சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலானவர்கள் முடங்கியுள்ளனர். இந்தநிலையில், சென்னையில் கஞ்சா, சூதாட்டம் தங்கு தடையின்றி நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா பிரபலங்களும் பிசினஸ்மேன்களும் பணம் வைத்து சூதாடுவதாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்கு நேற்றிரவு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவல் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கிடைத்த க்ரீன் சிக்னல் அடிப்படையில் போலீஸார், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது குறிப்பிட்ட வீட்டுக்குள் போலீஸார் சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சூதாடிக் கொண்டிருந்தனர். உடனே அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது ரெய்டுக்கு வந்த போலீஸாரிடம், `இது யாருடைய இடம் தெரியுமா? தேவையில்லாமல் பெரிய இடத்தில் கை வைக்காதீங்க. வந்த வழியாகச் சென்று விடுங்கள்’ என்று அங்கிருந்த சிலர் கூறினர். அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத போலீஸார், தங்களின் கடமையைச் செய்யத் தொடங்கினர்.
அப்போது நடிகர் ஷாம் (42) உள்பட 13 பேரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதில் நடிகர்கள், சினிமா பிரபலங்கள், பிசினஸ்மேன்கள் கலந்துகொள்வது தெரியவந்தது. ரகசியக் குறியீடுகள், சீக்ரெட் கோடுகள் மூலம் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. பின்னர் 13 பேரும் இரவு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Also Read: `காரைக்காலில் சூதாட்டம் நடத்திய தலைமைக் காவலர்!’ - கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்த அதிரடிப்படை
இந்தச் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் சூதாட்டம் நடப்பதாகத் தகவல் கிடைத்து ரெய்டில் ஈடுபட்டோம். அங்குச் சென்றபோதுதான் நடிகர் ஷாமும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் நைட் டிரஸில் இருந்தார். அதனால் இந்த வழக்கில் நடிகர் ஷாம், அரும்பாக்கத்தைச் சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைபார்க்கும் கோபி, புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் சித்தார்த் (31), சாஸ்திரி நகரைச் சேர்ந்த சினிமா இயக்குநர் ஆனந்த் (33), குரோம்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தகிஷோர் (39), நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிசினஸ்மேன் பட்டேல் (26), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நடிகர் ஷாம் வீட்டு வேலைக்காரர் வசந்த் (38), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நடிகர் ஷாம் வீட்டு வேலைக்காரர் மணி (26), பெரியமேடு பகுதியைச் சேர்ந்த பக்ரூபா (26), அடையார் பகுதியைச் சேர்ந்த பிசினஸ் மேன் நசீர் (21), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிசினஸ் மேன் பாலாஜி (33), அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இன்ஜினீயர் சைமன் (33), ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த கௌசிக் (30) ஆகிய 13 பேரைப் பிடித்துள்ளோம். ஜாமீனில் அவர்களை விடுவித்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-13-including-actor-shaam-in-gambling-charges
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக