உலக புலிகள் தினம் நேற்று [ஜூலை 29 ] கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினமே இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை அரசு வெளியிட்டது.
2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன் படி முதுமலையில் மட்டும் 103 புலிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் புலிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் ஆறாவது இடத்திலும், தமிழ்நாட்டில் முதல் இடத்திலும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது.
இது மட்டும் அல்லாது நீலகிரி வனக்கோட்டம், கூடலூர், முக்கூர்த்தி உள்ளிட்ட பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகின்றன. நீலகிரி முழுவதும் சுமார் 170 புலிகள் இருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பெருக்கத்திற்கு ஏற்ப வாழிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முக்கூர்த்தி தேசிய பூங்காவைப் புலிகள் காப்பகமாக மாற்றும் முயற்சியில் தமிழக வனத்துறை ஈடுபட்டு வருகிறது.
வனத்துறை உயரதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், "முக்கூர்த்தி, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கூர்த்தியில் தற்போது இரண்டு வெள்ளைப் புலிகள் உட்பட மொத்தம் 13 உள்ளன. மேலும் [nilgiri tahr] நீலகிரி வரையாடுகளின் பாதுகாப்பிடமாகவும் உள்ளது.
78 ஹெக்டர் பரப்பளவுள்ள முக்கூர்த்தி தேசிய பூங்காவைப் புலிகள் காப்பகமாக அறிவிப்பதன் மூலம், எதிர் காலத்தில் புலிகளை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும். எனவே, தேசிய புலிகள் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்துள்ளோம்" என்றார்.
வன வளம் மிகுந்த நீலகிரியில் முதுமலையைத் தொடர்ந்து இரண்டாவது புலிகள் காப்பகமாக முக்கூர்த்தி அமையவுள்ளது காட்டுயிர் ஆர்வலர்களிடம் நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/environment/mukurthi-national-park-declare-proposal-to-tiger-reserve
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக