Ad

வியாழன், 30 ஜூலை, 2020

சென்னை: `கடையைத் திறந்துட்டேன்; ஒருநாளை ஓட்டுறதே கஷ்டமா இருக்கு!’-கலங்கும் `காப்லர்' தாத்தா

கொரோனா பல எளிய மனிதர்களுடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. நடைபாதை வியாபாரிகள் முதல் தினசரி கூலி பெறும் தொழிலாளர்கள் வரை அனைவரும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்க மறுபுறம் எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை தேவைகள் தொடர்பான போராட்டங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்த மனிதர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்த உதவிகள் பலரையும் நெகிழ வைக்கும்படியாகவும் இருக்கின்றன. அப்படி நெகிழ வைக்கும் கதைகளில் ஒன்றுதான் இது.

இர்ஃபான் பதான்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் வெளியே உள்ள நடைபாதையில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர்களுக்கான ஷூ, கிளவுஸ் தைப்பது, பேட் ஸ்டிக்கர் ரிமூவ் செய்வது, ஹெல்மட் சரி செய்வது என எல்லா வேலைகளையும் அமைதியாக உட்கார்ந்து செய்து கொண்டிருப்பவர் பாஸ்கரன் தாத்தா. சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் காப்லராகவும் பணிபுரிந்து வருகிறார். தோனி, ரெய்னா, சச்சின், விராட் கோலி உட்பட பல கிரிக்கெட் வீரர்களுக்கும் பாஸ்கரன் மிகவும் அறிமுகம் ஆனவர். அசாருதீன் தொடங்கி தோனி வரை அனைத்து கேப்டன்களுடனும் வேலை செய்திருக்கிறார், பாஸ்கரன். 1993-ம் ஆண்டு நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் தொடங்கி ஸ்டேடியத்தின் காப்லராக இவர் பணியாற்றி வருகிறார்.

வாழ்க்கையின் மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையில் இருந்த பாஸ்கரன் தாத்தாவுக்கு, தனது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான வருமானத்தை இன்று வரை வழங்கிக் கொண்டிருப்பது, கிரிக்கெட் போட்டிகள்தான். போட்டிகள் நடக்கும்போது ஸ்டேடியத்துக்கு உள்ளும் மற்ற நாள்களில் நடைபாதையிலும் அமர்ந்து தனது பணியை செய்து வந்த அவரது வாழ்விலும் கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்குப் பிறகு எந்தவித வருமானமும் இல்லாமல் இருந்துள்ளார். போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் அதன்மூலம் வரும் வருமானமும் இல்லாமல் மிகவும் சிக்கித் தவித்துள்ளார். இந்த நிலையில், பாஸ்கரன் தாத்தாவை நினைவு வைத்துக்கொண்டு கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கடந்த மாதம் அவருக்கு உதவி செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளார்.

Also Read: தோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்! யார் இவர்?

இர்ஃபான் பதான் உதவியால் நெகிழ்ந்த பாஸ்கரன் நம்மிடம் பேசும்போது, ``இர்ஃபான் பதான் மற்றும் யூசுஃப் பதான் இருவருமே நிறைய பாதிப்படைந்த நபர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அப்போது என்னுடைய நினைவும் அவர்களுக்கு வந்துள்ளது. அப்போது, அவருடைய நண்பரிடம் விஷயத்தை சொல்லி நேரடியாக என்னிடம் வந்து பணத்தைக் கொடுத்து உதவி செய்தார். டீமில் இருக்கும்போது எங்களுக்கு இடையில் நல்ல பழக்கம் இருந்தது. பணம் அனுப்பியதும் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார். `பணம் கிடைத்ததா?’ என்றார். `உதவிக்கு மிகவும் நன்றி’ என்றேன். `குட்’ என்று சொன்னார். நியாபகம் வைத்து உதவி பண்ணிருக்காரு. உதவியை மறக்க முடியாது. வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவு எல்லாத்தையும் அதை வைத்துதான் ஓட்டினேன். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை இருந்தது. அவருடைய உதவி மிகவும் நெகிழ வைத்தது” என்று தெரிவித்தார்.

பாஸ்கரன்

ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாதது குறித்து பாஸ்கரன்,``சேப்பாக்கம் பகுதியில் போட்டிகள் நடக்கும்போது கொஞ்சம் சம்பாதிப்பேன். ஆனால், இப்போ போட்டியை வெளிநாட்டில் நடத்துறாங்க. போட்டிகள் இல்லாமல் போனது எனக்கும் வருத்தம்தான். கொரோனா பாதிப்பு இருக்குறதால வேற வழியும் இல்லை. இந்த கொரோனா காலத்துல மிகவும் கஷ்டப்பட்டேன். இனி வேற வழியே இல்ல. வேலைக்கு வந்துதான் ஆகனும். எவ்வளவு நாள் உதவியை மட்டும் எதிர்பார்க்க முடியும். வேற வேலையும் எனக்கு கிடையாது. அதான், யாராவது வருவாங்க அப்டின்ற நம்பிக்கையில் கடையும் திறந்துட்டேன். ஆனால், ஒருநாளை ஓட்டவே ரொம்ப கஷ்டமாதான் இருக்கு” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Also Read: 'சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!'- இர்பான் பதான் அறிவிப்பு #NowAtVikatan



source https://sports.vikatan.com/cricket/cricketer-irfan-pathan-helps-chepauk-cobbler

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக