மலையாள நடிகர் அனில் முரளி, உடல் நலக்குறைவால் காலமானது மலையாள சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷாம் நடித்த `6 மெழுகுவர்த்திகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனில் முரளி, இந்த ஆண்டு வெளியான `வால்டர்’ படம் வரைக்கும் பல தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். இவரை `6 மெழுகுவர்த்திகள்’ படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் வி.இசட்.துரை, அனில் முரளி குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
``அனில் முரளி அவர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?"
`` `6 மெழுகுவர்த்திகள்’ படத்துல பெண்மை கலந்த ஆண் கதாபாத்திரம் ஒண்ணு இருந்தது; அதுதான் படத்தோட வில்லன் கேரக்டர். மலையாளம் கலந்த தமிழில் பேசக்கூடிய அந்தக் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம்னு பல யோசனைகளுக்குப் பிறகு, அனில் முரளி சாரை கமிட் பண்ணேன். அனில் சாருக்கு இதுதான் முதல் தமிழ்ப்படம். அவர் மலையாளத்தில் பெரிய நடிகராக இருந்தாலும், தமிழ் தெரியாததால் இந்தப் படத்தில் நடிக்க தயங்குவாரோனு நினைச்சேன். ஆனால், அவர் ரொம்ப ஆர்வமா இருந்தார். இந்தப் படத்தில் அவரோட காஸ்ட்யூம், பாடி லாங்குவேஜ் எல்லாமே வித்தியாசமா இருக்கும். அதனால, ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்த கேரக்டரில் நடிக்கிறதுக்காக அனில் சாருக்கு கொஞ்சம் ட்ரெய்னிங்கும் கொடுத்தோம்.
ஷூட்டிங் நடக்கும் போதும் ரொம்ப ஆர்வமா இருந்தார். தமிழில் பேசி நடிக்கிறதில் அவருக்கு கொஞ்சம் சிரமங்கள் இருந்தனால, அவரை, `மலையாளத்திலேயே பேசி நடிங்க’னு சொன்னேன். ஆனால், அவர் கஷ்டப்பட்டு, முயற்சி பண்ணி தமிழிலேயே பேசி நடிச்சார். தமிழ் சரியா பேச வரலைனாலும், அவர் கேரக்டருக்கு அவரே மெனக்கெட்டு டப்பிங்கும் பேசினார். படம் ரிலீஸானதுக்குப் பிறகு அவரோட நடிப்பை பல பேர் பாராட்டினதும், ரொம்ப சந்தோஷப்பட்டார். முக்கியமா, அந்த வருடத்தோட சிறந்த வில்லனுக்கான ஆனந்த விகடன் விருது அவருக்கு கிடைச்சது. அந்த புக்கைப் பார்த்ததும், என்னை நேரில் பார்க்கணும்னு உடனே என் வீட்டுக்கு வந்துட்டார். `நான் நடிச்ச முதல் தமிழ்ப்படத்திற்கே விருது கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்’னு சொன்னார்.’’
`` `6 மெழுகுவர்த்திகள்’ படத்திற்குப் பிறகு உங்க இருவருக்குமான நட்பு எப்படி இருந்தது?"
`` `6 மெழுகுவர்த்திகள்’ படம் ரிலீஸானதுக்கு அப்புறம் 5 வருடங்கள் நான் படம் இயக்கவில்லை. விளம்பரப் படங்கள் எடுக்கிறதில் பிஸியாகிட்டேன். அனில் சார் அடுத்தடுத்து பல படங்களில் நடிச்சிட்டு இருந்தார். அந்தப் படங்கள் பார்த்திட்டு நானும் அவர்கிட்ட பேசுவேன். அவர் சென்னைக்கு வரும் போதெல்லாம், என்னை வந்துப் பார்ப்பார். சமுத்திரக்கனி எடுத்த, `நிமிர்ந்து நில்’, `அப்பா’, `தொண்டன்’, `நாடோடிகள் - 2’ என பல படங்களில் நடிச்சி, சமுத்திரக்கனிக்கு நல்லா பழக்கமாகிட்டார். நானும் 5 வருடங்கள் கழித்து சமுத்திரக்கனியை வைத்து `ஏமாலி’ படம் எடுக்கும் போது, அனில் சார் ஒரு கேரக்டரில் நடிக்கிற மாதிரி இருந்துச்சு. அப்புறம், அவர் வேற படத்தில் பிஸியாக இருந்தனால, அதில் நடிக்க முடியாமல் போயிருச்சு.
இப்போ நான் அமீரை வெச்சு எடுத்திட்டு இருக்கிற `நாற்காலி’ படத்தில் அனில் சாருக்கு ஒரு கேரக்டர் சொல்லியிருந்தேன். அவருக்கும் அது ரொம்ப பிடிச்சிருந்தது. மார்ச் 25-ம் தேதி அவர் கேரக்டருக்கான ஷூட்டிங் ஆரம்பமாக இருந்துச்சு. கொரோனா வைரஸ் பரவலின் காரணமா மார்ச் 19-ம் தேதியே ஷூட்டிங் எல்லாத்தையும் நிறுத்துனதுனால, அவரோட போர்ஷனை அப்போ எடுக்க முடியலை. `லாக்டெளன் முடிஞ்சதும் ஆரம்பிக்கலாம் சார்'னு சொல்லி வெச்சிருந்தேன். அதுமட்டுமில்லாம, மலையாளத்தில் `ஜோசப்' படத்தில் நடிச்சிருந்த ஜோஜு ஜார்ஜை வெச்சு, தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் பண்ணலாம்னு ப்ளான் பண்ணேன். அனில் சாரும் `ஜோசப்' படத்துல நடிச்சிருந்ததுனால, அவர் மூலமாத்தான் ஜோஜுகிட்ட இந்தப் படத்தைப் பற்றி பேசுனேன். அப்போ அனில் சார், `இந்தப் படத்தில் எனக்கு ஒரு ரோல் இருக்கா சார்’னு கேட்டார். `நிச்சயமா இருக்கு சார். எனக்கு முதல் மலையாளப் படம். நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்’னு சொன்னேன். இந்தப் படம் சம்பந்தமா 15 நாளுக்கு முன்னாடிகூட அனில் சார்கிட்ட பேசினேன். ஆனால், அவர் இறந்துட்டார்னு செய்தி வந்ததும் எனக்கு ரொம்பவே ஷாக்கா இருந்துச்சு. இப்போ வரைக்கும் அதிலிருந்து என்னால மீளவே முடியலை.’’
source https://cinema.vikatan.com/tamil-cinema/director-vz-durai-shares-his-memories-of-actor-anil-murali
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக