பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பேருந்து நிறுத்தம் ஒரு 400 மீட்டர் இருக்கும்... என்னைக் கடந்து சென்ற பேருந்தைப் பிடிக்க வேண்டும்... பள்ளி நாள்களில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த எனக்கு பல வருடம் கழித்து மீண்டும் ஒரு சவால்...
தோளில் கிடந்த பையை ஒரு கையிலும் மறுகையால் மொபைல் உள்ள சட்டை பையையும் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். ஓடும்போது யார் மீதும் மோதிவிடாமல் பாதுகாப்பாகவும் ஓடி இலக்கை அடைந்தபோது...
``மணி எட்டாயிடுச்சு அதென்ன தரைல பண்ற எக்ஸர்சைஸ கட்டில்ல பண்ணிக்கிட்டு இருக்கீங்க'' என்றாள்.
எழுந்து உட்கார்ந்தேன். கனவைப் பற்றி சொல்லாமல் ஏதோ அவள் சொன்னது போலவே கைகால்களை ஆட்டி இது புதுசா நேத்து யூடியூப்ல பார்த்தது என்றவாறே அசடுவழிந்தேன்.
``இன்னமும் இந்த லாக்டௌனும் முடியல கொரோனாவும் குறையல...''
வாட்ஸப் ஸ்டேட்டஸில் நண்பனின் மீம்ஸை பார்த்துக்கொண்டே. எனது ஸ்டேட்டஸ்க்கு நேற்று டௌன்லோட் செய்த ஐன்ஸ்டீன் படத்துடனான ஊக்குவிக்கும் கருத்தை வைத்துவிட்டு காலைக்கடன்களை முடித்தேன்.
``பேப்பரை கேட்டிலிருந்து எடுக்கலயா...''
என்று கேட்டுக்கொண்டே எடுத்து வரச் சென்றேன்.
எதிர் வீட்டிலும் என்னைப் போலொருவர். பரஸ்பரம் அசடு வழிந்து கொண்டோம்... ``ஓ... இன்று வியாழக்கிழமையா... விகடனும் வந்துருக்கே'' என்றவாறே வீட்டிற்குள் நுழைந்தேன்..
லாக்டௌன் கதைகளையும் வலைபாயுதேவையும் எப்போதும் போல முதலாவதாகப் படித்து ரசிக்கும்போதே என்னவளின் கருணையினால் மணக்கும் அந்த வெள்ளை நிற மக்கில் அந்த ஆவி பறக்கும் நுரை ததும்பும் காபி கிடைத்தது.
``சட்டி நிறைய காபி கொடுத்தாச்சு அந்த விகடனக் கொடுங்க'' என்றாள்.
ஆம், என்னைத் தவிர மற்ற எல்லோராலும் அந்த மக், சட்டி என்றே அழைக்கப்படும்.
காபியுடன் பண்டமாற்றாய் விகடன் சென்றுவிட செய்தித்தாளை படிக்க ஆரம்பித்தேன். குளித்து சாப்பிட்டுவிட்டு மடிக்கணினியை ஆன் செய்து சில மெயில்களைப் படித்துக்கொண்டிருந்தபோது பலநாளாய் தயார் செய்ய வேண்டும் என நினைத்த டேட்டா நியாபகம் வர அதற்கான தகவல்களை நெட்டில் தேடித்தேடி சேர்த்துக்கொண்டிருந்த எனக்கு நேரம் போனதே தெரியவில்லை..
மதிய உணவும் மாலையில் குடித்த தேநீரும்கூட எனது தேடலை தடுக்கவில்லை.
டிவியில் ஓடிக்கொண்டிருந்த வடிவேலு காமெடி மாற்றப்பட்டு... டிரெண்டிங்கிலுருக்கும் நமது தமிழ் கடவுள் முருகனை வேண்டிய பாடல் கேட்க ஆரம்பித்தது.
என்னவளோ, ``எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டிருக்கேன் சாமிகும்பிடப் போறேன் அந்த சேனல மாத்துங்கன்னு அப்பிடியே கம்ப்யூட்டருக்குள்ளயே போயிருங்க... அதுவும் பாவம் சூடாயிடப்போகுது'' என்றவாறே சென்றுவிட்டாள்.
``இன்னும் நான்கைந்து டேட்டா கிடைத்துவிட்டால் போதும் முடித்துவிடலாம்...'' என்றவாறே மீண்டும் மூழ்கிப் போனேன். சில எதிர்பார்த்த டேட்டாக்கள் கிடைக்காததால் தேடித்தேடி தலையே வலிக்க ஆரம்பித்தது...
ஸ்கிரீனை லாக் செய்துவிட்டு பார்க்கும்போது பயந்து அலறியேவிட்டேன். கணினி திரையில் தெரிந்த என் பிம்பத்தில் தலையிலிருந்து புகை வந்துகொண்டிருந்தது... என்னவள் சொன்னதுபோல் ஒருவேளை என் மூளை சூடாகி புகைந்து விட்டதோ என்றவாறே அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து தலையில் ஊற்றிக்கொண்டேன்.
எதிரில் உட்கார்ந்து விகடனைப் படித்துக்கொண்டிருந்த என்னவளோ, என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னாள். ``அது சாம்பிராணி புகை... அதோட உங்களுக்கு ஒன்னும் ஆகாது. எதாவது இருந்தால்தானே'' என்றாள்.
என்னை முற்றும் அறிந்தவளாயிற்றே!
- சுக்கிரன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/lock-down-fun-story
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக