங்கில பாணியிலிருந்து விலகி தமிழில் எழுதிப் பார்த்தார் மணிரத்னம். கொச்சையான பிராமணத் தமிழில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதையை பிற்காலத்தில் வாசித்துப் பார்த்த சுஹாசினி, விழுந்து விழுந்து சிரித்தததாக ஓர் உரையாடலில் குறிப்பிடுகிறார் மணிரத்னம்.

மெளன ராகம்

நம் சிஸ்டத்தைப் பாருங்கள். ஓர் அந்நிய ஆண்... தன் பெண்ணை சற்று முறைத்துப் பார்த்தால் கூட ‘டிரஸ்ஸை சரி பண்ணு’ என்று நம் மகளை அதட்டுகிறோம். ஆனால் திருமணம் என்கிற பெயரில், ஓர் அந்நிய ஆண் இருக்கும் அறைக்கு மகளை அனுப்பி வைக்கிறோம். இதிலிருக்கும் முரண்தான் அந்தச் சிறுகதையின் மையம்.

‘திவ்யா’ என்கிற அந்தச் சிறுகதைதான் மெல்ல மெல்ல உருமாறி பிற்பாடு ‘மெளன ராகம்’ என்கிற திரைப்படமாக ஆனது. இது மணிரத்னம் இயக்கிய ‘ஐந்தாவது திரைப்படம்’ என்றாலும் ஒருவகையில் இதைத்தான் மணிரத்னத்தின் முதல் தமிழ் திரைப்படம் எனலாம். ஏனெனில் இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘பகல் நிலவு’, 'இதய கோவில்’ ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் ஒருவகையான கட்டாயத்தினாலும் தயாரிப்பாளர்கள் தந்த நெருக்கடிகளுக்கு இடையிலும் உருவாக்கப்பட்டன. அவற்றின் உருவாக்கத்தில் மணிரத்னத்திற்கு திருப்தியில்லை.

‘பல்லவி அனுபல்லவி'க்குப் பிறகு அவர் சுதந்திரமாக செயல்பட முடிந்த திரைப்படம் ‘மெளனராகம்’. ஏனெனில் இதை தயாரித்தவர் மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரன். குடும்ப தயாரிப்பு என்பதனால் இது சாத்தியமாற்று.

மணிரத்னம் அடிப்படையில் ஒரு பிஸ்னஸ் கன்ஸல்டன்ட் என்பதால் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிர்வாகம் ஆகிய இரண்டு விஷயங்களிலும் கவனமாகவே இருந்தார்.

‘பல்லவி அனுபல்லவி’யைப் போலவே ‘திவ்யா’ சிறுகதையையும் கன்னடத்தில் ஒரு லோ பட்ஜெட் படமாக்கவே மணிரத்னம் முதலில் திட்டமிட்டார். அனந்த் நாக், சுப்ரியா பதக் ஆகிய நடிகர்களையும் யோசித்து வந்திருந்தார். ஆனால இதை தமிழில் தயாரிப்பது என்று முடிவாகியதும், ‘பகல் நிலவு’ திரைப்படத்தில் நடித்திருந்த ரேவதியும் ‘இதய கோயில்’ திரைப்படத்தில் நடித்திருந்த மோகனும் இந்த ப்ராஜக்ட்டின் உள்ளே வந்தார்கள்.

மெளன ராகம்

இதன் கதையைக் கேட்ட ரேவதி, ‘திவ்யா’ பாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வம் காட்டினார். அந்தப் பாத்திரம் அவரது தனிப்பட்ட குணங்களை பிரதிபலித்தது ஒரு முக்கிய காரணம். ஒரு காட்சியில் ரேவதியின் வீட்டில் உள்ளவர்கள் அவரை திருமணத்திற்கு வற்புறுத்தும் போது, வீட்டின் வெளியே நடந்து சென்று ஒரு குட்டைச் சுவற்றில் அமர்ந்து காற்றில் விரல்களை ஆட்டி ரேவதி தனக்குள் புலம்பிக் கொண்டிருப்பது நினைவிருக்கலாம். இது ரேவதிக்கு ஏற்கெனவே உள்ள பழக்கமாம். இதை எப்படி மணிரத்னமும் யோசித்தார் என்று வியக்கிறார் ரேவதி.

அவுட்டோர் காட்சிகளை அழகாக படம்பிடிப்பது கூட வழக்கமானது. ஆனால் ஒரு படத்தின் இன்டோர் காட்சிகள் அத்தனை அழகியலுடன் பதிவானது இந்தப் படத்தில்தான். மோகன் வசிக்கும் டெல்லி வீட்டின் ஒவ்வொரு கோணமும் அத்தனை அட்டகாசமாக பதிவாகியிருக்கும். தாஜ்மஹாலை எத்தனையோ படங்களில் பார்த்திருப்போம். ஆனால் பி.சி.ஸ்ரீராமின் பார்வை வழியாக ஒரு ‘வித்தியாசமான’ கோணத்தில் இதில் பார்க்க முடியும்.

காதலனை மனதிலிருந்து இறக்க முடியாமல், நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்வில் ஓர் இளம்பெண் தவிப்பதும், பிறகு தன் கணவனின் நல்லியல்புகளைப் புரிந்து கொண்டு மனம் மாறுவதும்தான் ‘மெளன ராகம்’ திரைப்படத்தின் மையம்.

இந்த நோக்கில் ஏற்கெனவே சில தமிழ் சினிமாக்கள் வந்துள்ளன. மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படமும் இதே கருதான். உடனே மணிரத்னம் இதையெல்லாம் பார்த்து காப்பிடியத்து விட்டார் என்று ஒற்றை வாக்கியத்தில் நகையாடுவதைப் போல அபத்தம் இருக்க முடியாது. ஓரே கருவை வெவ்வேறு இயக்குநர்கள் கையாளும் முறையில் அதிக வித்தியாசம் உள்ளது.

மெளன ராகம்

‘மெளன ராக'த்தின் மகத்தான வெற்றிக்கு பிரதானமான காரணம், அதன் அட்டகாசமான திரைக்கதைதான். இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் இதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. ஸ்ரீராமின் புதுமையான ஒளிப்பதிவு, லெனின்-விஜயனின் நேர்த்தியான எடிட்டிங் என்று தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்தன.

எண்பதுகளின் காலக்கட்டத்தில் இளம்பெண்களின் கனவு நாயகன்களில் ஒருவராக இருந்த மோகன், ‘மெளன ராகம்’ திரைப்படத்திற்குப் பின்பு அவர்களின் மனங்களில் இன்னமும் அழுத்தமாகப் பதிந்து போனார். தங்களுக்கு வரப்போகும் கணவன், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உதாரணம் காட்டுமளவிற்கு அத்தனை கண்ணியமான பாத்திரம் மோகனுக்கு. இந்த வாய்ப்பை அவர் மிகச் சிறப்பாக கையாண்டார்.

பெண் பார்த்தல் படலத்தை தள்ளிப் போடும் உத்தேசத்துடன், ரேவதி தனது தோழிகளுடன் ஆடிப் பாடிவிட்டு, “வந்தவங்க சொஜ்ஜி பஜ்ஜில்லாம் காலி பண்ணிட்டாங்களா” என்று ஆர்ப்பாட்டமாக வீட்டுக்குள் நுழையும் போது, பொறுமையாக காத்திருந்து ரேவதியை பார்க்கும் அந்த முதல் ஷாட்டில் இருந்து ரயில் நிலையத்தில் பரிதவிப்புடன் மனைவியைத் தேடியோடி கண்டுபிடித்து குழந்தை போல் தூக்கி வரும் கடைசி ஷாட் வரை ‘சந்திரகுமார்’ ஆகவே வாழ்ந்திருப்பார், மோகன்.

‘திவ்யா’ பாத்திரத்திற்கு ரேவதியை விட்டால் வேறு நடிகை பொருத்தமாக இருப்பாரா என்று பெரும்பாலோனோர் எண்ணுமளவிற்கு அந்தப் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ரேவதி. இந்தப் பாத்திரத்தை மனதிற்கு மிக நெருக்கமாக உணர முடிந்ததால் அவரால் தன் பங்களிப்பை சிறப்பாகச் செய்ய முடிந்தது.

முதலிரவு அறைக்கு செல்ல மறுக்கும் மகளிடம் “சின்னக்குழந்தை மாதிரி பேசாதே” என்று அம்மா சொல்ல.. “அப்ப என்னை சின்னக்குழந்தை மாதிரி நடத்தாதீங்க” என்று வெடிப்பதாகட்டும்...
“இந்த வீடு வெறும் செங்கல்லாலும் சிமெண்ட்டாலும் கட்டப்பட்ட ஒரு கட்டடம். இதை வீடா மாத்த வேண்டியது நீதான்” என்று மனைவியின் இருப்பை பெருமைப்படுத்தி பேசும் மோகனிடம் “எனக்கு செங்கல்லும் சிமெண்ட்டும் போதும்” என்று தனது நிராகரிப்பை அழுத்தமாக தெரிவிப்பதாகட்டும்...
மெளன ராகம்
“நீங்க தொட்டா கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு” என்று வார்த்தைகளில் வன்முறையை சிதற விடுவதாகட்டும்...
“உனக்குப் பயம். என் மேல பயம். எங்க என் அழகில மயங்கிடுவியோன்னு பயம்” என்று சீண்டும் கார்த்திக்கின் குறும்பில் மயங்கி மெல்ல மெல்ல காதலில் விழுவதாகட்டும்…

இப்படி பல இடங்களில் அபாரமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ரேவதி. பெண் பார்க்கும் படலத்தில் மஞ்சள் புடவையைக் கட்டிக் கொண்டு அழகான பொம்மை போல் அவர் வந்து நிற்கும் போது... மோகன் என்ன... நமக்கே அவரை திருமணம் செய்ய மறுக்கத் தோன்றாது. அத்தனை வசீகரமான தோற்றத்தில் இருப்பார்.

பழம் பெரும் நடிகரான ரா.சங்கரன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என்று கார்த்திக் அழைக்கும் விதத்தினால் நினைவில் பதிந்து போனார். அந்த அளவிற்கு இந்தப் பாத்திரம் ரசிகர்களிடம் புகழ்பெற்று விட்டது.

இந்தப் படத்தில் கார்த்திக் வரும் போர்ஷனை பலரும் ரசித்திருப்பார்கள். ஒருவகையில் இந்தப் படத்தின் வசீகரங்களில் ஒன்று கார்த்திக்கின் பாத்திரம். அவர் அட்டகாசமான நடையுடன் விறுவிறுப்பான இசையுடன் உள்ளே நுழையும் அந்த அதிரடி சண்டைக் காட்சியே அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். ஹேண்டிகேம் போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், தரையில் பெட்ஷீட்டை போட்டு அதன் மீது கேமிராவை வைத்து இழுக்கச் சொல்லி படமாக்கினார் பி.சி.ஸ்ரீராம்.

பொதுநலப் பிரச்னைகளுக்காக தீவிரவாதப் பாதையில் செல்லும் இளைஞர்களில் ஒருவராக இருக்கும் கார்த்திக், ரேவதியுடனான சந்திப்பிற்குப் பிறகு அவரைச் சீண்டிக் கொண்டேயிருக்கும் காட்சிகள் சுவாரஸ்யம். மைக்கில் தனது காதலைச் சொல்லும் காட்சி அட்டகாசமானது. இதில் ஏறத்தாழ அனைத்து பிரேம்களிலும் மிக அழகாக இருப்பார் கார்த்திக்.

மெளன ராகத்தின் வசீகரங்களுள் ஒன்று கார்த்திக் பாத்திரம் என்றாலும், நான் பல்வேறு சமயங்களில் மெளன ராகம் திரைப்படத்தைப் பார்த்து வந்த போது ஒன்று தோன்றியது.

மெளன ராகம்

பிற்பாடு இந்தத் திரைப்படம் தொடர்பாக மணிரத்னம் ஓர் உரையாடலில் இதே விஷயத்தைத் தெரிவித்த போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரிஜினலாக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டில் கார்த்திக்கின் போர்ஷன் இல்லை. இரண்டே இரண்டு பாத்திரங்களைத் தொடர்ந்து காட்டினால் சலிப்பு ஏற்படலாம் என்பதற்காக செய்யப்பட்ட சமரசமே இது.

இந்த விஷயம் பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கலாம்.

போலவே வி.கே.ராமசாமி, டெல்லி சர்தார்ஜி நகைச்சுவை போன்றவை வணிகக் காரணங்களுக்காக திணிக்கப்பட்டதைப் போலவே தெரிந்தன. ‘காமெடி டிராக்’ என்னும் அபத்தத்தை மணிரத்னமும் பின்பற்றியது ஆச்சர்யம். ‘இதயத்தை திருடாதே’ திரைப்படத்தில் இது மிக கொடூரமான நகைச்சுவையாக இருந்தது. இதற்குப் பிறகான மணியின் இயக்கத்தில் காமெடி பகுதி என்று தனியாக எதுவுமில்லை. ஆனால் இந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் வெகுசன திரைப்படங்களை மட்டுமே பார்க்கும் பார்வையாளர்கள் சலிப்படையலாம் என்கிற இன்னொரு கோணமும் உள்ளது.

ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கி, பிறகு ஓய்ந்து போய் மக்களின் நினைவுகளில் மங்கிய ஒரு நடிகரை திரும்பவும் கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியத்தைத் தருவதை மணிரத்னம் ஓர் உத்தியாகவே கையாள்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சிறிது காலம் நடிக்காமல் இருந்த விஜய்குமாரை, பிரதான பாத்திரம் தந்து அக்னி நட்சத்திரத்தில் மீள்அறிமுகம் செய்திருப்பார்.

மெளன ராகம்
போலவே ‘மெளன ராகத்தில்’ நடிகை காஞ்சனாவை வழக்கறிஞர் பாத்திரத்தில் ஓர் எதிர்பாராத இடத்தில் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது.

ரேவதியின் குழந்தை முதல் இளம் வயது வரையான புகைப்படங்களைத் தேடி உபயோகிப்பது முதல் மோகன் behavioural science-ல் தீஸிஸ் எழுதியவர் என்று போகிற போக்கில் சொல்லப்படும் ஒரு வசனம் வரை பல நுண்விவரங்களை நுட்பமாக பயன்படுத்தியுள்ளார் மணிரத்னம். இந்தப் படிப்புதான் மோகனின் பொறுமைக்கு ஒரு காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.

ரேவதி ஏன் திருமணத்தை இப்படி நிராகரிக்கிறார் என்று பார்வையாளர்கள் குழம்புவது துவங்கி, அவர் மெல்ல திருமணத்திற்குள் தள்ளப்படும் நெருக்கடி, புதிய மணவாழ்க்கையை ஏற்காமல் பிடிக்கும் பிடிவாதம், அதற்கான காரணம் வெளிப்படும் பிளாஷ்பேக், இப்படியொரு பிடிவாதக் குழந்தையை மிக கரிசனையுடன் கையாளும் மோகனின் பொறுமை, அதில் மனம் மாறும் ரேவதியின் நிறைவுக்காட்சி... என்று இதன் திரைக்கதை மிக அற்புதமாக எழுதப்பட்டதோடு அல்லாமல் சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சில இயக்குநர்களுடன் கூட்டணி சேரும் போது இளையராஜாவின் இசை பிரத்யேகமானதாக ஆகி விடுகிறது. அந்த வரிசையில் உள்ள இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவர்கள் இணையும் ஆல்பம் என்றால் அது உத்தரவாதமாக ஹிட் எனலாம்.
மெளன ராகம்

அதிலும் குறிப்பாக மெளன ராகத்தின் பின்னணி இசை என்பது மிகவும் ஸ்பெஷலானது. இதிலுள்ள நுணுக்கங்களை இன்றும் கூட இசைக்கலைஞர்கள் பிரமிக்கிறார்கள். இளம் கலைஞர்கள் இதைப் பயிற்சி எடுக்கிறார்கள். கார்த்திக்கை போலீஸ் துரத்தும் காட்சியை, அதன் பின்னணி இசை எப்படி மேலே உயர்த்திச் செல்கிறது என்பதை மேலை நாட்டு இசைக்கலைஞர்கள் பாடமாகவே நடத்துகிறார்கள்.

எஸ்.பி.பி. மனம் கசிந்து உருக்கத்துடன் பாடிய ‘நிலாவே வா’ பாடல் மிக அற்புதமானது. இது இசைக்கப்பட்ட விதமும் சரி, படமாக்கப்பட்ட விதமும் சரி, அத்தனை அற்புதமானது. ‘பனி விழும் இரவு’ பாடலின் ரிதம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது. இளம் பிரபுதேவாவை இந்தப் பாடலில் காண முடியும்.

Also Read: ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோது பிரகாசித்தவர்... கதாநாயகனாக `கிளிஞ்சல்கள்'ல் சாதித்த `மைக்' மோகன்!

‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடல் இந்த ஆல்பத்தின் இன்னுமொரு அழகு. துவக்க இசை மற்றும் இடையிசை என்று அனைத்து அம்சங்களும் இந்தப் பாடலில் அருமையாக அமைந்திருக்கும். இந்த மெட்டை பிறகு ‘சீனி கம்’ என்கிற இந்திப் படத்தில் இளையராஜா உபயோகித்த போது "அது எப்படி நீங்கள் இந்த மெட்டை உபயோகிக்கலாம்?” என்று செல்லமாக சண்டையிட்டாராம் ரேவதி. ‘ஓஹோ.. மேகம் வந்ததோ'... ‘சின்ன சின்ன வண்ணக் குயில்’ ஆகிய இரண்டுமே துள்ளலிசைப் பாடல்கள். எஸ்.ஜானகி அருமையாகப் பாடியிருப்பார்.

பிரிவு என்பது தவிர்க்கவே முடியாதது என்னும் உச்சக்கட்ட நிலையில், விவாகரத்து என்னும் வாய்ப்பு அவசியமானதுதான். ஆனால் ‘முணுக்’ என்றால் விவாகரத்திற்குச் செல்லும் பழக்கம் இளையதலைமுறை தம்பதிகளிடம் அதிகமாகியிருக்கிறது. அதிலும் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறும் இளம் பெண்கள், அது தரும் தன்னம்பிக்கை காரணமாக, சட்டென்று விவாகரத்தைக் கோரி விடுகிறார்கள். ஆனால் தங்கள் இணையின் சிறிய பிழைகளைச் சகித்துக் கொண்டு அவர்களின் நல்லியல்புகளை மெல்ல மெல்ல புரிந்து கொள்ளும் போது அந்த தாம்பத்திய உறவில் உள்ள பல இனிமைகளைக் காண முடியும் என்கிற செய்தியை, பல வருடங்களுக்கு முன்பே ‘மெளன ராகம்’ பதிவு செய்திருக்கிறது.

அந்த வகையில் இது இளம் தலைமுறையினருக்கு ஒரு சுவாரஸ்யமான பாடத்தைச் சொல்லும் படமாக இருக்கும்.

சத்யஜித்ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’ படத்தைப் பற்றி எழுதும் போது ‘இந்தத் திரைப்படத்தை பார்க்காதவர்கள், தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை இழந்தவர்கள்’ என்று சுஜாதா எழுதினார். ஒருவகையில் தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை பார்வையாளர்களுக்கும் இதையே சொல்வேன். இந்தப் படத்தை நீங்கள் இன்னமும் பார்க்கவில்லையென்றால், நிறைய இழக்கிறீர்கள் என்றே பொருள். தமிழ் சினிமாவின் வரிசையில் அத்தனை முக்கியமான படம் ‘மெளன ராகம்’.

‘மெளன ராகம்’ திரைப்படம் பற்றிய உங்களின் விமர்சனத்தை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://cinema.vikatan.com/tamil-cinema/nostalgia-series-revisiting-mani-ratnams-trendsetter-mouna-ragam-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக