Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

சென்னை: `பேசித் தீர்த்துக் கொள்கிறோம்!’ - ஏ.பி.வி.பி சுப்பையா வழக்கின் தற்போதைய நிலை?

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலாஜி விஜயராகவன். சில நாட்களுக்கு முன்னர் ஆதம்பாக்கம் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நங்கநல்லூர் ராம்நகரில் தன் சித்தி தனியாக வசித்து வருவதாகவும், அவர் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மருத்துவர் சுப்பையா என்பவர் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தும் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை தூக்கி எறிந்தும் தகராறில் ஈடுபடுவதாகவும் கூறியிருந்தார்.

புகாருக்கு உள்ளான மருத்துவர் சுப்பையா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் புற்றுநோயியல் சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிபவர். அரசு மருத்துவர் மீது புகாரளிக்கப்பட்டதால், உடனடியாக வழக்கு பதியாமல் போலீசார் காலதாமதப்படுத்தியுள்ளனர். பொறுத்துப் பார்த்த பாலாஜி விஜயராகவன், தன் சித்திக்கு நேரும் துயரத்தை தன்னுடைய முகநூலில் பதிவிடவும் விவகாரம் வைரலானது.

சுப்பையா

புகாருக்கு உள்ளான மருத்துவர் சுப்பையா பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யின் தேசியத் தலைவராக இருப்பவர். இதனால், அவர் மீதான புகாரும் அரசியல் வடிவமெடுத்தது. சுப்பையா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டனர். விவகாரம் சீரியஸானதால், பாலாஜி விஜயராகவன் அளித்திருந்த புகார் மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்தநிலையில், பாதிப்புக்குள்ளான பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பும் சமாதானமாக போய்விடுவது, பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டு, சுப்பையாவும் அப்பெண்ணும் போலீஸில் எழுதியும் கொடுத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு என்னானது..? பாலாஜி விஜயராகவனிடம் பேசினோம்.

Also Read: சென்னை:`சீக்ரெட் கோடு; சிக்கிய நடிகர் ஷாம்!' - நள்ளிரவில் பரபரப்பான அப்பார்ட்மென்ட்

``நான் பதிவு செய்திருந்த வழக்கு நீதிமன்றம் செல்கிறது. புகாரை நான் வாபஸ் பெறவில்லை. சில காரணங்களால் என் சித்தி போலீஸில் சமாதானமாகச் செல்வதாக எழுதிக் கொடுத்துவிட்டார். ஒரு நல்லது நடக்கும் என்கிற மனநிலையில் தான், இவ்விஷயத்தை நான் சமூகவலைதளங்களில் பதிவிட்டேன். மற்றபடி யாரையும் சிறுமைப்படுத்துவதற்காக இதை நான் எழுப்பவில்லை. வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போது சந்திப்பேன்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

வீட்டு வாசலில் சிறுநீர் கழிக்கும் காட்சிகள்

இந்த விவகாரம் வெடித்தபோது, சிறுநீர் கழிக்கும் வீடியோவில் இருப்பது மருத்துவர் சுப்பையா அல்ல, அது போலியான வீடியோ என ஏ.பி.வி.பி-யிடம் இருந்து விளக்கம் வந்தது. ஆனால், அவர் தான் இந்த அநாகரீக செயலைச் செய்ததாகப் பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் உறவினர்கள் கூறினர். மருத்துவர் சுப்பையா தரப்பில் பேசினோம். ``புகார் மீது சமாதானமாக செல்வதாக இருதரப்பும் ஒப்புக்கொண்ட நிலையில், மேற்கொண்டு இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவதற்கு ஏதுமில்லை” என்றதோடு முடித்துக் கொண்டனர்.



source https://www.vikatan.com/news/crime/what-is-the-status-of-abvp-leader-dr-subbiah-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக