சென்னையில் கொரோனா ஊரடங்கிலும் செயின், செல்போன் வழிபறி சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்த குற்றச் செயல்களில் பெரும்பாலும் 18-வயதுக்கு குறைவானவர்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர். அதற்கு சிறுவர்களின் தவறான வாழ்க்கைப்பாதையே காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். படிக்கிற வயதில் போதை வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறுவர்கள் தடமாறிவிடுகின்றனர். கஞ்சா போதைக்கு சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் அடிமையாகியுள்ளனர்.
கடந்த 10-ம் தேதி சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் வசிக்கும் திலகவதி (54) என்பவர் ஆர்.கே மடம் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம கும்பல், அவரது தங்கச் செயின் பறித்தது. இதுகுறித்து திலகவதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. செயின்பறிப்பு சம்பவம் நடந்த இடத்திலிருந்து பைக் சென்ற வழிகளில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். ஆர்.ஏ-புரத்தில் தொடங்கிய ஆய்வு எண்ணூர் வரை நீடித்தது. போலீஸாரின் பொறுமையான தேடுதல் வேட்டையில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞர்கள் குறித்த தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் விசாரித்தபோது 3 இளைஞர்கள் பயணித்த பைக்குகள் அனைத்தும் திருடப்பட்டவைகள் என தெரியவந்தது. அந்த பைக்குகள் திருட்டு போனதாக காவல் நிலையங்களில் புகாரளிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து பைக் திருட்டு நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து பைக்குகளைத் திருடியவர்கள்தான் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதை போலீஸார் உறுதிபடுத்தினர். கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணிகளுக்கிடையேயும் போலீஸார் செயின் பறிப்பு கொள்ளையர்களை விடாமல் தேடிவந்தனர். போலீஸாரின் நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பிறகு செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது புளியந்தோப்பைச் சேர்ந்த அபிமன்யூ (21), சித்தாலப்பாக்கம் அஜய்ராகுல் (20), புளியந்தோப்பைச் சேர்ந்த நசீர் என தெரியவந்தது. இவர்களிடமிருந்து 7 சவரன் தங்கச் செயின் மற்றும் 8 பைக்குகளை அபிராமபுரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் கூறுகையில்,`` இந்தக் கூட்டத்துக்கு தலைவனாக பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவன் செயல்பட்டுள்ளான். இவனின் கூட்டாளிகள் அதிகாலை நேரத்தில் 2 பிரிவுகளாகப் பிரிந்து செல்வார்கள். நடைபயிற்சி செய்யும் பெண்களைப் பின்தொடர்ந்து செயின், செல்போன்களை பறிப்பார்கள். அதற்காக அதிவேகமாகச் செல்லும் பைக்குகளை முதலில் திருடுவார்கள்.
பின்னர், அந்தப் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி சென்று கண்இமைக்கும் நேரத்தில் செயின், செல்போனைப் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிடுவார்கள். ஹெல்மெட் அணிந்திருப்பதால் சிசிடிவி கேமராவில் முகம் தெரியாது. மேலும் பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரித்தால் அது திருட்டு பைக் என்ற விவரம் மட்டுமே தெரியவரும். அதனால் அவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதில் சிக்கல் நீடித்தது. ஆனால் ஆர்.ஏ-புரத்தில் திலகவதியிடம் செயினைப் பறித்துச் சென்ற 3 இளைஞர்களை விடாமல் எண்ணூர் வரை பின்தொடர்ந்தோம். அப்போது ஒருவனின் விவரம் கிடைத்தது. அவன் மூலம் மற்றவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து 3 பேரை கைது செய்துள்ளோம்.
இந்தக் கும்பல் சென்னை புளியந்தோப்பு, அண்ணா நகர், மாதவரம், திருவேற்காடு, கோட்டூர்புரம், அபிராமபுரம், ராயபுரம், எம்கேபி நகர் என 13 க்கும் மேற்பட்ட இடங்களில் 8 அதிவேக பைக்குகளைத் திருடியுள்ளனர். மேலும், ஏராளமான பெண்களிடமிருந்து செயினையும் பறித்துள்ளனர். இந்தக் கும்பலிடமிருந்து 64 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கும்பல் குறித்த முழுவிவரங்களைச் சேகரித்துவருகிறோம். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என்றனர்.
Also Read: சென்னை:அடகு வைக்கப்பட்ட பிஎம்டபுள்யூ கார்; அவசரத்துக்கு வாங்கிய ஆடி கார்! ஏமாந்த தொழிலதிபர்
போலீஸ் விசாரணையின்போது 3 இளைஞர்களும் ஒரு முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர். ` நாங்கள் பைக் மற்றும் செயினை மட்டும்தான் திருடுவோம். செல்போனை வழிப்பறி செய்தால் அதை விற்பதில் பல பிரச்னைகள் வருகின்றன. ஆனால், இன்று தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், தங்கச் செயின்களுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. அதனால்தான் செல்போன்களைப் பறிப்பதை விட தங்கச் செயின்களை வழிப்பறி செய்ய எங்கள் டீம் தலைவன் அறிவுறுத்தியுள்ளார்' என்று கூறியதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-3-youths-in-chain-snatching-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக