கிழக்கு ஐரோப்பா நாடுகளில் ஒன்று பெலாரஸ். இங்கு சுமார் 9 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் வாழ்கின்றனர். உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளதைப் போலவே பெலாரஸிலும் சுமார் 67,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 548 ஆக உள்ளது. கொரோனாவை பரவலைத் தடுக்க உலக நாடுகள் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கும்போது, அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் தன் நாட்டின் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காமலிருந்தார் பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ.
எல்லைகள் மூடப்படவில்லை, ஊரடங்கு இல்லை, மக்கள் முகக் கவசங்கள் அணிய தேவையில்லை, சமூக இடைவெளி போன்ற எதுவும் தேவையில்லை எனக் கூறிய அதிபர், ஊரடங்கு விதித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி மக்களை சுதந்திரமாக இருக்க அறிவுறுத்தினார். மேலும், மக்கள் ஒருவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதற்கு வீட்டு மருந்து எடுத்துக்கொண்டாலே போதும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அதிபர் அலெக்ஸாண்டருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. அதிலிருந்து குணமான பிறகு, நேற்று முன்தினம் தன் நாட்டில் நடந்த ஒரு ராணுவ முகாமில் கலந்துகொண்டார்.
Also Read: கொரோனா: `அதிக உயரம்; புற ஊதா கதிர்கள்’ - லடாக்கில் குறைந்த வைரஸ் பரவலுக்கு என்ன காரணம்?
அப்போது பேசிய அவர், ``மிகவும் தாமதமாகப் பேசுவதற்கு மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு கொரோனா பாசிட்டிவ். ஆனால், அதற்காக நான் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை. மருத்துவர்கள் எனக்கு நேற்று செய்த சோதனையில் அறிகுறி இல்லாத வைரஸ் எனத் தெரிவித்துள்ளனர். நான் முன்னதாக சொன்னது போலவே நம் மக்களில் 97% பேருக்கு வைரஸுக்கான அறிகுறி இல்லாமலே பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அறிகுறியற்றவர்களின் குழுவில் என்னையும் சேர்த்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வைரஸுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும். இது ஒரு மனநோய் அவ்வளவுதான். நாட்டு மக்கள் அனைவரும் வோட்கா குடிக்க வேண்டும். அதுதான் கொரோனாவை அழிக்கும்” எனப் பேசியுள்ளார்.
அதிபர் அலெக்ஸாண்டர் கொரோனாவுக்கு எதிராக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும், உலகில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த மார்ச் மாதம், இவர் பல அரசாங்க கூட்டங்களில் கலந்துகொண்டார். அதேபோல் தன் விடுமுறை நாள்களில் ஹாக்கி விளையாடியதற்காகவும் விமர்சிக்கப்பட்டார்.
Also Read: கொரோனா : `இது முதல் அலைதான்; இன்னும் பெரிதாக வரப்போகிறது!’ - WHO எச்சரிக்கை
source https://www.vikatan.com/news/international/coronavirus-is-mass-psychosis-belarus-president-has-said
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக