Ad

திங்கள், 27 ஜூலை, 2020

அப்துல்கலாம் நினைவு தினம்: பேக்கரும்பு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர்

`மக்கள் ஜனாதிபதி' என அனைவராலும் அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதையொட்டி ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கலாம் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி செலுத்தினர்.

அல்துல்கலாம் நினைவிடத்தில் மாவட்ட கலெக்டர்

ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது கல்வியாலும், விடா முயற்சியினாலும் நாட்டின் அக்னி நாயகனாக உருவெடுத்தவர். தனது பணி ஓய்வினைத் தொடர்ந்து நாட்டின் ஜனாபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நாட்டின் முதல் குடிமகனாக உயர் நிலையை அடைந்தார். நாட்டின் உச்சபட்ச பதவியில் இருந்தாலும் கூட எப்போதும் மாணவர்களுக்கு உத்வேகம் ஏற்படுத்தும் பணிகளிலும், மக்கள் அணுகும் வகையில் எளிமையான வாழ்க்கையிலும் ஆர்வத்தோடு இயங்கினார். இதனால் `மக்களின் ஜனாதிபதி' எனப் பெயரெடுத்தார். காலம் எல்லாம் மாணவர்களுக்காகவே தனது வாழ்நாளை செலவழித்தவர் கலாம்.

இதற்குப் புகழ் சேர்க்கும் நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27 அன்று மேகாலயா மாநிலம் சில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிய நிலையிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினர் தேசிய நினைவகத்தினை அமைத்துள்ளனர். மாணவர்களின் ஆராய்ச்சி தொடர்பான ஆய்வரங்கம், நூலகம், கருத்தரங்க கூடம் உள்ளிட்டவை இங்கு ஏற்படுத்தப்பட உள்ளதாக இதனை திறந்து வைத்த பிரமர் மோடி அறிவித்தார். ஆனால் அவர் அறிவித்து சென்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் எந்த முன்னேற்றமும் இன்றி அப்துல் கலாம் நினைவிடம் அப்படியே உள்ளது. இந்நிலையில் இன்று கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அல்துல்கலாம் நினைவிடம்

இதையொட்டி இன்று காலை கலாமின் மூத்த சகோதர் முகம்மது முத்து மீரா மரைக்காயர் மகள் நசீரா மரைக்காயர், மகன் ஜெயினுலாபுதீன், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம், தமிழ்த்தாய் அறக்கட்டளை தலைவர் கராத்தே பழனிச்சாமி, பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன், நினைவாக பொறுப்பாளர் அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் சிறப்புத் தொழுகை நடத்தி மரியாதை செய்தனர். உடல் நலக்குறைவால் பெரியவர் முகம்மது முத்து மீரா மரைக்காயர் இதில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அரசு சார்பில் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஆண்டுதோறும் அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நினைவு தினம் இந்த ஆண்டு கொரோனா காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்டக் காவல் துறையின் சார்பில் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு டி.ஐ.ஜி, எஸ்.பி அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 1200 மரங்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட காவல் அலுவலகத்தில் அப்துல்கலாம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் கூடத்தினை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மயில்வாகனன் திறந்து வைத்தார். இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், கூடுதல் எஸ்.பி லயோலா இக்னேசியஸ், தனிப்பிரிவு ஆய்வாளர் ஜான்பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலாம் நினைவு தினத்தின் முதல் இரு ஆண்டுகளில் மட்டும் அரசு சார்பில் பெரிய அளவிலான விழா நடத்தப்பட்டது. வருடங்கள் செல்ல செல்ல அவை முற்றிலும் குறைந்து விட்டன.

மரக்கன்று நடும் காவல்துறை அதிகாரிகள்.

இந்நிலையில் ம.தி.மு.க சார்பில் மட்டும் அப்துல்கலாம் நினைவு தின உரையினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை காணொலிக் காட்சி வழியாக நிகழ்த்த உள்ளார். இன்று மாலை 6 மணிக்கு zoom செயலி வழியாக இந்த உரையினை வைகோ நிகழ்த்துகிறார்.



source https://www.vikatan.com/news/general-news/a-p-j-abdul-kalam-family-paid-respect-to-him-in-his-memorial

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக